அருணாச்சல பிரதேசத்தில் மூங்கிலில் கட்டப்பட்ட விமானநிலையமா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

மூங்கில் உள் அலங்காரம் செய்யப்பட்ட விமானநிலையம் அருணாசலப்பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பிரம்மாண்ட கட்டிடம் ஒன்றின் உள்அலங்கார வடிவமைப்பை அங்கு பணி புரியும் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை குமுதம் ஃபேஸ்புக் பக்கம் 2022 நவம்பர் 9ம் தேதி பகிர்ந்துள்ளது. நிலைத் தகவலில், “ஃபுல்லா மூங்கில்ல விமான நிலையம் (இடம்: அருணாச்சல பிரதேசம்)” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. குமுதம் மட்டுமின்றி பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பெங்களூரு விமான நிலையத்தின் இரண்டாம் முனையம் நவம்பர் 11, 2022 அன்று திறக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த முணையத்தை திறந்து வைக்கிறார். இரண்டாம் முனையத்தின் அழகான தோற்றம் என்று பிரதமர் மோடி நவம்பர் 9, 2022 அன்று ட்வீட் செய்திருந்தார். மேலும், செய்தி ஊடகங்கள் பலவும் இது தொடர்பாக வீடியோ வெளியிட்டிருந்தன.

Archive

உண்மை இப்படி இருக்க, குமுதம் இதழின் ஃபேஸ்புக் பக்கம் உள்ளிட்ட பல ஃபேஸ்புக் பயனாளர்கள் இந்த விமானநிலையம் அருணாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளனர். எனவே, இந்த விமான நிலையம் அருணாச்சல பிரதேசத்தில் இல்லை, பெங்களூருவில் உள்ளது என்பதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொண்டோம்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள உள் அலங்காரம் சில பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட் புகைப்படங்களில் காண முடிந்தது. வேறு ஏதேனும் வீடியோ கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். அப்போது கர்நாடக மாநில அமைச்சர் டாக்டர் சுதாகர் விமான நிலையத்தின் வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதுவும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற காட்சியும் ஒன்றாக இருந்தது. இதன் மூலம் இந்த வீடியோ பெங்களூரு விமான நிலையத்தைச் சேர்ந்தது என்பது உறுதியானது.

Archive

ஒரு வேளை அருணாச்சல பிரதேசத்தின் விமான நிலையமும் மூங்கிலால் அலங்கரிக்கப்பட்டுள்ளதா என்று அறிய அந்த விமான நிலையத்தின் புகைப்படங்களைத் தேடினோம். அப்போது அந்த விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான படங்கள் நமக்குக் கிடைத்தன. அதற்கும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுக்கும் துளி கூட தொடர்பில்லை.

Archive

அதே நேரத்தில் விமான நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் மூங்கில் கொண்டு வளைவு அமைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. முழுக்க முழுக்க மூங்கில் கொண்டு அழகாக அமைக்கப்பட்ட வளைவு பற்றிய வீடியோக்கள் யூடியூபில் நமக்கு கிடைத்தன.

இதன் மூலம், பெங்களூரு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் வீடியோவை, தவறுதலாக அருணாச்சல பிரதேசத்தின் புதிய விமான நிலையத்தின் தோற்றம் என்று பகிர்ந்திருப்பது உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பெங்களூரு விமானநிலையத்தின் வீடியோவை அருணாச்சலபிரதேச மாநிலம் இட்டாநகர் விமானநிலையம் என்று தவறாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அருணாச்சல பிரதேசத்தில் மூங்கிலில் கட்டப்பட்ட விமானநிலையமா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False