
கே.டி.ராகவன் காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த நிர்வாகி கே.டி.ராகவன் காலில் விழுந்து ஆசி பெறுவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#அண்ணாமலை தமிழக பிஜேபி தலைவராக பதவிஏற்கும்போது…
பிஜேபி தலைவர் கேடி ராகவன்காலில் விழுந்து வணங்குகிறார்.
ஒரே மாதத்தில் கேடி ராகவனை அரசியலில் இருந்து அண்ணாமலை தன்னுடைய சித்து விளையாட்டால் கேடி ராகவன் அரசியல் வாழ்க்கையை முடித்து வைத்து விட்டார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற போது கே.டி.ராகவனின் காலில் விழுந்து ஆசி பெற்றுவிட்டு பின்னர் அவரை ஓரங்கட்டினார் என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். கே.டி.ராகவன் நிற்கும் நிலை, அண்ணாமலை தரையில் விழுந்து வணங்கும் நிலையைப் பார்க்கும் போது புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது தெரிகிறது. இதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.
இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, சாமியார் ஒருவர் காலில் அண்ணாமலை விழும் புகைப்படம் ஒன்று நமக்குக் கிடைத்தது. அதை அண்ணாமலை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2024 மார்ச் 25ம் தேதி பதிவிட்டிருந்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றபோது எடுத்த புகைப்படம் என்று அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்.

2024ம் ஆண்டு சிரவை ஆதீனத்தை அண்ணாமலை சந்தித்தபோது அவர் காலில் விழுந்து ஆசி பெற்ற புகைப்படத்தை எடிட் செய்து, தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற போது கே.டி.ராகவன் காலில் விழுந்து ஆசி பெற்றார் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கே.டி.ராகவன் காலில் விழுந்து அண்ணாமலை ஆசி பெற்றதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
FacebookI X PostI Google News ChannelI Instagram


