FACT CHECK: பிரான்சில் இஸ்லாமிய பெண்ணை தாக்கிய போலீஸ்- வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

கனடாவில் இளம் பெண் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோவை பிரான்சில் மத வெறியோடு போலீசார் இளம் பெண்ணை தாக்கினர் என்று பலரும் ஒரு வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

போலீசார் ஒருவரை அழைத்து வருகின்றனர். அவர் தலையில் உள்ள துண்டை எடுக்க முயலும்போது அவர் முரண்டு செய்கிறார். இதனால் யாரும் எதிர்பாராத வகையில் அவரை தூக்கி கீழே வீசி தாக்குதல் நடத்துகிறார். விழுந்த இடத்தில் ரத்தத் துளிகள் சிதறிக் கிடப்பதை தெளிவாக காண முடிகிறது. 

நிலைத் தகவலில், “தயவுசெய்து அதை மிக அதிகமாக பகிர்ந்து கொள்ளுங்கள், பிரெஞ்சு போலீஸ் இளம் முஸ்லீம் சிறுமியை கைது செய்து, அந்த இளம் பெண்ணின் தலையில் இருந்து தனது தாவணியை எடுக்க முயற்சிக்கிறது. அதன்பிறகு நடந்த மிகவும் பயங்கரமான மேற்கத்திய ஜனநாயக கோரத்தை பாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பதிவை Bashir Mohamed என்பவர் 2020 நவம்பர் 2ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவில் கைது செய்யப்பட்ட நபர் மிகக் கொடூரமாகத் தாக்கப்படுகிறார். ஆனால், இது எங்கே எப்போது நடந்தது என்பது தெரியவில்லை. வீடியோவில் முழு விவரமும் இல்லை. நேரம் மட்டும் உள்ளது. நாள் அகற்றப்பட்டிருந்தது.  ஏராளமானோர் இதை ஷேர் செய்தும் வருகின்றனர். எனவே, இந்த வீடியோவை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம்.

வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ 2017ம் ஆண்டு கனடா நாட்டில் எடுக்கப்பட்டது என்பது தெரிந்தது.

அந்த செய்தியைப் பார்த்தோம். 2017ம் ஆண்டு கனடாவின் கல்கரியில் இரவு 10 மணியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால், 26 வயதான டாலியா காஃபி என்ற கறுப்பின பெண் நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். ஊரடங்கு நேரத்தில் அவர் சாலையில் வரவே, அவரை போலீசார் விசாரித்துள்ளனர். விசாரணையில் சரியான பதில் அளிக்காமல் டாலியா பிரச்னை செய்துள்ளார்.

அசல் பதிவைக் காண: cbc.ca I Archive 1 I alkhaleejtoday.c I Archive 2

தன்னுடைய உண்மையான பெயரைக் கூட கூறாமல் தன்னுடைய சகோதரியின் பெயரை அவர் தெரிவித்துள்ளார். அது அவருடைய பெயர் இல்லை என்பதை காவலர் அலெக்ஸ் டன் கண்டறிந்து அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளார்.

அங்கு, டாலியாவின் புகைப்படத்தை எடுக்க அவருடைய தலையில் இருந்த துணியை எடுக்கக் கூறியுள்ளனர். மறுப்பு தெரிவிக்கவே, போலீசார் துணியை எடுக்க முயற்சி செய்துள்ளார். டாலியா முரண்டு பிடிக்கவே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் டாலியாவின் மூக்கு எலும்பு உடைத்தது. உதடு கிழிந்துள்ளது. 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அலெக்ஸ் டன் ஒரு வருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அவருக்கு காவல் பணி ஒதுக்கப்படாமல், நிர்வாகப் பணி வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் விசாரணையும் நடந்து வருகிறது.

வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த வீடியோவை வெளியிட கனடா நீதிபதி அனுமதி அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, 2020 அக்டோபர் இறுதியில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ, புகைப்படங்களில் தேதி சரியாக தெரிவதை காண முடிகிறது. டிசம்பர் 13, 2017ல் நிகழ்ந்துள்ளது. அந்த வீடியோவில் Mountain Standard time என்று இருக்கிறது. இது ‘கனடா நாட்டுக்கான நேரவலயம்’ என்பது குறிப்பிடத்தக்கது.

அசல் பதிவைக் காண: calgary.ctvnews.ca I Archive

இந்த சம்பவம் பிரான்சில் நடக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. அந்த பெண் இஸ்லாமியரா என்று ஆய்வு செய்தோம். ஆனால், அவர் இஸ்லாமியர் என்பது தொடர்பாக எந்த ஒரு பதிவும் நமக்கு கிடைக்கவில்லை. இந்த செய்தியை இஸ்லாமிய நாடுகளைச் சார்ந்த ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. அவர்களும் கூட இந்த பெண் இஸ்லாமியர் என்று கூறவில்லை. அப்படி இருக்கும்போது எதன் அடிப்படையில் அவர் இஸ்லாமியர் என்ற முடிவுக்கு பதிவாளர்கள் வந்தார்கள் என்று தெரியவில்லை.

கல்காரி காவல் நிலையம் இது தொடர்பாக ஏதேனும் தகவல் வெளியிட்டுள்ளதா என்று பார்த்தபோது, சம்பவம் தொடர்பாக விளக்கம் ஒன்றை அவர்கள் அளித்திருந்தனர். அதிலும் கூட அந்த பெண்ணின் மதம் பற்றிய குறிப்பு இல்லை.

Archive

கல்காரி போலீஸ் அளித்த விளக்கம் என்று ஒரு தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அந்த பெண் தலையில் அணிந்திருந்த துணி குறிப்பிட்ட மதத்தினர் அணிவது போன்ற ஹிஜாப் தலை மறைப்பு துணி இல்லை. குளிர் காலத்தில் தலையை பாதுகாக்க அணியப்படும் பாதுகாப்பு ஸ்கார்ஃப் அது. 

கைது செய்யப்படும் நபரின் மதம் தொடர்பான சின்னங்களை கையாள்வது பற்றி சம்பந்தப்பட்ட மதத் தலைவர்களுடன் பேசி கொள்கை ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. தலைப்பாகை, தலைமறைப்பு போன்றவற்றை அணிந்திருப்பவர்கள் என்றால் அவர்களை கைது செய்வதற்கு முன்னதாகவே அது தொடர்பாக கேட்டு தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கிறோம்” என்று கூறப்பட்டு இருந்தது.

பிரான்சில் பள்ளிக்கூட ஆசிரியர் இஸ்லாமியர்களின் புனித தூதரான முகமது நபி தொடர்பான கேலி சித்திரத்தைக் காட்டியதால் கொலை செய்யப்பட்டதில் இருந்து பிரான்ஸ் அரசுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இந்த நிலையில், பிரான்சில் இஸ்லாமிய பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பலரும் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

கனடாவில் இருந்து வெளியான செய்திகளில் அந்த பெண் கறுப்பினத்தைச் சார்ந்தவர் என்று மட்டுமே கூறப்பட்டு இருந்தது. அவருடைய மதம் தொடர்பாக எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. அதே நேரத்தில், மதம் காரணமாக அவர் தாக்கப்படவில்லை என்பதும் தெரிகிறது.

இதன் அடிப்படையில் பிரான்சில் இஸ்லாமிய பெண் தாக்கப்பட்டார் என்று பகிரப்படும் வீடியோ கனடாவில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படுகிறது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்றும் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் பிரான்சில் இஸ்லாமிய சிறுமியை போலீசார் தாக்கியதாக பரவும் வீடியோ 2017ல் கனடாவில் எடுக்கப்பட்டது என்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பிரான்சில் இஸ்லாமிய பெண்ணை தாக்கிய போலீஸ்- வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False