
அரியலூர் மாணவி லாவண்யா குடும்பத்துக்கு ரூ.2 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சிறுமியின் குடும்பத்துக்கு 2 கோடி பாஜக நிதியுதவி. விடுதி காப்பாளரின் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்ட சிறுமி லாவண்யாவின் குடும்பத்திற்கு பாஜக சார்பில் 2 கோடி நிதி உதவி செய்ய இருக்கிறோம். எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வு அல்ல – பாஜக தலைவர் அண்ணாமலை” என்று இருந்தது.
இந்த பதிவை Jain Shaji என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 24ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை தமிழ்நாடு பா.ஜ.க கையில் எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடி வருகிறது. இந்த சூழலில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்துக்கு ரூ.2 கோடி வழங்கப்படும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் உள்ளது போன்று எந்த ஒரு அறிவிப்பையும் அண்ணாமலை வெளியிட்டதாக நமக்கு தகவல் கிடைக்கவில்லை. எந்த ஒரு செய்தியும் வெளியாகாத சூழலில் இந்த நியூஸ் கார்டை பலரும் ஷேர் செய்து வருவது ஆச்சரியத்தை அளித்தது. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் உள்ள ஃபாண்ட், வடிவமைப்பும் வழக்கமான தந்தி டிவி நியூஸ் கார்டுடன் ஒத்துப்போகவில்லை.
எனவே, தந்தி டிவி ஜனவரி 23ம் தேதி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில் அண்ணாமலை இப்படி அறிவித்ததாக எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. எனவே, இது குறித்து தந்தி டிவி-யில் கேட்ட போது, போலியானது என்று உறுதி செய்தனர்.
அதே நேரத்தில் தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தார்.
இதன் மூலம் அரியலூர் மாணவியின் குடும்பத்துக்கு தமிழ்நாடு பாஜக சார்பில் ரூ.2 கோடி வழங்கப்படும் என்று அண்ணாமலை கூறியதாக பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.
முடிவு:
அரியலூர் மாணவி குடும்பத்துக்கு ரூ.2 கோடி வழங்கப்படும் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:அரியலூர் மாணவி குடும்பத்துக்கு ரூ.2 கோடி வழங்குவதாக அறிவித்ததா பாஜக?
Fact Check By: Chendur PandianResult: False
