இந்தியாவில் கிரிக்கெட் விளையாட மாட்டேன் என்று மொயின் அலி எச்சரித்தாரா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்கள் முகமது நபி பற்றி தவறாக பேசியதற்கு இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும். அது வரை இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டேன் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி ட்வீட் பதிவுடன் கூடிய புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “கிரிக்கெட் வீரர் மொயின் அலி, இந்தியா தனது அவதூறான அறிக்கைக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நான் மீண்டும் போட்டியில் விளையாட செல்ல மாட்டேன். ஐபிஎல்-லையும் புறக்கணிப்பேன். மேலும் எனது சக முஸ்லிம் சகோதரர்களும் அவ்வாறே செய்யும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை S.J. Sameem Mpm என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூன் 8ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நபிகள் நாயகம் பற்றி இந்தியா அவதூறான அறிக்கை எதையும் வெளியிடவில்லை. பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர்கள் ஊடக விவாதத்தில் பேசினர். அவர்களையும் கூட பாரதிய ஜனதா கட்சி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்தியா அவதூறான அறிக்கை வெளியிட்டதாகவும் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கிரிக்கெட் வீரர் கூறியதாக ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் மொயின் அலி இப்படி ஏதும் ட்வீட் வெளியிட்டாரா என்று பார்த்தோம். அவருடைய ட்விட்டர் பக்கத்தை பார்த்தோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த பதிவும் இல்லை. 2014ம் ஆண்டு அவர் ட்வீட் பதிவிட்டிருந்தார். அதன் பிறகு அவர் ட்விட்டரில் ஆக்டிவாக இல்லை என்பது தெரிந்தது. (அதன் முகவரி @MoeenaliAli)

அதே நேரத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வ பக்கத்தில் மொயின் அலி ட்விட்டர் பக்கம் என்று வேறு ஒரு ட்வீட் அக்கவுண்ட் இணைப்பை வழங்கியிருந்தனர். அதிலும் கூட எந்த ட்வீட்டும் வெளியாகவில்லை. அந்த ட்விட்டர் பக்கத்தின் முகவரி @MoeenAli என்பதாகும்.

அடுத்தது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள ட்விட்டர் ஐடி-யை பார்த்தோம். @Moeen_Ali18 என்று அதன் முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த முகவரியை ட்விட்டரில் தேடிய போது அந்த கணக்கு முடக்கப்பட்டது (Account suspended) என்று வந்தது. மேலும், மொயின் அலியின் உண்மையான ட்விட்டர் பக்கத்துக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரிந்தது. 

தொடர்ந்து தேடிய போது “இது மொயின் அலியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இல்லை” என்று குறிப்பிட்டு இந்த ட்விட்டர் பக்கம் செயல்பட்டு வந்திருப்பதாக செய்திகள் கிடைத்தன. மே மாதத்தில் இந்த கணக்கு தொடங்கப்பட்டிருப்பதாகவும், 10 ட்வீட்கள் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அதில் தகவல் நமக்கு கிடைத்தது.

இதன் மூலம் மொயின் அலி பெயரில் போலியாக ட்வீட் கணக்கை ஆரம்பித்து, இந்தியாவுக்கு எதிராக கருத்து கூறியது போன்று பதிவை வெளியிட்டிருப்பது உறுதியானது.

முடிவு:

இந்தியா மன்னிப்பு கேட்காவிட்டால் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட மாட்டேன் என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கூறியதாக பரவும் ட்வீட் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இந்தியாவில் கிரிக்கெட் விளையாட மாட்டேன் என்று மொயின் அலி எச்சரித்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply