அதிமுக கூட்டணி வெல்லும் என ஏபிபி கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெல்லும் என்று ஏபிபி நாடு கருத்துக்கணிப்பு வௌியிட்டதாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சன் நியூஸ் செய்தியை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “அதிமுக கூட்டணி வெல்லும் என கருத்துக் கணிப்பு. அதிமுக கூட்டணி 179 இடங்களைக் கைப்பற்றும்: ABP நாடு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்ட வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி வெல்லும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. அ.தி.மு.க கூட்டணி வெல்லும் என்று சில கருத்துக் கணிப்புகளும் வந்துள்ளன. இதை வைத்து சமூக ஊடகங்களில் விவாதங்கள், வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றன. 

ஏ.பி.பி நாடு ஊடகம் சார்பில் வெளியான கருத்துக் கணிப்பில் தி.மு.க கூட்டணி வெல்லும் என்று கூறியிருந்தது. ஆனால், அ.தி.மு.க கூட்டணிக்கு 179 இடங்கள் என்று சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

சன் நியூஸில் வெளியான செய்தியை பார்த்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற பதிவு கிடைக்கவில்லை. ஆனால், சன் நியூஸ் வெளியிட்டிருந்த செய்தியில் திமுக கூட்டணிக்கு 179 இடங்கள் கிடைக்கும் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, தி.மு.க கூட்டணி 179 இடங்கள் கைப்பற்றும் என்று குறிப்பிட்டு வேறு சிலர் பதிவிட்டிருந்ததையும் காண முடிந்தது.

இரண்டு புகைப்படங்களையம் சற்று உற்று பார்க்கும் போது எடிட் செய்திருப்பது தெளிவாக தெரிந்தது. தி.மு.க கூட்டணி 179 இடங்களை வெல்லும் என்று வெளியான புகைப்படத்தில் அதிமுக – பாஜக கூட்டணி என்று தெளிவாக இருந்தது. அதிமுக கூட்டணி 179 இடங்களை கைப்பற்றும் என்று வெளியாகி இருந்த நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் பாஜக என்ற பகுதி தெளிவில்லாமல் இருந்தது. செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கும் போது ஏற்படக் கூடிய எழுத்துப் பிழைகள், மறைவுகள் அதில் இருந்தது. எனவே, இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவானது.

இதை உறுதி செய்துகொள்ள நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்தை சன் நியூஸ் பொறுப்பாளருக்கு அனுப்பினோம். அவர் இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம். சன் நியூஸ் வெளியிட்டிருந்த செய்தியில் திமுக கூட்டணிக்கு 179 இடங்கள் கிடைக்கும் என்று ஏபிபி நாடு கருத்துக்கணிப்பில் தெரியவந்திருப்பதாகவே செய்தி வெளியிட்டிருந்தோம் என்றார். இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதியானது.

முடிவு:

தி.மு.க கூட்டணி 179 இடங்களை வெல்லும் என்று வௌியான கருத்துக்கணிப்பை எடிட் செய்து அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று சன் டிவி-யே கூறிவிட்டது என்று தவறாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: அதிமுக கூட்டணி வெல்லும் என ஏபிபி கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: False

Leave a Reply