அகமதாபாத்தில் கூடிய சிஎஸ்கே ரசிகர்கள் என்று பரவும் படம் உண்மையா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தைக் காண குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்துக்கு திரண்டு வந்த ரசிகர்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Twitter I Archive 2

ஏஷியா நெட் தமிழ் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் செய்தி ஒன்றின் இணைப்பை பகிர்ந்துள்ளது. மஞ்சள் சட்டை அணிந்த மக்கள் சாலை முழுக்க ஆக்கிரமித்திருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது சேப்பாக்கம் இல்ல, நரேந்திர மோடி ஸ்டேடியம் – CSK vs GT போட்டிக்காக திரண்ட லட்சக்கணக்கான சிஎஸ்கே ரசிகர்கள்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 2023 மே 28ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுவதாக இருந்தது. மழை காரணமாகப் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்த போட்டியைக் காண அதிக அளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மைதானத்துக்கு வந்தனர். அவர்கள் மைதானத்துக்கு வந்த காட்சி என்று பகிரப்பட்டுள்ள படம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஏதோ பேரணி ஒன்றின் புகைப்படத்தைத் தவறாக பகிர்ந்திருப்பது போல இருக்கவே, இந்த படத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது முழுக்க முழுக்க மஞ்சளாகக் காட்சியளிக்கும் முதல் படம் 2022ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் எத்தியோப்பியாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கிரேட் எத்தியோப்பியன் ரன் என்று குறிப்பிட்டு இந்த படத்தை சில ஊடகங்களும் 2022ம் ஆண்டு வெளியிட்டிருந்தன. 

உண்மைப் பதிவைக் காண: mdgfund.org I Archive

தொடர்ந்து தேடிய போது 2017ம் ஆண்டில் கூட இந்த படத்தை சிலர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது. மற்றொரு இணையதளத்தில் இந்த புகைப்படம் எத்தியோப்பியாவில் 2015ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த புகைப்படம் இந்தியாவில் ஐபிஎல் இறுதிப் போட்டியில் அகமதாபாத் நகரில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.

Archive

மற்றொரு படத்தைப் பற்றித் தேடினோம். பலரும் அகமதாபாத்தில் திரண்ட சிஎஸ்கே ரசிகர்கள் என்று குறிப்பிட்டு இந்த புகைப்படத்தைப் பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது. இவற்றுக்கு இடையே இந்த படத்தை மே 27, 2023 அன்று ட்விட்டரில் வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது. இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை 28ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அப்படி இருக்கும் போது அதற்கு முந்தைய நாளே வெளியாகியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த ட்விட்டர் பதிவைப் பார்த்தோம். அதில் ஸ்பெயினின் Gran Canaria stadium என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் இதுவும் சிஎஸ்கே ரசிகர்கள் இல்லை என்பது உறுதியானது. 

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவின் படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அகமதாபாத்தில் கூடிய சிஎஸ்கே ரசிகர்கள் என்று பரவும் வெளிநாட்டைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அகமதாபாத்தில் கூடிய சிஎஸ்கே ரசிகர்கள் என்று பரவும் படம் உண்மையா?

Written By: Chendur Pandian 

Result: False