
தமிழக பாஜக தலைவர்கள் பெண் நிர்வாகிகளுடன் நட்சத்திர ஹோட்டலில் தங்கி கும்மாளம் போடுகிறார்கள் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தமிழக பாரதிய ஜனதா கட்சி மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி புகைப்படத்துடன் புகைப்பட பதிவு வெளியாகி உள்ளது. அதில், “தமிழக பாஜக தலைவர்கள் பெண் நிர்வாகிகளுடன் நட்சத்திர ஹோட்டலில் தங்கி கும்மாளம் போடுகிறார்கள். – சி.டி ரவி (பாஜக மேலிட பொறுப்பாளர்) அதான் சினிமா “நட்சத்திரங்களை” கட்சியில் சேர்க்கும் போதே தெரியுமே மாம்ஸ்!!!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Faizal Faizal என்பவர் 2021 ஜூன் 24ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழக பா.ஜ.க தலைவர்கள் மீது பெண்கள் கூறும் குற்றச்சாட்டை விசாரிக்க தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் விசாகா கமிட்டி அமைக்கும் நிலை வரலாம் என்று சி.டி.ரவி பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அந்த கூட்டமானது நிர்வாகிகள் மட்டும் பங்கேற்ற கூட்டம். ஊடகவியலாளர்களுக்கு அனுமதி இல்லை. இருப்பினும், ரவி இப்படி எல்லாம் பேசியதால் தமிழக பாஜக தலைவர்கள் அதிர்ச்சியானார்கள் என்று 2021 ஜூலை 23ம் தேதி தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது.

அசல் பதிவைக் காண: dinamalar.com I Archive
அந்த செய்தியில், “தமிழக பாரதிய ஜனதா நிர்வாகிகளில் பலர் மீது பாலியல் புகார்கள் வந்திருப்பதாக கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது. கடந்த 19ம் தேதி மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் தமிழக பா.ஜ நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. வழக்கமாக கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கூட்டம் நடக்கும். ஆனால், பேசும் விஷயம் வெளியே கசிய கூடாது என்பதால், ஊருக்கு வெளியே நடத்தினர். ஆனாலும், பங்கேற்ற 25 பேரில் சிலர் அங்கு நடந்ததை கவலையுடன் சீனியர் செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். ஒரு தலைவர் மீது மட்டும் 134 புகார்கள் வந்துள்ளன என்றாராம். இனிமேல் தமிழக பா.ஜ தலைவர்கள் யாரும் நட்சத்திர ஓட்டலில் ரூம் எடுத்துத் தங்கக்கூடாது. அங்கு பெண்களை வரவழைத்து கும்மாளம் அடிக்கக்கூடாது என தடை விதித்த ரவி, யாராவது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
செய்தியில் எந்த இடத்திலும் சி.டி.ரவி தங்களிடம் கூறியதாகவோ, அவர் பேசியதை கேட்டதாகவோ தினமலர் குறிப்பிடவில்லை. பா.ஜ.க கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களில் சிலர் பத்திரிகையாளர்களிடம் பேசினார்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது. அதுவும் தினமலர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள் என்று கூட செய்தியில் கூறப்படவில்லை.
இந்த செய்தியை பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூட தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் செய்தி வெளியான 23ம் தேதியே தினமலருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
மேலும் தமிழக பா.ஜ.க சட்டப்பிரிவு சார்பில் தனியாக ஜூன் 23ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. கே.டி.ராகவன் அளித்திருந்த நோட்டீசை 24ம் தேதி வெளியான இதழில் மறுப்பு செய்தி போல தினமலர் வெளியிட்டிருந்தது.
சி.டி.ரவியும் தான் இவ்வாறு பேசவில்லை, செய்தி தொடர்பாக தினமலர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால், ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டு தினமலருக்கு ஜூன் 24ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
அந்த நோட்டீசில், “அந்த கூட்டத்தில் ஒரு தலைவரை பற்றி பேசியதாக, உங்கள் பத்திரிகையில் உண்மைக்கு மாறான செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் எந்த தலைவரை பற்றியும் பேசவில்லை. உங்களின் செய்தியை மறுக்கிறேன். பாஜக தலைவராக உங்களின் நாளிதழின் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். நான் பேசவில்லை என்று மறுமுறை உறுதியாக கூறிக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.
தினமலரும் கூட மன்னிப்பு கேட்காமல் கே.டி.ராகவன் அளித்த விளக்கத்தை பதிவிட்டிருந்தது. அதை கே.டி.ராகவன் தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

பா.ஜ.க நிர்வாகிகள் மீது பாலியல் புகார் வந்ததாக சி.டி.ரவி பேசினார் தினமலர் செய்தி வெளியிட்டது உண்மைதான். பாஜக நடத்தியது நிர்வாகிகள் மட்டும் பங்கேற்ற பூட்டப்பட்ட அறைக்குள்ளாக நடந்த கூட்டமாகும். தினமலர் வெளியிட்டது போன்று தான் பேசவில்லை என்று சி.டி.ரவி விளக்கம் அளித்துள்ளார். தினமலருக்கு எதிராக பா.ஜ.க தரப்பில் இருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தான் வெளியிட்ட செய்தி உண்மையானதுதான் என்று தினமலர் ஆதாரம் எதையும் வெளியிடவில்லை.
இதன் அடிப்படையில் தமிழக பாஜக தலைவர்கள் பெண் நிர்வாகிகளுடன் நட்சத்திர விடுதியில் கும்மாளம் போடுகிறார் என்று சி.டி.ரவி கூறியதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
தினமலர் வெளியிட்ட செய்தி உண்மையா பொய்யா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. உள் அரங்க கூட்டத்தில் நிர்வாகிகள் என்ன வேண்டுமானாலும் பேசியிருக்கலாம். அதை சிலர் ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்துகொள்வது வாடிக்கையான ஒன்றுதான். அதே நேரத்தில் சி.டி.ரவி ஜூன் 24ம் தேதியே தான் அவ்வாறு பேசவில்லை விளக்கம் அளித்துள்ளார்.
24ம் தேதி வெளியான இதழில் தினமலர் கூட பா.ஜ.க-வின் விளக்கத்தை பதிவு செய்துள்ளது. ஆனால் சி.டி.ரவி கூறியதாக அதன் பிறகு சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியாகி வைரலாக பரவத் தொடங்கியுள்ளன. அந்த பதிவுகளில் சி.டி.ரவியின் மறுப்பு செய்தியை சேர்த்து வெளியிடவில்லை. அப்படி சேர்த்து வெளியிட்டிருந்தால் அது முழுமையான செய்தியாக இருந்திருக்கும். இதன் அடிப்படையில் போதிய விளக்கம் இன்றி பகிரப்படும் தவறான பதிவாக இது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பாஜக தலைவர்கள் நட்சத்திர ஹோட்டலில் பெண் நிர்வாகிகளுடன் கும்மாளமடிக்கின்றனர் என்று தமிழக பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தமிழ்நாடு பாஜக தலைவர்கள் பெண் நிர்வாகிகளுடன் கும்மாளம் என்று சி.டி.ரவி கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
