FACT CHECK: ஒபாமாவின் மகள் பட்டமளிப்பு விழா தொப்பியில் இஸ்லாமியர்களின் தூதர் நபிகள் பற்றி எழுதியிருந்தாரா?

சமூக ஊடகம் சமூகம் சர்வதேசம்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மகள் பட்டமளிப்பு விழாவில் தன்னுடைய தொப்பியின் மீது முகமது நபி பற்றி கருத்து தெரிவித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிசெல் ஒபாமா பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற பெண் ஒருவரைக் கட்டித்தழுவும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. “A father gives his child nothing better than an education – Prophet Mohammad” என்று எழுதப்பட்டிருந்தது. அதாவது ஒரு தந்தை தன்னுடைய மகளுக்கு கல்வியைத் தவிர்த்து வேறு எந்த ஒரு சிறப்பான விஷயத்தையும் அளிக்க முடியாது – இறைதூதர் முகம்மது” என்று எழுதப்பட்டிருந்து. 

நிலைத் தகவலில், “அமெரிக்க முன்னால் அதிபர் ஒபாமாவின் துணைவியார் மிசெல் ஒபாமா தன் மகளின் பட்டமளிப்பு விழாவில்.. தலைக்கு அணிந்திருந்த தொப்பியில் எழுதப்பட்டிருந்த வாசகம், ” The father can give his child  nothing better than education,  Prophet Muhammad ” ஒரு தகப்பன் தன் குழந்தைக்கு ஊட்டுவதில் கல்வியைத் தவிர வேறெதுவும் சிறந்ததாக இருக்க முடியாது..நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை J K என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஜூன் 11ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்திருந்தனர்.

உண்மை அறிவோம்:

இந்த பதிவில் படத்தில் இருப்பது பாரக் ஒபாமாவின் மகள் என்று கூறுகிறார்களா, அல்லது பாரக் ஒபாமாவின் மகள் பட்டமளிப்பு விழா என்று குறிப்பிடுகிறார்களா என்பது குழப்பமாக இருந்தது. இந்த புகைப்படம் எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஏமன் நாட்டு மாணவியின் புகைப்படத்துடன், மிஷெல் ஒபாமா கட்டியணைக்கும் புகைப்படங்களுடன் ஒரு ஃபேஸ்புக் பதிவு கிடைத்தது. அதில் மாணவியின் பற்றிய விவரங்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் கூகுளில் தேடினோம்.

Archive

அப்போது மிஷெல் ஒபாமா வெளியிட்ட இன்ஸ்டிராகிராம் பதிவு கிடைத்தது. அதில், மேற்கண்ட வாசகம் எழுதப்பட்டிருந்த தொப்பியுடன் பெண் ஒருவர் இருக்கும் படம் இருந்தது. ஒபாமா இந்த படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2016ம் ஆண்டு பதிவிட்டிருப்பது தெரிந்தது.

அதில், “ஏமனில் பிறந்து வளர்ந்த ஒருபா 2006ம் ஆண்டில் உயர் நிலை கல்விக்காக நியூயார்க் நகரத்திற்கு வந்தார். இங்குதான் அவர் எழுத்து மற்றும் இலக்கியம் குறித்த தனது ஆர்வத்தையும் கல்லூரி பட்டப்படிப்பைப் பெற வேண்டும் என்ற விருப்பத்தையும் கண்டறிந்தார். ஒருபா தன்னுடைய குடும்ப பாரம்பரியத்தை உடைத்து முதல் தலைமுறை பட்டதாரியாகக் கல்லூரி படிப்பை முடித்தார். இன்று 2016ம் ஆண்டில் அவர் CCNYCityCollege மாணவியாகப் பட்டமளிப்பு விழா மேடையில் வெற்றிகரமாக நடைபோடுகிறார்” என்று குறிப்பிட்டிருந்தார். 

அசல் பதிவைக் காண: instagram.com I Archive

தி சிட்டி காலேஜ் ஆஃப் நியூயார்க் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் ஒருபா பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஒபாமாவின் மகள் அங்கு படித்து பட்டம் பெற்றதாக எதையும் குறிப்பிடவில்லை. இதன் மூலம் படத்தில் இருக்கும் பெண் ஒபாமா – மிஷெல் ஒபாமாவின் மகள் இல்லை என்பது உறுதியானது. 

அசல் பதிவைக் காண: ccny.cuny.edu I Archive

எனவே, ஒபாமாவின் மகள்கள் எப்போது பட்டம் பெற்றனர் என்று ஆய்வு செய்தோம். அவர்களது மூத்த மகள் மலியா ஒபாமா ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படித்து வருவதாகச் செய்திகள் கிடைத்தன. இரண்டாவது மகள் சாஷா ஒபாமா 2019ம் ஆண்டுதான் சிட்வெல் ஃபிரெண்ட்ஸ் பள்ளிக்கூடத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார் என்றும் செய்தி கிடைத்தது. இதன் மூலம் ஒபாமா மகளின் பட்டமளிப்பு விழாவும் இது இல்லை.

அசல் பதிவைக் காண: bbc.com I Archive 1 I today.com I Archive 2

இதன் அடிப்படையில் ஒபாமாவின் மகள் பட்டம் பெறும்போது தன்னுடைய தொப்பியில் இஸ்லாமியர்களின் இறைதூதர் நபிகள் பற்றிக் குறிப்பு எழுதியிருந்தார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மகள் பட்டமளிப்பு விழாவின் போது தன்னுடைய தொப்பியில் இஸ்லாமியர்களின் இறைதூதர் பற்றிய வாசகத்தை எழுதி வைத்திருந்தார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:ஒபாமாவின் மகள் பட்டமளிப்பு விழா தொப்பியில் இஸ்லாமியர்களின் தூதர் நபிகள் பற்றி எழுதியிருந்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False