சீமான் கையாலேயே விருது வாங்கி, அவரையே அவமரியாதையாக பேசிய தனியார் தொலைக்காட்சி நெறியாளர் ஆவுடையப்பன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில், யூடியூப் மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் ஆவுடையப்பன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைப் பற்றி பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. அதில், சத்துணவு வழங்குவதில் நிறை குறை இருக்கலாம். குறைகள் சரி செய்யப்பட வேண்டும். அதற்காக அந்த திட்டத்தையே மோசம் என்று சொல்வதன் மூலமாக அனைவரின் வயிரையும் பட்டினி போட பார்க்கின்றீர்கள். சத்துணவு - காலை உணவுத் திட்டம் வேண்டாம் என்று யாராவது சொன்னால் அவர்கள் அயோக்கியர்கள் " என்று கூறுகிறார்.

நிலைத் தகவலில், "சீமான் கையாலேயே விருது வாங்கி சீமானை செருப்பால் அடிக்காத குறையா பேசிய செய்தியாளர் ஆவுடையப்பன் அவர்கள் இப்படி ஜால்ரா அடிக்காம மனசுல பட்டத பேசுங்கடா" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

யூடியூப் சேனல் மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி நெறியாளராக பணியாற்றி வரும் ஆவுடையப்பன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் விருது பெற்றுவிட்டு, அதே மேடையிலேயே சீமானை கடுமையாக விமர்சித்தது போன்று வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு சீமான் சத்துணவு பற்றி தனியாக பேசிய ஒரு வீடியோவையும் ஆவுடையப்பன் தனியார் டிவி ஒன்றில் பேசிய பேச்சையும் ஒன்று சேர்த்து சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர். தற்போது, ஆவுடையப்பன் பேசிய வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் எடுத்து புதிய வீடியோவை பகிர்ந்து வரவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: zee5.com I Archive

முதலில் ஆவுடையப்பன் விருது வாங்கிய விழாவின் வீடியோவை தேடி எடுத்தோம். வீடியோவில், கோல்டன் மூமென்ட்ஸ் அவார்ட்ஸ் 2024 (Golden Moments Award 2024) என்று பின்னணியில் பார்க்க முடிந்தது.

எனவே, ஜீ டிவி-யில் வெளியான கோல்டன் மூவ்மென்ட்ஸ் அவார்ட்ஸ் விழா வீடியோவை தேடி எடுத்தோம். 2024 மே 1ம் தேதி வெளியான வீடியோ நமக்குக் கிடைத்தது. அதை பார்த்தோம். வீடியோவின் 1 மணி நேரம் 18வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காட்சி வந்தது. அதில், சீமானை விமர்சித்து ஆவுடையப்பன் பேசிய ஆடியோ இல்லை. அதற்கு பதில், "நான் மேடைக்காக சொல்லல. அண்ணன் சீமான் கையிலிருந்து விருது வாங்கியது மகிழ்ச்சி, உங்க கையில் இருந்து வாங்கியதில் கூடுதல் சிறப்பாகிடுச்சி" என்று பேசி, தமிழா தமிழா நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று அழைப்புவிடுத்த ஆடியோதான் இருந்தது.

Archive

அடுத்ததாக சத்துணவு தொடர்பாக தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஆவுடையப்பன் பேசிய வீடியோவை தேடி எடுத்தோம். மே 27ம் தேதி இந்த வீடியோவை ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் சத்துணவுத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் அயோக்கியர்கள் என்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற ஆடியோ இருந்தது. இதன் அடிப்படையில் ஜீ தமிழில் வெளியான வீடியோவையும் தேடி எடுத்தோம். 2024 மே 26ம் தேதி ZEE தமிழ் டிவி-யில் வெளியான தமிழா தமிழா சீசன் 3ன் 44வது எபிசோடில் 34.50வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் ஆவுடையப்பன் பேசிய ஆடியோவை கேட்க முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: zee5.com

இந்த வீடியோவில் உள்ள ஆடியோவை மட்டும் எடுத்து, கோல்டன் மூமென்ட்ஸ் அவர்ட்ஸ் விழா வீடியோவுடன் சேர்த்து தவறான வீடியோவை உருவாக்கி பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ எடிட் செய்யப்பட்டது, உண்மையானது இல்லை, சீமானை நேரடியாக ஆவுடையப்பன் விமர்சிக்கவில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சத்துணவு திட்டத்தை விமர்சித்து பேசிய சீமானை மேடையில் வைத்து விமர்சித்த டிவி நெறியாளர் ஆவுடையப்பன் என்று பரவும் வீடியோவில் ஆடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சீமான் கையால் விருது வாங்கி அவரையே விமர்சித்த ஆவுடையப்பன் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False