
தமிழ்நாடு பா.ஜ.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தக்ஷிண பிரதேசம் என தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவோம் என்று கூறியதாகவும், அப்போது அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அமைதி காத்தார் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “பொங்கல் பரிசு பைகளில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் என குறிப்பிடுவதா? – ஓ.பி.எஸ்” என்று இருந்தது. ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படத்துக்கு கீழே திரைப்பட காட்சி ஒன்று சேர்க்கப்பட்டிருந்தது. அதில், “பாஜக தேர்தல் அறிக்கையில தமிழ்நாடு பெயரையே தஷ்ணபிரதேஷ் ன்னு மாத்துவோம்ன்னு சொன்னப்ப கூட்டணியில உக்காந்து மிக்ஸர் சாப்பிட்டுக்கிட்டு தானே இருந்தே!?” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பதிவை அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 டிசம்பர் 2ம் வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தி.மு.க ஆட்சியின் போது சித்திரை 1க்கு பதில் தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தி.மு.க ஆட்சி போனதும், முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, தமிழ் புத்தாண்டை சித்திரை 1ம் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த சூழலில் தமிழ் புத்தாண்டை மீண்டும் தை 1ம் தேதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. மாற்றக் கூடாது என்று எதிர்ப்பும் உள்ளது.
இந்த சூழலில் தமிழ்நாடு அரசு 2022 பொங்கல் திருவிழாவையொட்டி பொது மக்களுக்கு வழங்கும் இலவச பொங்கல் பொருட்கள் பையில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என்று குறிப்பிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு மீண்டும் தமிழ் புத்தாண்டை தை மாதம் 1ம் தேதிக்கு மாற்றப்போகிறது என்றும், அப்படி செய்யக் கூடாது என்றும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.
இந்த சூழலில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடந்த போது தமிழ்நாட்டின் பெயரை தக்ஷிண பிரதேஷ் என்று மாற்றுவோம் என்று பா.ஜ.க உறுதி அளித்ததாகவும், அப்போது அமைதியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், இப்போது தமிழ் புத்தாண்டை மாற்றுவதற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது சரியா என்ற வகையில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் பெயரை தஷ்ண பிரதேஷ் என மாற்றுவோம் என தமிழ்நாடு பா.ஜ.க உறுதி அளித்ததா என்று பார்த்தோம்.

அசல் பதிவைக் காண: Vikatan.comI Archive 1 I Archive I Archive 2
முதலில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தேடி எடுத்தோம். ஆனந்த விகடன் இணையதளத்தில் பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை பி.டி.எஃப் வடிவில் நமக்கு கிடைத்தது. அட்டை முதல் அட்டை வரை மொத்தம் 32 பக்கங்கள் இருந்தன. அதில் எந்த இடத்திலும் தமிழ்நாட்டின் பெயரை தக்ஷிண பிரதேஷ் என்று மாற்றுவோம் என்று அவர்கள் குறிப்பிடவில்லை.
2021 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் இந்த வதந்தி வைரலாக பரவியது. அப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் இது தொடர்பாக கட்டுரை வெளியாகி இருந்தது. தமிழ்நாடு பா.ஜ.க-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல் குமாரிடம் அப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் தரப்பில் இருந்து தொடர்புகொண்டு கேட்கப்பட்டது. அதற்கு அவர், “தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதாக, தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை; சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் இப்படியான தகவலை உருவாக்கி, பாஜகவிற்கு எதிராக பரப்பி வருகின்றனர்” என்று கூறியிருந்தார். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தமிழ்நாட்டின் பெயரை தக்ஷிண பிரதேஷ் என்று மாற்றுவதாகத் தமிழ்நாடு பா.ஜ.க தேர்தல் வாக்குறுதி அளித்தது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழ்நாட்டின் பெயரை தக்ஷிண பிரதேஷ் என்று மாற்றுவோம் என்று தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க கூறியதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தமிழ்நாட்டின் பெயரை தக்ஷிண பிரதேஷ் என மாற்றுவோம் என பா.ஜ.க கூறியதாக மீண்டும் பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
