
அழகிய பசுமையான கிராமத்தை அழித்து நடிகரும் தவெக தலைவருமான விஜய் கட்டிய பள்ளிக் கூடம் என்று இரண்டு புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
வயல்வெளி போன்று இருக்கும் இடம் ஒன்றின் புகைப்படம் மற்றும் பள்ளிக் கூட கட்டிடம் ஒன்றின் புகைப்படத்தை ஒன்று சேர்த்து ஒரே புகைப்படமாக சேர்த்து நடிகர் விஜய்யின் பள்ளி அமைவதற்கு முன்பு, கட்டிய பிறகு என்று குறிப்பிட்டு புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒரு அழகான விவசாய கிராமத்தையே அழிச்சிருக்காங்க.
இதுல எத்தனை விவசாய குடும்பம் பாதிக்கபட்ருபாங்க.😯 சரி விவசாயத்த அழிச்சி பள்ளிகூடம் கட்டி குறைந்த கட்டணத்துலயாவது கல்வி தருவாங்கனு பாத்தா Pre-KG-கே ஆண்டுக்கு 46 ஆயிரம் கட்டணமாம். பரந்தூர்ல பேசுனதலாம் பொய்யா கோபால் #TVKVijayHQ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் ஒரு பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறார் என்று சமீபத்தில் தகவல் வெளியானது. அதற்குள்ளாக ஒரு அழகிய கிராமத்தையே அழித்து பள்ளிக் கூடத்தைக் கட்டியதாக புகைப்பட பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். விஜய் பள்ளி கட்டுவதற்கு முன்பு அந்த இடத்தின் புகைப்படத்தை எப்படி எடுத்தார்கள் என்று சந்தேகத்தின் அடிப்படையில் இந்த புகைப்படம் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: dronexl.co I Archive
வயல்வெளி போன்று பசுமையாக இருக்கும் புகைப்படத்தைத் தனியாக வெட்டி, கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அது 2020ம் ஆண்டு இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய கிராமம் பற்றி வெளியான செய்தியில் பயன்படுத்தப்பட்ட படம் என்பது தெரியவந்தது. இடைக்காலத்தைச் சேர்ந்த கிராமம் ஒன்றை ட்ரோன் புகைப்படம் மூலம் கண்டறிந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை எடுத்து, நடிகர் விஜய் இந்த இடத்தைத்தான் அழித்து பள்ளிக் கூடம் கட்டியுள்ளார் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவானது.
அடுத்ததாக நடிகர் விஜய்யின் பள்ளிக்கூடம் என்று பகிரப்படும் கட்டிடமாவது உண்மையில் விஜய்யின் பள்ளிக் கூடம்தானா என்று அறிய ஆய்வைத் தொடர்ந்தோம். நடிகர் விஜய்க்கு சொந்தமானது என்று கூறப்படும் விஜய் வித்யாஷ்ரம் சீனியர் செகன்டரி பள்ளியின் புகைப்படத்தைக் கூகுள் ஸ்ட்ரீட்வியூவில் இருந்து எடுத்தோம். அதற்கும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள கட்டிடத்திற்கும் சுத்தமாகத் தொடர்பில்லை.
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அந்த புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடிய போது அது ஓசூரின் பாகலூரில் அமைந்துள்ள ஶ்ரீ விஜய் வித்யாஷ்ரமம் சிபிஎஸ்சி பள்ளியின் கட்டிடம் என்பது தெரியவந்தது. எனவே, இந்த நடிகர் விஜய்யின் பள்ளிக் கூடம் என்று கூறப்படும் புகைப்படமும் தவறானது என்பது தெளிவானது.
விஜய் வித்யாஷ்ரம் பள்ளியின் இணையதளத்தில் பள்ளி தொடர்பான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்திருந்தனர். அதில் பள்ளி அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளர் சி.ஜோசப் விஜய் என்று இருந்தது. விஜய் வித்யாஷ்ரம் பள்ளி என்ற பெயரில் 35 ஆண்டு குத்தகைக்கு அந்த இடம் கொடுக்கப்பட்டது போன்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நம்முடைய ஆய்வில் நடிகர் விஜய்க்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பள்ளிக்கூடமானது அழகிய கிராமத்தை அழித்துக் கட்டப்பட்டது என்று பகிரப்படும் புகைப்படம் தவறானது என்பதும், அதற்கும் பள்ளிக் கட்டிடத்திற்கும் தொடர்பில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இங்கிலாந்தின் கண்டறியப்பட்ட கிராமம் ஒன்றின் புகைப்படம் மற்றும் ஓசூர் அருகே உள்ள பள்ளியின் புகைப்படங்களை எடுத்து நடிகர் விஜய் பசுமையான கிராமத்தை அழித்து கட்டிய பள்ளிக்கூடம் என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:கிராமத்தை அழித்து நடிகர் விஜய் கட்டிய பள்ளிக்கூடம் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
