
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தமிழக பா.ஜ.க தலைவர் மாட்டு வண்டியில் வந்த படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பெட்ரோல் டீசல் விலையைக் கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை மாட்டு வண்டியில் வந்து ஆர்ப்பாட்டம் செய்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Vallambakadu K A M என்பவர் 2021 ஆகஸ்ட் 6ம் தேதி பதிவிட்டுள்ளார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
மாட்டு வண்டியில் வந்த அண்ணாமலை என நியூஸ் 7 நியூஸ் கார்டின் பாதி பகுதியை மட்டும் வைத்து மற்றொரு பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், “பெட்ரோல் விலையைக் கண்டித்து அண்ணாமலை , எச். ராசா மாட்டு வண்டியில் ஊர்வலம்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Troll BJP RSS என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஆகஸ்ட் 5ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க தலைமையிலான அரசு கூறி வருகிறது. அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், கர்நாடகம் பிடிவாதம் பிடித்து வருகிறது. கர்நாடக பா.ஜ.க அரசைக் கண்டித்து, தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் தஞ்சாவூரில் ஆகஸ்ட் 5, 2021 அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

அசல் பதிவைக் காண: maalaimalar.com I Archive
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க அண்ணாமலை மாட்டு வண்டியில் வந்தார். இது தொடர்பான செய்திகள், வீடியோக்கள் ஊடகங்களில் வெளியாகின.
இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்துக்கு மாட்டு வண்டியில் வந்த அண்ணாமலை புகைப்படத்தை எடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்ற அண்ணாமலை என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் தவறானது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
முதலில் நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டை எடுத்தோம். அதில், “கர்நாடகாவை கண்டித்து தஞ்சாவூரில் நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாட்டு வண்டியில் வந்தார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது தொடர்பான செய்திகள், ட்வீட்கள் பல நமக்குக் கிடைத்தன. இவற்றின் மூலம் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழக பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தைத் தகவலை மாற்றி, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அண்ணாமலை மாட்டு வண்டி ஊர்வலம் வந்தார் என்று தவறான தகவல் பகிரப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவுகள் தவறானவை என்பது உறுதி செய்யப்படுகின்றன.
முடிவு:
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மாட்டு வண்டி ஊர்வலம் வந்தார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மாட்டு வண்டியில் வந்தாரா அண்ணாமலை?
Fact Check By: Chendur PandianResult: False
