கொல்கத்தாவைச் சேர்ந்த குயவன் செய்த சிலை என்று கூறி பரவும் வதந்தி

சமூக ஊடகம்

‘’கொல்கத்தாவைச் சேர்ந்த குயவன் செய்த சிலை மற்றும் கிராமம்,’’ என்று கூறி பகிரப்படும் வைரல் வீடியோ ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இதில், மியூசியம் அல்லது அருங்காட்சியகம் போன்ற ஒன்றின் காட்சிகளை வீடியோவாக தொகுத்துள்ளனர். இவற்றில் வரும் மனிதர்கள், விலங்குகள், வீடுகள் என அனைத்தும் மண்ணால் செய்யப்பட்டவை போல காட்சி தருகின்றன. இதனை கொல்கத்தா குயவனின் திறமை, என்று கூறி பலரும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோ பற்றி கூறப்படும் தகவல் உண்மையா என்ற சந்தேகத்தில் ஆய்வை தொடங்கினோம். முதலில், இது கொல்கத்தா மக்களின் கிராம வாழ்க்கையை பிரதிபலிப்பதாக உள்ளதா என மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நமது நண்பர்கள் சிலரிடம் வீடியோவை அனுப்பி விவரம் கேட்டோம்.

அவர்கள் இந்த வீடியோவை பார்த்துவிட்டு, இதனைப் பார்த்தால், மத்திய இந்தியாவில் வசிக்கும் கிராம மக்களின் உருவம் போல தோன்றுகிறது, எனக் குறிப்பிட்டனர்.

இதன்படி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநில மக்கள் தொடர்பானதாக இருக்கலாம் என நமக்கும் தோன்றியது. எனவே, குறிப்பிட்ட வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து கூகுளில் பதிவேற்றி தகவல் தேடினோம். 

அப்போது, இது கல்கத்தாவைச் சேர்ந்த குயவனின் திறமை, என்று கூறி சிலர் யூ டியுபில் தகவல் பகிர்ந்ததைக் கண்டோம். எனினும், இந்த யூடியுப் வீடியோக்கள், 2019ம் ஆண்டில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.

இந்த வீடியோக்களை ஒவ்வொன்றாக பார்வையிட்டதில், ஒரு உண்மை நமக்கும் தெரியவந்தது. அதாவது, Kolkata Potter செய்த கைவண்ணம் என்று கூறி யூடியுபில் தகவல் பகிர்ந்தவர்கள், ‘’நானும் மேற்கு வங்கத்தில்தான் வசிக்கிறேன். எந்த இடம் என்று சொன்னால் நேரில் செல்ல ஆவலாக உள்ளேன்,’’ என்று சிலர் பகிர்ந்த கமெண்ட்களுக்கு விநோதமான பதில் அளித்துள்ளனர்.

ஆம், கொல்கத்தா குயவர் என தலைப்பிட்டுவிட்டு, கமெண்டில், இது Siddhagiri Gramjivan Museum (#Kaneri Math) at Kaneri, Kolhapur district, Maharashtra எனக் குறிப்பிட்டுள்ளனர். எனவே, இது கொல்கத்தாவைச் சேர்ந்தது இல்லை, மகாராஷ்டிரா தொடர்பானது என்று தெரியவருகிறது. 

இதன்பேரில் நாமும் குறிப்பிட்ட இடம் பற்றி தகவல் தேடினோம். இது, மகாத்மா காந்தியின் கனவான கிராம ராஜ்யத்தை அடிப்படைக் கருவாக வைத்து, கிராம மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைக் காட்சிப்படுத்தக்கூடிய அருங்காட்சியகம் என்ற விவரம் கிடைத்தது.

Siddhagiri Gramjivan Museum Link 1 I Siddhagiri Gramjivan Museum Link 2

ஆனால், சிலர் இதனை கர்நாடகாவில் உள்ள மியூசியம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

ஒருவேளை கர்நாடகாவில் இதுபோல கிராம ஜீவன் அருங்காட்சியம் ஏதேனும் உள்ளதா என்று தேடியபோது, Mahatma Gandhi Institute of Rural Energy & Development என்ற பெயரில் ஒன்று உள்ளதாக, விவரம் கிடைத்தது.

எனினும், அது நாம் ஆய்வு செய்யும் வீடியோ காட்சிகளுடன் சற்று முரண்பட்டதாகவே இருந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமஜீவன் அருங்காட்சியகம் தொடர்பான காட்சிகளே பொருத்தமாக இருந்தன. அது, மிகப்பெரிய பரப்பளவில் அமைந்திருப்பதால், அதுபற்றிய முழு வீடியோ மிகக் குறைவாகவே காண கிடைத்தன.

அதேசமயம், இது கொல்கத்தாவில் இருக்குமோ என தகவல் தேடியதில், அங்கு Mother Wax Museum என ஒன்று உள்ளதாகவும், அதற்கும், நாம் ஆய்வு செய்யும் வீடியோவிற்கும் தொடர்பு எதுவும் இல்லை என்றும் தெரியவந்தது.

எனவே, கொல்கத்தாவில் இல்லாத ஒரு அருங்காட்சியகத்தின் காட்சியை எடுத்து, குயவன் ஒருவனின் கைவண்ணம், என்று கூறி தவறான தகவல் பரப்பியுள்ளனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் உள்ள தகவல் தவறானது என்று நிரூபித்துள்ளோம். கொல்கத்தாவில் உள்ள மியூசியம் வேறு, நாம் ஆய்வு செய்யும் வீடியோவில் உள்ள மியூசியம் வேறாகும்.

Avatar

Title:கொல்கத்தாவைச் சேர்ந்த குயவன் செய்த சிலை என்று கூறி பரவும் வதந்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False