FACT CHECK: 2011ல் இறந்த எகிப்து – குவைத் தொழில் அதிபரின் சொத்துக்கள் என்று பரவும் படங்கள் உண்மையா?

சமூக ஊடகம் | Social சமூகம் சர்வதேசம் | International

எகிப்து மற்றும் குவைத் நாட்டைச் சார்ந்த தொழிலதிபர் நசீர் அல் கராபி சேர்த்து வைத்த சொத்துக்கள் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தங்கக் கட்டிகள், வைரங்கள், தங்க காசுகள், விலை உயர்ந்த கார், விமானம் உள்ளிட்ட வாகனங்கள், படுக்கை அறை என பல படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “எகிப்தில் பிறந்த குவைத் தொழிலதிபர் நசீர் அல்-கராபியின் எகிப்திய கணவர் காலமானபோது, ​​அவர் விட்டுச் சென்ற அவரது டர்க்கைஸ் டர்க்கைஸின் படங்களை நான் பதிவிட்டேன். கடைசி படத்தை இன்னும் கொஞ்சம் கவனிக்கிறீர்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை சொல்லுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவை இஸ்லாமியம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் மதம். என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஜூன் 18ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குவைத் பணக்காரர் நாசி அல் கார்கி மரணம் அடைந்தார் என்று டிரினிடாட் டொபோகோ என்ற கரீபியன் தீவுகள் பகுதியில் உள்ள நாட்டின் கடத்தல்காரர் ஒருவரின் படத்தைப் பகிர்ந்து வந்தனர். இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவில் ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், கடத்தல்காரனின் படத்தை அகற்றிவிட்டு, கூடுதலாக சில புகைப்படங்களை சேர்த்து சமூக ஊடகங்களில் குவைத் – எகிப்திய தொழிலதிபர் நசீர் அல் கராபியின் சொத்துக்கள் என்று சிலர் பகிர்ந்து வருகின்றனர். இந்த படங்கள் எல்லாம் நசீர் அல் கராபிக்கு சொந்தமான சொத்துக்களா என்று ஆய்வு செய்தோம்.

முதலில் நசீர் அல் கராஃபி என்று குவைத்தில் தொழிலதிபர் யாராவது இருந்தாரா என்று பார்த்தோம். அப்போது நாசர் அல் கராஃபி என்று ஒரு தொழிலதிபர் இருந்ததாகவும் அவர் 2011ம் ஆண்டு எகிப்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்றும், அவருடைய உடல் குவைத்தில் அடக்கம் செய்யப்பட்டது என்றும் செய்தி கிடைத்தது.

அடுத்ததாக இந்த படங்கள் எல்லாம் நாசர் அல் கராஃபியின் வீட்டில் எடுக்கப்பட்டவையா என்று ஆய்வு செய்தோம். நாணயங்கள், வைரங்கள் படங்கள் பல தளங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அதன் மூலத்தைக் கண்டறிவது சிக்கலாக இருந்தது. தங்கக் கட்டி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் படம் லண்டனில் உள்ள இங்கிலாந்து வங்கியில் எடுக்கப்பட்டது என்று pinterest பதிவுகள் கிடைத்தன. அதனுடன் சில வீடியோக்களும் கிடைத்தது. பிபிசி வெளியிட்ட வீடியோவில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற இடத்தை காண முடிந்தது. எனவே, இந்த படம் இங்கிலாந்து வங்கி படம் என்பது உறுதியானது.

மற்றொரு தங்கக் கட்டிகள் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அது தென்னாப்பிரிக்காவில் உள்ள வங்கியில் எடுக்கப்பட்டது என்ற தகவல் நமக்கு கிடைத்தது. பிளிக்கர் தளத்தில் இந்த படத்தை நேஷனல் ஜியோகிராப்பி படம் என்று குறிப்பிட்டுப் பகிர்ந்திருந்தனர். தொடர்ந்து தேடியபோது நேஷனல் ஜியோகிராபி தளத்தில் இந்த படம் நமக்கு கிடைத்தது.

அசல் பதிவைக் காண: cbp.gov I Archive I nationalgeographic.org I Archive 2

கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அது அமெரிக்காவின் கஸ்டம்ஸ் அன்ட் பார்டர் ப்ரொடக்‌ஷன் அமைப்பின் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. பார்டர் பேட்ரோல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட முறைகேடான 3 மில்லியன் அமெரிக்க டாலர் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.

படுக்கை படம் அமேசான் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை தளத்தில் இருந்து எடுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதே போல் கார், சொகுசு தங்க நிற கப்பல், கறுப்பு நிற கப்பல், ஜெட் மற்றும் கருப்பு நிற ஜெட் விமானங்கள் படங்கள் எல்லாம் பல தளங்களில் இருந்து எடுக்கப்பட்டிருப்பது நமக்கு தெரியவந்தது.

அசல் பதிவைக் காண: amazon.in I Archive

கடைசியாக அடக்கஸ்தளம் படத்தை ஆய்வு செய்தோம். தொழிலதிபர் நாசர் அல் கராஃபி  குவைத்தில் உள்ள Sulaibikhat Cemeteryல் அடக்கம் செய்யப்பட்டதாக செய்திகள் கிடைத்தன.

அதன் படங்களை கூகுள் மேப்பில் தேடிப் பார்த்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் உள்ளது போன்று அங்கு பல்லாயிரக் கணக்கான கல்லறைகள் இருப்பதைக் காண முடிந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் எழுதப்பட்டுள்ள பெயரை வாசிக்க முடியவில்லை. அது அவருடைய கல்லறையாகக் கூட இருக்கலாம். இருப்பினும் அதை உறுதி செய்ய முடியவில்லை.

அசல் பதிவைக் காண: Google Map I Archive

குவைத் மன்னர் முதல் அனைவரின் கல்லறையும் இங்குதான் உள்ளது. அனைத்து உடல்களும் புதைக்கப்பட்ட இடங்கள் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன. குவைத் மன்னராக இருந்த அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அடக்கம் செய்யப்பட்ட இடம் கூட பார்ப்பதற்கு இப்படித்தான் உள்ளது.

அசல் பதிவைக் காண: gulfnews.com I Archive

இதன் மூலம் குவைத்தின் பெரும் பணக்காரரின் சொத்துக்கள் என்று பகிரப்படும் படங்கள் எதுவும் அவருக்கு உரியவை இல்லை என்றும், பல்வேறு தளங்களில் இருந்து எடுத்து குவைத் பணக்காரரின் சொத்து என்று தவறான தகவல் சேர்த்துப் பகிரப்பட்டுள்ளது என்பதும் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2011ம் ஆண்டு மறைந்த குவைத் தொழிலதிபரின் சொத்துக்கள் என்று பகிரப்படும் படங்கள் அவருக்கு சொந்தமில்லாத பல்வேறு தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:2011ல் இறந்த எகிப்து – குவைத் தொழில் அதிபரின் சொத்துக்கள் என்று பரவும் படங்கள் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False