
மோடியின் அதிரடிக்கு அஞ்சி சீன ராணுவத்தினர் 2 கோடி பேர் மருத்துவ விடுப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளதாக நியூஸ் 7 தமிழ் பெயரில் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

நியூஸ்7 தமிழ் பழைய நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாரத பிரதமர் மோடியின் அதிரடிக்கு அஞ்சி சீன ராணுவத்தினர் 2 கோடி பேர் மருத்துவ விடுப்பு வேண்டி சீன அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர் – அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சித் தகவல்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Arun Kumar SB என்பவர் Polimer News – பாலிமர் செய்திகள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2020 ஜூன் 24 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பார்க்கும்போதே இது போலியான நியூஸ் கார்டு என்பது தெரிந்தது. இந்த மாதிரியான நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் மூன்று – நான்கு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டதாக அதன் ஆன்லைன் பிரிவு அதிகாரி நம்மிடம் ஏற்கனவே கூறியிருக்கிறார்.
இந்த பதிவு நையாண்டிக்காக போடப்பட்டதா, அல்லது மோடியை புகழ போடப்பட்டதா என்று தெரியவில்லை. கமெண்ட் செய்த பலரும் இது ஃபேக் என்று குறிப்பிட்டுள்ளனர். சிலர் மோடிக்கு பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். இது தவிர 350க்கும் மேற்பட்டோர் இதை ஷேர் வேறு செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இது பற்றிய ஆய்வை மேற்கொண்டோம்.

சீன ராணுவத்தில் மொத்தமே 20 – 25 லட்சம் பேர்தான் இருப்பதாக படித்த நினைவு… அப்படி இருக்கும்போது 2 கோடி பேர் எப்படி வந்தார்கள் என்பது நமக்கு அதிர்ச்சியை அளித்தது. இது தொடர்பாக தேடியபோது 21.8 லட்சம் வீரர்கள் சீனாவில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
பிபிசி வெளியிட்ட செய்தியில் சீன ராணுவத்தில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனிடம் தற்போது 9.8 லட்சம் ராணுவ வீரர்கள் மட்டுமே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் 2 கோடி பேர் மருத்துவ விடுப்பு கேட்டதாக கூறப்படும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது. சீன ராணுவ வீரர்கள் விடுப்பு எடுப்பதாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடியபோது, அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
அதே நேரத்தில் திபெத் பகுதியில் சீன ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதாகவும், இது எந்த ஒரு நாட்டுக்கு எதிரானது இல்லை என்றும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒத்திகை பயிற்சிதான் என்று சீன ராணுவம் கூறிய செய்தி மட்டுமே கிடைத்தது.
இந்த நியூஸ் கார்டு குறித்து நியூஸ்7 தமிழைத் தொடர்புகொண்டு கேட்டபோது இது போலியானது என்று கூறினர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மோடியின் அதிரடிக்கு அஞ்சி சீன ராணுவத்தினர் 2 கோடி பேர் மருத்துவ விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளதாக நியூஸ் 7 தமிழ் பெயரில் பரவும் நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False

Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன்.
உங்களின் மறு மதிப்பீட்டுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.