FACT CHECK: ராஜஸ்தானில் மாடுகளுக்கு பகவத்கீதை படித்துக்காட்ட பூசாரிகளை நியமித்ததா பா.ஜ.க அரசு? – தொடரும் வதந்தி

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

ராஜஸ்தானில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சி அரசு 211 பசுக்களுக்கு பகவத் கீதையை படித்துக்காட்ட 211 பூசாரிகளை நியமித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பசு மாடுகள் அருகே, காவி துண்டு, உடை அணிந்த சிலர் புத்தகம் ஒன்றை படிக்கும் புகைப்படத்தில் போட்டோஷாப் முறையில் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அதில், “ராஜஸ்தானில் 211 மாடுகளுக்கு பகவத் கீதை படித்துக்காட்டும் 211 பூசாரிகள். உபயம் – ராஜஸ்தான் பிஜேபி அரசு. உலகத்துல இருக்குற மொத்த அறிவாளியும் வடநாட்டுல தான் இருக்கானுங்க” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Michael என்பவர் 2021 ஜூன் 3ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த பதிவு 2021 ஜூனில் பதிவிடப்பட்டுள்ளது. எனவே, முன்பு இருந்த பாரதிய ஜனதா கட்சி அரசு என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். ஒருவேளை பழைய செய்தியை தற்போது வெளியிட்டுள்ளார்களா என்று தெரியவில்லை.

உண்மையில் ராஜஸ்தானில் ஆட்சி செய்த வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க அரசு பசுக்களுக்கு பகவத்கீதை படித்துக் காட்ட 211 பூசாரிகளை நியமித்ததா, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

ராஜஸ்தான், 211 பசுக்கள், பகவத் கீதை என பல கீ வார்த்தைகளை டைப் செய்து தேடினோம். அப்போது, ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் உள்ள ஃபத்தேபூர் என்ற இடத்தில் 2017ம் ஆண்டு இந்த நிகழ்வு நடந்ததாக செய்தி மற்றும் வீடியோ கிடைத்தது.

அசல் பதிவைக் காண: aajtak.in I Archive 1 I firstpost.com I Archive 2 I bhaskar.com I Archive 3

ஃபர்ஸ்ட் போஸ்ட் வெளியிட்டிருந்த இந்தி செய்தியை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதில் வியாஸ் பீடம் சார்பில் 211 பசுக்களுக்கு 211 பிராமணர்கள் பகவத் கீதை படிக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆஜ்தக் இந்தி இது தொடர்பான வீடியோ செய்தியை வெளியிட்டிருந்தது. இந்த வீடியோவை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவைச் சேர்ந்தவர்களிடம் அளித்து அதில் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டோம்.

அவர்கள், இது புத்தகிரி பீடம் சார்பில் நடத்தப்பட்ட புத்தகிரி கோமஹிமா மகோத்சவ் நிகழ்ச்சியாகும். இதில் பசுக்களுக்கு பகவத் கீதை வாசித்துக் காட்டப்பட்டது” என்றனர். இதை ராஜஸ்தான் அரசு நடத்தியதா என்று கேட்டபோது, “இல்லை. இதை புத்தகிரி மண்டி என்ற இந்து மடம் நடத்தியது” என்றனர்.

ராஜஸ்தானில் தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சி இல்லை. 2018 டிசம்பர் 17ம் தேதி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவிக்கு வந்துள்ளது.

பசுக்களுக்கு பகவத் கீதை வாசித்துக்காட்டும் நிகழ்வு 2017ம் ஆண்டு ராஜஸ்தானில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்த போது நிகழ்ந்துள்ளது. 

ஆனால், இதை அரசு நடத்தவில்லை. இந்து அமைப்புகள் நடத்தியதாக செய்தி கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் ராஜஸ்தானில் பா.ஜ.க அரசு 211 மாடுகளுக்கு பகவத் கீதை படித்துக்காட்ட 211 பூசாரிகளை நியமித்தது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2017ம் ஆண்டு ராஜஸ்தானில் இந்து அமைப்பு நடத்திய பசுக்களுக்கு பகவத் கீதை வாசித்துக்காட்டும் நிகழ்வை அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு நடத்தியது என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:ராஜஸ்தானில் மாடுகளுக்கு பகவத்கீதை படித்துக்காட்ட பூசாரிகளை நியமித்ததா பா.ஜ.க அரசு? – தொடரும் வதந்தி

Fact Check By: Chendur Pandian 

Result: False