சாணியாக உள்ள அ.தி.மு.க எங்களுடன் சேர்ந்ததால் பிள்ளையார் ஆகியிருக்கிறது என்று பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா புகைப்படத்துடன் தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், "திமுக யானை என்றால் அதிலிருந்து பிரிந்து வந்த அதிமுக அதன் சாணியே. ஆனால் இப்போது எங்களுடன் சேர்ந்து அதிமுக பிள்ளையார் ஆகியிருக்கிறது. பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா" என்று இருந்தது.

இந்த பதிவை Sankar Balakrishnanஎன்பவர் 2021 ஜூன் 24 அன்று பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட் பார்த்தால் தந்தி டிவி வெளியிட்டது போல இல்லை. மேலும், எச்.ராஜா அப்படி கூறியிருந்தால் மிகப்பெரிய செய்தியாக விவாதிக்கப்பட்டிருக்கும். அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகாத நிலையில் இது போலியானது என்று தெரிந்தது. இருப்பினும் பலரும் இதை ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் ஜூன் 24 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, 2021 ஜூன் 24ம் தேதி தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அப்போது எச்.ராஜாவின் இந்த நியூஸ் கார்டு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் எச்.ராஜா கூறியதாக சமூக ஊடகங்களில் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று தந்தி டி.வி வெளியிட்டிருந்த பதிவு நமக்குக் கிடைத்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டின் மீது "FAKE NEWS" என்று முத்திரை குத்தி பதிவிட்டிருந்தனர். இதன் மூலம் எச்.ராஜா கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதியாகிறது.

முடிவு:

தி.மு.க யானை என்றால் அதன் சாணி அ.தி.மு.க என்று எச்.ராஜா கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தி.மு.க யானை என்றால் அதன் சாணி அ.தி.மு.க என்று எச்.ராஜா கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False