"சீமானை கண்டித்த சுந்தர் பிச்சை" - ஃபேஸ்புக் பதிவு உண்மை அறிவோம்!
சீமான் இந்து மதத்தை விமர்சிப்பதை கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கண்டித்துள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கருத்து கூறியதாக கோபன்ஹேகன் பல்கலைக் கழக ப்ரஸ் தகவல் வெளியிட்டதாக ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், "திரு.சீமான் அவர்கள் தமிழர் என்றால் இந்து மதத்தை மட்டும் விமர்சிப்பது ஏன்? உருது பேசும் இஸ்லாமியர்கள், ஆங்கிலம் பேசும் கிறிஸ்தவர்கள் எப்படி தமிழர் ஆவார்கள். இதை ஏன் தமிழில் பதிவிடுகின்றேன் என்றால் சீமான் தமிழராயிற்றே. வேசம் உங்கள் ஆதாயத்துக்காக வேண்டாம். சீமான் அவர்களே தமிழர்களை கொச்சைப்படுத்தாதீர்கள் - சுந்தர் பிச்சை, சி.இ.ஓ கூகுள்" என்று உள்ளது.
இந்த பதிவை, தமிழக அரசியல் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் சிவன் மாரீஸ் கிடாரி என்பவர் செப்டம்பர் 13, 2019 அன்று பதிவிட்டுள்ளார். இதை ஏராளமானோர் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவில் நீட் தேர்வு, மத அரசியல் பற்றி எல்லாம் கூகுள் தலைமை செயலாக்க அதிகாரி சுந்தர் பிச்சை கருத்து கூறியதாக பிரபல ஊடகங்கள், பல்கலைக் கழக பிரசுரங்கள் பெயரில் தொடர்ந்து வதந்தி பரவி வருகின்றன. இது பற்றி நம்முடைய தமிழ் ஃபேக்ட் கிரஸண்டோவில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு உண்மை நிலையை கட்டுரையாக வெளியிட்டு வருகின்றோம்.
செய்தி 1 |
செய்தி 2 |
செய்தி 3 |
அந்த வகையில் இந்து மதத்தை சீமான் விமர்சித்து வருவதாகவும் அதைக் கண்டிக்கும் வகையில் தமிழில் சுந்தர் பிச்சை கருத்துக் கூறியதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சுந்தர் பிச்சை கருத்து என்று சமூக ஊடகங்களில் பல தகவல் பகிரப்படுவது பற்றி முன்பு நாம் ஆய்வு மேற்கொண்டபோது, இந்திய அரசியல் பற்றி சுந்தர் பிச்சை எந்த ஒரு கருத்தையும் கூறியது இல்லை என்று தெரிந்தது. மாட்டிறைச்சி, மத அரசியல் பற்றி சுந்தர் பிச்சை கருத்து கூறியதாக தகவல் சமூக ஊடகங்களில் பரவியபோது இது தவறான தகவல் என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் மறுத்திருந்தார்.
தற்போது பகிரப்பட்டு வரும், பதிவில் எந்த ஒரு இடத்திலும் முற்றுப் புள்ளி இல்லை. வாக்கியம் முற்று பெறாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. சீமானுக்காக இதை தமிழில் வெளியிடுவதாக சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளதாக அதில் உள்ளது. சுந்தர் பிச்சை தமிழில் கூறினால் அதை அவர் தன்னுடைய ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்க வேண்டும். சுந்தர் பிச்சை கூறியதாக அதை மொழி பெயர்த்து கோபன்ஹேகன் பல்கலைக்கழக பிரஸ் வெளியிட்டிருக்கலாம். ஆனால், அப்படியே தமிழில் எந்த மொழி பெயர்ப்பும் இல்லாமல் அந்த பல்கலைக் கழகம் வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இஸ்லாமியர்கள் என்றால் உருது மட்டும்தான் பேசுவார்கள், கிறிஸ்தவர்கள் எல்லோரும் ஆங்கிலம் மட்டும்தான் பேசுகிறார்கள் என்று இங்குள்ள தீவிர வலதுசாரி சிந்தனையாளர்கள் சிந்தனையில் உதித்தது போல பதிவு இருந்தது.
இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் மொழிகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். உதாரணத்துக்கு ஈரானை எடுத்துக்கொள்வோம். அங்கு 99 சதவிகித மக்கள் இஸ்லமியர்கள்தான். அவர்கள் எல்லோரும் உருது பேசுகிறார்களா என்றால் இல்லை. அவர்கள் பேசுவது பெர்ஷிய மொழியாகும். அதேபோல், 51 சதவிகிதம் கிறிஸ்தவர்கள் வசிக்கும் நாடான பிரான்சை எடுத்துக்கொள்வோம். அவர்கள் யாரும் ஆங்கிலம் பேசுவது இல்லை. பிரெஞ்சு மொழிதான் பேசுகின்றனர். இவை எல்லாம் இங்குள்ள யாரோ இதை போலியாகத் தயாரித்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த தகவல் உண்மையா, இது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று அறிய சுந்தர் பிச்சை கூறியதாக உள்ள தகவலை கூகுளில் டைப் செய்து தேடினோம். சீமானுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சுந்தர் பிச்சை எங்கும் பேசியதாகவோ, பதிவிட்டதாகவோ எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
இந்த பதிவை அப்படியே ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.
அப்போது, நீட் தேர்வு தொடர்பாக சுந்தர் பிச்சை கருத்து கூறியதாக சமூக ஊடகங்களில் பரவிய போட்டோ கார்டை எடுத்து, சுந்தர் பிச்சை கருத்து என்று ஆங்கிலத்திலிருந்த பகுதியை அகற்றிவிட்டு, அதற்கு பதில் தமிழில் போட்டோஷாப் முறையில் டைப் செய்து மாற்றியிருந்தது தெரிந்தது. இந்த நீட் பற்றிய நியூஸ் கார்டு தொடர்பாக நாம் ஏற்கனவே உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தேடியபோது, இந்த பதிவை சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூட வெளியிட்டு இருந்தார். இதன் உண்மை நிலையை அறிந்த பிறகு அதை அவர் அகற்றிவிட்டார். அதுபற்றி நியூஸ்மினிட் என்ற ஆங்கில செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டு இருந்தது
News Link | Archived Link |
ராஜா ட்வீட் செய்ததை வைத்து விகடன் இணையதளம் செய்தி வெளியிட்டதும் நமக்கு கிடைத்தது. “இது சுந்தர் பிச்சைக்குத் தெரியுமா?” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். அந்த செய்தியில், சுந்தர் பிச்சை பெயரில் பரவிய தகவல் பொய்யானது என்று குறிப்பிட்டு இருந்தனர்.
விகடன் செய்தி | Archived Link |
நம்முடைய ஆய்வில்,
சுந்தா பிச்சை கூறினார் என்று எந்த ஆதாரமுமின்றி வதந்திகள் பரப்பப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீமானுக்கு சுந்தர் பிச்சை கண்டனம் தெரிவித்தது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.
சீமானுக்கு கண்டனம் தெரிவிக்கும் பதிவு இதற்கு முன்பு நீட் தேர்வு தொடர்பாக சுந்தர் பிச்சை கருத்து கூறியதாக பகிரப்பட்ட நியூஸ் கார்டில் இருந்து எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
சில ஆண்டுகளாக இந்த பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதும், குறிப்பாக எச்.ராஜா இந்த பதிவை ட்வீட் செய்துவிட்டு பின்னர் அகற்றியதும் தெரியவந்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் சீமானுக்கு கூகுள் சி.இ.ஓ கண்டனம் தெரிவித்ததாக பகிரப்பட்டு வரும் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:"சீமானை கண்டித்த சுந்தர் பிச்சை" - ஃபேஸ்புக் பதிவு உண்மை அறிவோம்!
Fact Check By: Chendur PandianResult: False