பழைய நாடாளுமன்ற வளாகம் அதானிக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

பழைய நாடாளுமன்ற வளாகம் அதானி அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஜெயா பிளஸ் டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பழைய நாடாளுமன்ற வளாகம் அதானி அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்டு அருங்காட்சியகமாக மாற்றப்படும் – நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நியூஸ் கார்டை காங்கிருப்பு கே ஜி மோகன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மே 27ம் தேதி வெளியிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்திய நாடாளுமன்றத்துக்குப் புதிதாகக் கட்டிடம் கட்டப்பட்டு, சமீபத்தில் திறக்கப்பட்டது. பழைய கட்டிடம் என்ன செய்யப்படும் என்று மத்திய அரசு இது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. அதே நேரத்தில், நாடாளுமன்ற செயல்பாட்டுக்காகப் பழைய நாடாளுமன்ற வளாகம் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த சூழலில் நாடாளுமன்ற வளாகத்தை அதானி அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறியதாக சிலர் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு தொடர்பாக ஆய்வு செய்தோம்.

முதலில் அமைச்சர் இப்படி ஏதும் அறிவிப்பு வெளியிட்டுள்ளாரா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. அடுத்தது இந்த நியூஸ் கார்டை ஜெயா பிளஸ் வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் அது மே 27, 2023 அன்று வெளியிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அந்த நாளில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போல் எந்த ஒரு நியூஸ் கார்டும் வெளியாகவில்லை. மேலும், வழக்கமாக ஜெயா பிளஸ் வெளியிடும் நியூஸ் கார்டுக்கும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டின் டிசைனுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசத்தை காண முடிந்தது. 

இந்த நியூஸ் கார்டை ஜெயா பிளஸ் ஆசிரியர் குழுவுக்கு அனுப்பி இது உண்மையா என்று கேள்வி எழுப்பினோம். சரிபார்த்துவிட்டு மீண்டும் அழைக்கிறோம் என்று கூறினர். பின்னர் நம்மிடம் பேசிய நிர்வாகி, “இது போலியானது. இது நாங்கள் வெளியிட்டது இல்லை” என்று கூறினார்.

முடிவு:

பழைய நாடாளுமன்ற வளாகம், அதானி அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பழைய நாடாளுமன்ற வளாகம் அதானிக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதா?

Written By: Chendur Pandian 

Result: False