
பெட்ரோல், டீசல், கேஸ் விலையைக் குறைக்காவிட்டால் தீக்குளித்து சாவேன் என்று அண்ணாமலை சபதம் ஏற்றதாக ஒரு போலியான நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியுள்ளது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய “தமிழ் கேள்வி” என்ற இணைய ஊடகத்தின் பெயரில் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்காவிட்டால் நான் தீக்குளித்து சாவுவேன் அண்ணாமலை சபதம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Sridhar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 மார்ச் 26ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சர்வதேச கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஐந்து மாநில தேர்தலையொட்டி நூறு நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. தற்போது தேர்தல் முடிந்துவிட்ட சூழலில் மீண்டும் தினசரி பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்த நிலையில் பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
டாஸ்மாக் மது விலை உயர்வுக்கு எல்லாம் எதிராகக் குரல் கொடுத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி வாய் திறக்காதது ஏன் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் அவர் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று சபதம் எடுத்தார் என்று கிண்டல் செய்யும் வகையில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் கேள்விகள் செந்தில்வேலுக்கு எதிராக தொடர்ந்து பாஜக-வினர் பொய்யான நியூஸ் கார்டுகளை பகிர்ந்து வருகின்றனர். பதிலுக்கு அவர் தரப்பிலிருந்து இந்த நியூஸ் கார்டு வெளியானதா என்று அறிய செந்தில்வேலின் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அப்போது இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு அவர் பதிவிட்டிருந்தார்.
அதில், “உ.பி தேர்தலில் பாஜக வென்றால் நான் சாவேன் எனச் சொன்னதாக சங்கிகள் வதந்தி பரப்பினார்கள். இப்போது திரு. அண்ணாமலை படத்துடன் இப்படி ஒரு போலி கார்டு பரவுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்காக அண்ணாமலையை சாகச் சொல்வது நாகரீகமன்று. நீ எப்போது சாகப்போகிறாய் என்று என்னை சங்கிகள் கேட்டது போல் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்காக நீங்கள் எல்லாம் எப்போது சாகப்போகிறீர்கள் என்று ஒருபோதும் நான் கேட்க மாட்டேன். தயவு செய்து அதுபோல் எதுவும் செய்து விடாதீர்கள்.இணையத்தில் பரவும் இந்த கார்டு போலியானது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலம் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால் தீக்குளித்து சாவேன் என்று அண்ணாமலை சபதம் எடுத்தார் என்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று அண்ணாமலை கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…