மரத்தின் மீது காரை நிறுத்திய தவெக தொண்டர் என்று பரவும் வீடியோ உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

ஈரோடு பொதுக் கூட்டத்திற்கு வந்த தவெக தொண்டர் ஒருவர் தன்னுடைய காரை தவறுதலாக மரத்தின் மீது ஏற்றியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கார் ஒன்று மரத்தின் கிளைகளில் சிக்கி நிறுத்தப்பட்டிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தவெக தொண்டர்கள் தனியாதானே மரத்தின் மேல் ஏறக்கூடாது காரோட ஏறலாம்ல… ஈரோடு பொதுக்கூட்டத்தில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: x.com I Archive

உண்மை அறிவோம்:

சமீபத்தில் ஈரோடு மாவட்டத்தில் தவெக கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வந்த தவெக தொண்டர் ஒருவர் விபத்தை ஏற்படுத்தி காரை மரத்தின் மீது நிறுத்தியதாக வீடியோ ஒன்றை பலரும் பதிவிட்டு வருகின்றனர். தவெக நிகழ்ச்சியில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அது மிகப்பெரிய செய்தியாகி இருக்கும். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

மேலும், வீடியோவில் உள்ளவர்களைப் பார்க்க தமிழர்களைப் போல இல்லை. எனவே, வெளிநாட்டு வீடியோவை தவெக மாநாடு என்று விஷமத்தனமாக பகிர்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்தியாவின் பறக்கும் கார் என்று குறிப்பிட்டு 2025 ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. ஆனால், எதிலும் இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று குறிப்பிடப்படவில்லை.

தொடர்ந்து தேடிய போது சீன இணைய ஊடகம் ஒன்றில் இந்த வீடியோவில் இடம் பெற்றிருந்த காட்சியின் புகைப்படத்தை வைத்து செய்தி வெளியிட்டிருந்ததைக் கண்டறிந்தோம். அதில், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஒரு வாகன ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் ஒன்று இந்த காரை மரத்தின் மீது நிறுத்தி வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்திருந்ததாக குறிப்பிட்டிருந்தனர். 

உண்மைப் பதிவைக் காண: stheadline.com I Archive

காரை இப்படி மரத்தின் மீது நிறுத்தியது தவறான செயல் என்று அரசு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததாகவும், அதைத் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டிருந்த வீடியோவை அந்த நிறுவனம் அகற்றியது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஈரோடு தவெக கூட்டம் டிசம்பர் 18ம் தேதி நடந்தது. இந்த வீடியோவை 2025 ஏப்ரலில் இருந்தே சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது. சீனாவில் ஒரு விளம்பரத்திற்காக இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகச் செய்தியும் கிடைத்துள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

சீனாவில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஒன்று எடுத்த வீடியோவை, மரத்தில் காரை பார்க்கிங் செய்த தவெக தொண்டர் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:மரத்தின் மீது காரை நிறுத்திய தவெக தொண்டர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False