பொள்ளாச்சி பாலியல் கொடூர வீடியோவில் இருப்பது பார் நாகராஜா அல்லது வேறு யார்?

அரசியல் சார்ந்தவை

பொள்ளாச்சியில், இளம்பெண்களை ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக படம்பிடித்து மிரட்டி வந்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றி பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பார் நாகராஜ் என்பவர் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் இருப்பவர் யார் என்ற உண்மை அறியும் பரிசோதனையில் ஈடுபட முடிவு செய்தோம்.

Archived Link

வதந்தியின் விவரம்

‘’பொள்ளாச்சி கள்ளனின் முழு வீடியோ கசிந்தது அவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க நினைத்தால் share பண்ணி விடுங்கள் . #_ஷேர் பண்ணுங்கள்’’ என்றும், ‘’பார் நாகராஜின் புதிய வீடியோ’’ என்றும் கூறி, சில நாட்கள் முன்பாக, சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியானது. அதில், இளைஞர் ஒருவர் நிர்வாண நிலையில், இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. அக்குறிப்பிட்ட நபர்தான், பார் நாகராஜ் எனக் கூறி, பலரும் இந்த வீடியோவை வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

Archived Link 1
Archived Link 2
Archived Link 3

உண்மை அறிவோம்

பொள்ளாச்சி பாலியல் கொடூர செய்தியை பார்க்கும் யாரும் எளிதில் உணர்ச்சிவசப்பட நேரிடலாம். அந்தளவுக்கு அது பொதுமக்களிடம் கோபத்தை ஏற்படுத்தும் சம்பவமாகும். குறிப்பிட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களின் விவரம் மற்றும் வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் கடந்த 2 வார காலமாக, வைரலாக பரவி வருகின்றன.

அதாவது, திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன் என்ற 4 பேரும், இளம்பெண்களை ஃபேஸ்புக், ட்விட்டர் வாயிலாக தொடர்புகொண்டு, ஆசை வார்த்தைகள் கூறி தனியே அழைத்துச் சென்று, கூட்டு வன்புணர்வு செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இதில், பாதிக்கப்பட்ட இளம்பெண்களில் ஒருவர் பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த வழக்கில், குறிப்பிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டு, விசாரணையும் நடந்து வருகிறது. இதுதொடர்பான செய்தியின் முழுவிவரம் இங்கே தரப்பட்டுள்ளது.

இதற்கிடையே, புகார் கூறிய பெண்ணை மிரட்டியதோடு, அவரின் சகோதரரையும், மேற்கண்ட 4 பேர் சார்பாக, சிலர் தாக்கியுள்ளனர். அவர்களில், அஇஅதிமுக உறுப்பினர் பார் நாகராஜன் என்பவரும் ஒருவர் ஆவார். இதுபற்றி தாக்குதலுக்குள்ளான நபர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, பார் நாகராஜன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், பார் நாகராஜன் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதுபற்றி ஊடகங்களில் வெளியான செய்தியை இங்கே கிளிக் செய்து படிக்கலாம். நாகராஜன் அஇஅதிமுக உறுப்பினர் என்பதால், உடனடியாக இந்த செய்தி வேகமாக பரவ தொடங்கியது. அத்துடன், நாகராஜனும், இந்த வீடியோ கும்பலில் ஒருவர் என்கிற வகையில், தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதன் ஒரு கட்டமாக, நாகராஜனும் அந்த வீடியோவில் இருக்கிறார், அவரது அரசியல் தொடர்புகள் அவரை பாதுகாக்கின்றன, என்ற ரீதியிலும் செய்திகள் பகிரப்பட்டன.

இதன் எதிரொலியாக, நாகராஜன் அஇஅதிமுக உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக, அக்கட்சியின் தலைமை அறிவிப்பும் வெளியிட்டது. இதுதொடர்பான செய்தியை இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.

நாகராஜனை அதிமுக.,வில் இருந்து நீக்கினாலும் அவரை பாதுகாப்பது அதே கட்சியின் ஆட்சிதான் என்றும் சிலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கின்றனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும், தலைமையாகச் செயல்பட்டு வந்ததும் பார் நாகராஜ்தான் என்றும், அவருக்கு அதிகார வட்டத்தில் பெரும் செல்வாக்கு உள்ளதால், அதை வைத்து, போலீசார் அவர் தொடர்புடைய வீடியோ பதிவுகள் உள்ளிட்டவற்றை அழித்துவிட்டதாகவும், சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், போலீசாருக்கும், பார் நாகராஜனுக்கும் இடையே நெருங்கிய நட்பு உள்ளதாகவும், அடிதடி, மிரட்டல் வழக்கில் மட்டுமே கைது செய்யப்பட்ட பார் நாகராஜ், ஜாமினில் வெளிவந்தபோது, போலீசாருக்கு கேக் ஊட்டி நன்றி செலுத்தியதாகவும் கூறி, அதற்கான ஆதார புகைப்படத்தையும் சிலர் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படம் எந்த நோக்கத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

மேலே போலீஸ் அதிகாரிக்கு கேக் ஊட்டும் நாகராஜ், மற்றொரு புகைப்படத்தில் தமிழக அமைச்சர் வேலுமணியுடன் நெருக்கமாக நிற்கிறார். இதன் அடிப்படையில், நாகராஜ் அரசியல் செல்வாக்கு உள்ளவர் என்பது உறுதியாகிறது.


