அரியலூர் மாணவி உடலுக்கு உதயநிதி அஞ்சலி செலுத்தாது ஏமாற்றம் அளிக்கிறது என்று பழனிமாணிக்கம் கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

மாணவி லாவண்யா உடலுக்கு உதயநிதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தாது ஏமாற்றத்தை அளிக்கிறது என்று தி.மு.க எம்.பி பழனிமாணிக்கம் கூறியதாகவும், மாணவியின் குடும்பத்துக்கு ரூ.2 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாகவும் சில நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பழனிமாணிக்கம் ஆவேசம். மதமாற்றக் கொடுமையால் தீவிர திமுக தொண்டரின் மகளான லாவண்யா தற்கொலை செய்திருப்பது மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதே போன்று உதயநிதி அவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. திமுக எம்பி பழனிமாணிக்கம்” என்று இருந்தது.

இந்த பதிவை நாட்டுமாடு – The Naatumaadu 2.0 என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 ஜனவரி 24ம் தேதி பதிவிட்டுள்ளது. இதைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்புகள் மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் தான் காரணம் என்று குற்றம்சாட்டி வருகின்றன. இந்த சூழலில் மாணவியின் மரணத்தை வைத்து சில போலியான நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

தி.மு.க எம்.பி-யும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பழனிமாணிக்கம் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்தது போலவும், மாணவியின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தாது ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியதாகவும் ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. பார்க்க தந்தி டிவி வெளியிட்டது போன்று அழகாக எடிட் செய்துள்ளனர். ஆனால் தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டில் இருப்பது போன்று வடிவமைப்பு, தமிழ் ஃபாண்ட் இதில் இல்லை. எனவே, உண்மையில் இதை தந்தி டிவி வெளியிட்டதா என்று ஆய்வு செய்தோம்.

தந்தி டிவி-யின் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்ட போது, ஜனவரி 23ம் தேதி பழனிமாணிக்கம் புகைப்படத்துடன் நியூஸ் கார்டு வெளியாகவில்லை. அதே நேரத்தில் ஜனவரி 24ம் தேதி தந்தி டிவி வெளியிட்டிருந்த மறுப்பு பதிவு நமக்குக் கிடைத்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு மீது “FAKE NEWS” என்று முத்திரை குத்தி அதை பகிர்ந்துள்ளது. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதியாகிறது.

பழனிமாணிக்கம் இது போன்று ஏதேனும் கருத்து தெரிவித்துள்ளாரா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே, அவருடைய ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை FAKE  என்று குறிப்பிட்டு அவர் பதிவிட்டிருந்தார். இதன் மூலம் பழனிமாணிக்கமும் இதை மறுத்துள்ளார்.

Archive

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவியின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தாதது வருத்தம் அளிக்கிறது என்று தி.மு.க எம்.பி பழனிமாணிக்கம் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அரியலூர் மாணவி உடலுக்கு உதயநிதி அஞ்சலி செலுத்தாது ஏமாற்றம் அளிக்கிறது என்று பழனிமாணிக்கம் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False