
‘’உயர் சாதி என்பதால் அவர்கள் மீது என்கவுன்டர் பாய்ந்தது என்று சொன்ன எச்.ராஜா,’’ எனும் தலைப்பில் பகிரப்பட்டிருந்த ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை டிசம்பர் 7ம் தேதி பகிர்ந்துள்ளது. இதில், வடிவேலுவின் நகைச்சுவை காட்சி ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’உயர்ந்த சமூகம் என்பதால்தான் அவர்கள் மீது என்கவுன்டர் பாய்ந்தது – எச்.ராஜா,’’ என்றும், அதற்கு கீழே மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளிலும் விமர்சித்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட பதிவை பார்க்கும்போதே, இது வேண்டுமென்றே எச்.ராஜாவை விமர்சிக்கும் வகையில் பகிரப்பட்ட ஒன்று என தெளிவாக தெரியவருகிறது. நாட்டில் எது நடந்தாலும் எச்.ராஜா, பா.ரஞ்சித், தமிழக அமைச்சர் ஜெயக்குமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் போன்றவர்களை குறிவைத்து, அவர்கள் சொல்லாததை சொன்னது போல சித்தரித்து, பொய்யான தகவல் பகிர்வதை பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி ஒன்றுதான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவும்.
அதிலும் குறிப்பாக, மேற்கண்ட ஐதராபாத் என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக, எச்.ராஜா மற்றும் பா.ரஞ்சித் பற்றி ஏற்கனவே சில வதந்திகள் பகிரப்பட்டிருந்தன. அவற்றை நாம் ஆய்வு செய்து, தவறு என உரிய ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறோம்.
Fact Crescendo Tamil Link 1 | Fact Crescendo Tamil Link 2 |
இன்னும் சொல்லப் போனால், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் உள்ள அதே மீம் டெம்ப்ளேட்டை பயன்படுத்தித்தான், ஏற்கனவே பா.ரஞ்சித் பற்றி ஐதராபாத் என்கவுன்டர் தொடர்பான வதந்தி ஒன்றை சில நாட்கள் முன்பு வெளியிட்டிருந்தனர். அதில், பா.ரஞ்சித், ‘’தலித் என்பதால்தான் அவர்கள் மீது என்கவுன்டர் பாய்ந்தது,’’ என்று சொல்வது போல குறிப்பிட்டிருந்தனர். அதில், தலித் என்பதை உயர்ந்த சாதி எனவும், பா.ரஞ்சித் என்றிருப்பதை எச்.ராஜா எனவும் மாற்றிவிட்டு, அதே டெம்ப்ளேட்டில் மேற்கண்ட ஃபேஸ்புக் வதந்தியை தயாரித்து பகிர்ந்துள்ளனர்.

ஆனால், இவ்விரு மீம்ஸ்களிலும் கீழே உள்ள கீழ்த்தரமான வசவு சொற்கள் மட்டும் அச்சு பிசகாமல் அப்படியே உள்ளது. இதை வைத்துப் பார்த்தால், ஒரே டெம்ப்ளேட்டில், ஒரு தரப்பு பா.ரஞ்சித்தை குறி வைக்க, மறு தரப்பு பதிலடி தரும் வகையில் எச்.ராஜாவை குறி வைத்து மீம் பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது.
ஐதராபாத் என்கவுன்டர் பற்றி எச்.ராஜா பாராட்டு மட்டுமே தெரிவித்திருந்தார். மற்றபடி அவர் எந்த விமர்சனமும் வெளியிடவில்லை. அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவு இங்கே மீண்டும் ஒருமுறை ஆதாரத்திற்காக பகிரப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், தனிப்பட்ட அரசியல் காரணத்திற்காக, வேண்டுமென்றே ஒருவரை வம்பிழுக்கும் வகையில் இப்படி தவறான மீம்ஸ் தயாரித்து பகிரப்பட்டிருப்பதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:உயர் சாதி என்பதால் என்கவுன்டர் பாய்ந்தது என்று எச்.ராஜா சொன்னாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