எனினும், இந்த வீடியோவையும், தன்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் பார் நாகராஜ் மறுத்துள்ளார். ‘’அரசியல் செல்வாக்கு இருந்தாலும், அதனை தவறாகப் பயன்படுத்தவில்லை. குறிப்பிட்ட ஆபாச வீடியோவில் இருப்பது சதீஷ்தான், என் மீது அரசியல் காரணங்களுக்காகக் குற்றம் சாட்டுகிறார்கள்’’ எனக் கூறி பார் நாகராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

Archive Link 1
Archive Link 2
Archived Link 3     

பார் நாகராஜ் சொல்வதன்படி பார்த்தால், குற்றத்தில், அவருக்கு தொடர்பு உள்ளதோ, இல்லையோ, அது போலீசாருக்கே வெளிச்சம். ஆனால், அந்த வீடியோவில் இருப்பது பார் நாகராஜ் இல்லை என்பது மட்டும் உறுதியாகிறது. நாகராஜின் அங்க அடையாளங்களும், ஆபாச வீடியோவில் இருப்பவரின் அங்க அடையாளங்களும் வேறு வேறாக உள்ளது.

மேலும், இந்த பாலியல் வழக்கில் பார் நாகராஜ் பெயர் பதிவு செய்யப்படவில்லை. அவர், அடிதடி வழக்கில் மட்டுமே குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொள்ளாச்சி பாலியல் வழக்கு பற்றி போலீசார் பதிவு செய்த எஃப்ஐஆர் அறிக்கையின் புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது. அதில், பார் நாகராஜ் பெயர் இல்லை. பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய பிரதான குற்றவாளிகளான திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகிய 4 பேரின் பெயர், ஊர், அவர்கள் மீதான குற்றச்சாட்டு, அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குப் பிரிவுகள் (இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354ஏ, 354பி, 392 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 66ஈ பிரிவு, தமிழக அரசின் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டம் 2002 பிரிவு 4) உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த எஃப்ஐஆர் ஆதாரத்தை நமது நேயர்கள் பார்க்க விரும்பினால் இங்கே கிளிக் செய்து பார்க்கலாம்.

நாம் தெரிந்துகொண்ட உண்மை,

  1. பொள்ளாச்சி பாலியல் கொடூரம் பற்றி ஏராளமான ஆதாரங்கள் போலீசாருக்கு சிக்கியுள்ளன. அதுபற்றியும், அதில் தொடர்புடையவர்கள் பற்றியும் போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய முதன்மை குற்றவாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  2. போலீசாரின் எஃப்ஐஆர் விவரத்தின்படி பார்த்தால், இந்த பாலியல் வழக்கில் பார் நாகராஜூக்கு நேரடி தொடர்பு இல்லை. ஆனால், இந்த விவகாரம் பற்றி போலீசில் புகார் கொடுத்த பெண்ணை மிரட்டியதுடன், அவரின் சகோதரரையும் பார் நாகராஜ் உள்ளிட்டோர் தாக்கியுள்ளனர். அதன் பேரில்தான், அவரை போலீசார கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்துள்ளனர். ஆவணங்களின் படி பார்த்தால், பார் நாகராஜ் பெயர் இந்த அடிதடி சம்பவம் காரணமாகவே, வெளியே பிரபலமாகியுள்ளது.
  3. பார் நாகராஜ் அஇஅதிமுக உறுப்பினராக இருந்துள்ளார். இந்த பிரச்னை காரணமாக, அவர் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
  4. குறிப்பிட்ட வீடியோ உண்மைதான். ஆனால், அதில் இருப்பது பார் நாகராஜ் இல்லை. அது கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவரான சதீஷ். பார் நாகராஜின் அங்க அடையாளங்கள் வேறு, சதீஷ் என்பவர் வேறு.
  5. பொதுவாக, இதுபோன்ற சம்பவங்கள் மக்களிடையே உணர்ச்சி ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், பலரும் உண்மை பற்றி யோசிக்காமல், உடனடியாக, அதை பகிர தொடங்கிவிடுவார்கள். இப்படித்தான் வதந்திகள் பரவுகின்றன. ப்ளீஸ் ஷேர் என்பது போன்ற வார்த்தைகள் நாம் பகிரும் தகவல்களில் இருக்கிறதா என கவனிப்பது நல்லது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வீடியோ உண்மைதான்; ஆனால், அதில் இருப்பவர் பார் நாகராஜ் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. நமது நேயர்கள் இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விசயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Avatar

Title:பொள்ளாச்சி பாலியல் கொடூர வீடியோவில் இருப்பது பார் நாகராஜா அல்லது வேறு யார்?

Fact Check By: Parthiban S 

Result: False