
‘’சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடக்கம்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

ரயில்கள் பறந்து வருவது போன்ற காட்சி அடங்கிய வீடியோ ஒன்றை, வாசகர் ஒருவர் நமது சாட்போட் +91 9049053770 எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.
ஃபேஸ்புக்கிலும் இதனைப் பலர் உண்மை என நம்பி ஷேர் செய்து வருவதைக் காண முடிந்தது.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவை தொடர்ந்து நாம் பல முறை பார்த்தபோது, அதில் உள்ள ரயில் காட்சிகளின் பின்னணியில் இடம்பெற்றுள்ள இயற்கை சூழலில் ஒரு செயற்கைத்தனம் நன்றாகவே புலப்பட்டது. அத்துடன், ரயில் பெட்டிகள் பறந்து வந்து தரையிறங்கும் போது எந்த நில அதிர்வோ, புழுதியோ எதுவுமே ஏற்பட்டதற்கான சுவடுகளைக் காண முடியவில்லை.

இதுதவிர, இதில் வருவதுபோல, பாம்பு போல வளைந்து, நெளிந்து அந்தரத்தில் மிதந்து வந்து சேதாரம் இன்றி தரையிறங்கும் அளவுக்கு ரயில் சேவை உலகில் இருக்கவே வாய்ப்பில்லை. அப்படி மிதக்கவும், பறந்து செல்லவும்தான் ரோப் கார், பாராசூட், ஹெலிகாப்டர், விமான சேவை என நிறைய உள்ளன; ரயில் சேவை தொடங்கப்பட்டதே, ஒரே நேரத்தில் பலரை வேகமாகக் கொண்டு சென்று அவர்கள் விரும்பும் இடத்தில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறோம்.

குறிப்பாக, சீனாவில் பறக்கும் ரயில், புல்லட் ரயில் போன்ற சேவைகள் நிறையவே உள்ளன. அதிலும் பறக்கும் ரயில் என்றால், அதற்கென பிரத்யேக மேம்பாலம் அமைத்து அதன் வழியேதான் இயக்கப்படும். இப்படி இருக்கும் சூழலில், இந்த வீடியோவில் வருவதைப் போல மிதக்கும் ரயில் சேவை சீனாவில் தொடங்கப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை.
தற்போதைய சூழயில், சீனாவில், காந்த சக்தியில், தண்டவாளத்தை ஒட்டியபடி சக்கரங்கள் இல்லாமல் ஓடக்கூடிய ரயில் சேவை தொடங்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அதன் முன்மாதிரி கூட தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கும், இந்த வீடியோவிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.
எனவே, இந்த வீடியோவில் ஒரு காட்சியை ஃபிரேமாக பிரித்தெடுத்து, கூகுளில் பதிவேற்றி தகவல் தேடினோம். அப்போது, இது ஒரு வீடியோ கேம் தொடர்பானது என்று தெரியவந்தது.
இது உண்மையானதல்ல, கேம் வீடியோ மட்டுமே, என்று இதனை பகிர்ந்தவரே குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும், பலர் இதன் விவரம் புரியாமல் உண்மை எனக் கூறி பல்வேறு மொழிகளிலும் ஷேர் செய்து வருகின்றனர். இதுபோன்ற கேம் காட்சிகளை நாம் விரும்பினால், store.trainzportal.com சென்று உருவாக்க முடியும். இதற்கென Trains Railroad Simulator 2019 என்ற பிரிவே அந்த இணையதளத்தில் செயல்படுகிறது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கேம் வீடியோவை எடுத்து, உண்மை போலக் குறிப்பிட்டு, சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கிவிட்டதாக வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா?- முழு விவரம் இதோ!
Fact Check By: Pankaj IyerResult: False

Please remove the post. I don’t know it is Wright or wrong
Remove the post
Thank u sir thank u so much