ஊது பாவை என்ற பெயரில் மூலிகை உள்ளதா?
அழிவின் விளிம்பில் இருக்கும் ஊது பாவை என்ற மூலிகை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
செடி ஒன்று புகை வெளியேற்றுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "அழிவின் விளிம்பில் இருக்கும் ஊது பாவை வகையைச் சேர்ந்த மூலிகை இது தன் இனவிருத்திக்காக தன் மகரந்தத்தை இப்படி ஊதித் தள்ளி கொண்டே இருக்கும் அடர்ந்த மழைப்பொழிவு காடுகளில் மட்டுமே வளரும் இந்த மூலிகைகள் இயற்கை தந்த பேரதிசயம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Thayaparan Sabaretnam என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சுக்கு, மிளகு, திப்பிலியைத் தாண்டி சிறுபீளை, பூனைக்காலி, கொடிவேலி என்று நூற்றுக்கணக்கான மூலிகைகள் தமிழகத்தின் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதை நாம் அறிவோம். ஆனால், ஊது பாவை என்று மூலிகை பற்றிக் கேள்விப்பட்டது இல்லை. அதுவும் மகரந்தத்தை ஊதித் தள்ளும் செடி என்றால் அது பற்றி பள்ளிப் பாடகப் புத்தகத்திலேயே வந்திருக்கும். எனவே, மூலிகைகள் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் பெல்சின் என்பவரிடம் கேட்டோம். அப்படி எந்த ஒரு மூலிகையும் நான் கேள்வி பட்டது இல்லை. எனக்கே தெரியாமல் அப்படி ஏதும் இருக்கிறதா என்று மூத்த சித்த மருத்துவ நண்பர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன் என்றார். பின்னர் நம்மை தொடர்புகொண்ட அவர், அப்படி எந்த ஒரு மூலிகையும் இல்லை என்று தெரிவித்தனர்.
அப்படி என்றால் ஊது பாவை என்று பரவும் வீடியோ என்ன என்ற கேள்வி எழுந்தது. டிஜிட்டல் கலைஞர்கள் ஏற்படுத்திய வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை வீடியோ ஏற்படுத்தவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோவில் Luke_Penry என்று எழுதப்பட்டிருந்தது. அதை அடிப்படையாக வைத்து முதலில் தேடினோம். Luke_Penry என்று கூகுளில் தேடிய போது அது ஒரு ட்விட்டர் அக்கவுணட்டை காண்பித்தது. அதைத் திறந்து பார்த்த போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நிறைய செடிகள் வீடியோ இருந்தது. சுயவிவர குறிப்பில் செடிகள் தொடர்பாக 3டி மாடல்களை உருவாக்குபவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அவர் வெளியிட்ட பதிவுகளை தேடிப் பார்த்தோம். அப்போது தன்னுடைய படைப்பு தவறாக பகிரப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டு 2021 செப்டம்பர் 29ம் தேதி பதிவிட்டிருப்பது தெரிந்தது. இதன் மூலம் ஊது பாவை என்று அரிய மூலிகை உள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.
உண்மைப் பதிவைக் காண: foundation.app I Archive
தொடர்ந்து தேடுதல் முடிவுகளைப் பார்க்கையில், foundation.app என்ற இணையதளத்தில் இந்த வீடியோவை அதன் உரிமையாளர் பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது. இந்த வீடியோ தொடர்பான குறிப்பில், "இந்த படைப்பு இந்தியாவில் மிகப்பெரிய அளவில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஊது பாவை என்ற பெயரில் மூலிகை உள்ளது என்றும், மிகவும் அடர்ந்த மழைக்காடுகளில் வளரும் இந்த மூலிகை, அழியும் நிலையில் உள்ளது என்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. இந்திய வெளியுறவு பணிகள் (IFS) அதிகாரிகள் கூட இந்த வீடியோவை அரிய மூலிகை என்று பகிர்ந்திருந்தனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் 3டி நிபுணர் உருவாக்கிய வீடியோவை அரிய மூலிகை செடி என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் ஊது பாவை என்ற மூலிகை என்று பகிரப்படும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஊது பாவை என்ற மூலிகை என்று பகிரப்படும் வீடியோ உண்மையானது இல்லை என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…