FACT CHECK: யோகி ஆதித்யநாத் பாலியல் விவகாரத்தில் சிக்கியதாகக் கூறி பகிரப்படும் வதந்தி!

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

உத்திரப்பிரதேச முதல்வர் பெண் ஒருவருடன் இருப்பது போன்று படங்கள் சமூக ஊடகங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ஃபேஸ்புக்கில் ஒருவர் வெளியிட்ட பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதில், “இவர் தான் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதிதயநாத.நாட்டின் நலத்திற்காக,தேச வளர்ச்சிற்காக எவ்வளவு தீவிரமாக ஆராய்ச்சி செய்கிறார் என்பதை பாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

நிலைத் தகவலில், “இப்பேர்ப்பட்ட நாதாரிகள் இருக்கும் வரை இந்தியா என்னடா ஒபேரா போகிறது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை மக்தும்மைதீன் பீர்இஸ்மாயில் என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2021 ஏப்ரல் 3ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் அதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஸ்கிரீன்ஷாட்டை பலரும் ஷேர் செய்து வரும் நிலையில், உண்மையான பதிவை தேடினோம். Rthiyagarajan Rthiya என்பவர் இதை முதலில் வெளியிட்டிருந்ததால் அவருடைய பக்கத்தை தேடி, அதில் இந்த பதிவு உள்ளதா என்று பார்த்தோம். அவர் அதை அகற்றியிருந்தார். அதனால், ஸ்கிரீன்ஷாட்டை அடிப்படையாகக் கொண்டு ஆய்வைத் தொடங்கினோம்.

புகைப்படத்தில் இருப்பவர் அடையாளம் சரியாகத் தெரியவில்லை. மேலும், மெல்லிதான தேகம். யோகி ஆதித்யநாத் உடல் அமைப்புடன் துளியும் தொடர்பில்லாத நபராகவே படத்தில் உள்ளவர் இருந்தார். இந்த படம் எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்று தேடினோம்.

இந்த பதிவில் உள்ள புகைப்படங்களை மட்டும் தனியாக எடுத்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது புகைப்படத்தில் உள்ளவர்களைப் போன்று காட்சி தரும் சில யூடியூப் வீடியோக்கள் கிடைத்தன. அந்த வீடியோவைப் பார்த்தபோது ஏதோ ஒரு காமெடி வீடியோ என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்தியில் இருந்ததால் என்ன பேசினார்கள் என்பது புரியவில்லை. புகைப்படத்தில் உள்ள காட்சிகள் எல்லாம் அந்த வீடியோவில் இருந்தது. அந்த நபர் யோகி ஆதித்யநாத் இல்லை.

அசல் பதிவைக் காண: YouTube 1 I YouTube 2

தொடர்ந்து தேடியபோது இந்த வீடியோ காட்சிகளை எடுத்து யோகி ஆதித்யநாத் என்று குறிப்பிட்டு 2017ம் ஆண்டில் இருந்தே வதந்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தொடர்பான செய்திகள் கிடைத்தன.

கர்நாடகாவில் சமூக ஆர்வலர் ஒருவர் இந்த புகைப்படங்களை 2017ம் ஆண்டு தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்து, அகற்றியதும், அதை வைத்து பா.ஜ.க-வினர் அவர் மீது போலீசில் புகார் அளித்ததாகவும் செய்திகள் கிடைத்தன.

அசல் பதிவைக் காண: ujjawalprabhat.com I Archive 1 I wahgazab.com I Archive 2

இதன் அடிப்படையில் இந்த படத்தில் இருப்பது யோகி ஆதித்யநாத் இல்லை என்பதும், இது இந்தி காமெடி வீடியோ ஒன்றில் வந்த காட்சிகள் என்பதும் உறுதியாகிறது. இதன் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பெண் ஒருவருடன் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் நெருக்கமாக இருந்தார் என்று பரவும் ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:யோகி ஆதித்யநாத் பாலியல் விவகாரத்தில் சிக்கியதாகக் கூறி பகிரப்படும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •