அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் குடமுழுக்கையொட்டி, நேபாளம் சீதா கோவிலிலிருந்து பக்தர்கள் சீர் கொண்டு வருகின்றனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஜெய் ஶ்ரீராம் கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பேரணியாக வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் ஜனவரி 8, 2024 அன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "அயோத்தியில் நடக்கும் ஸ்ரீ ராமர் சீதா கோவில் கும்பாபிஷேகம் விழாவிற்கு சீதா பிராட்டி அவர்களுக்கு தாய் வீடான நேபாளத்தில் இருந்து தாய் வீட்டு சீர்வரிசை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அயோத்தியில் ஜனவரி 22, 2024 அன்று ராமர் கோவில் குடமுழுக்கு மற்றும் ராமர் சிலை நிறுவும் விழா நடைபெற உள்ளது. இதை வைத்து சமூக ஊடகங்களில் வதந்திகளும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. ராமர் கோவிலுக்கு ஆதரவாக என்று நினைத்துப் பரவும் வதந்திகள் அதிகமாக உள்ளன.

ராமர் கோவில் விழாவையொட்டி நேபாளத்தில் உள்ள சீதை கோவிலிலிருந்து பக்தர்கள் சீர்வரிசை கொண்டு வருகின்றனர் என்று வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். வட இந்தியாவில் கடும் குளிர் நிலவுகிறது... இந்த சூழலில் ஆயிரக் கணக்கானோர் நடைப்பயணமாக, குளிரை எதிர்கொள்ளப் பாதுகாப்பு எதுவும் இன்றி வருகிறார்களா... 22ம் தேதி வரை எங்குத் தங்குவார்கள் என்ற கேள்வி எழவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ 2023 ஜூலையில் இருந்து செய்தி, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. ஜூலை 9, 2023 அன்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அதே வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில், "Bageshwar dham sarkar kalash Yatra in greater Noida" அதாவது கிரேட்டர் நொய்டாவில் உள்ள பாகேஷ்வர் தாம் சர்க்கார் கலச யாத்திரை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: etvbharat-com I Archive

இதை அடிப்படையாகக் கொண்டு கூகுளில் தேடினோம். அப்போது இந்தியில் வெளியான சில செய்திகள் நமக்குக் கிடைத்தன. கிரேட்டர் நொய்டாவுக்கு அருகே உள்ள ஜெய்த்பூரில் ஜூலை 10 முதல் 16ம் தேதி வரை திரேந்திர கிருஷ்ண சாஸ்திரியால் பகவத் கதா நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கலச யாத்திரை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர் என்று அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ஜெய்ஶ்ரீராம் என்று கோஷமிட்டபடி நடந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த நிகழ்வுக்கும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது.

நம்முடைய ஆய்வில் நேபாளத்திலிருந்து சீர் எடுத்துக்கொண்டு அயோத்தி நோக்கி செல்லும் பக்தர்கள் என்று பரவும் வீடியோ உண்மை இல்லை என்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கிரேட்டர் நொய்டாவில் நடந்த வேறு ஒரு நிகழ்வின் போது பக்தர்கள் மேற்கொண்ட கலச ஊர்வலத்தின் வீடியோவை அயோத்திக்கு சீதை கோவில் இருந்து சீர் எடுத்து வரும் பக்தர்கள் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராமர் கோவிலுக்கு நேபாளத்தில் இருந்து சீர் கொண்டு வரும் பக்தர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False