கர்நாடகாவில் மோடியின் உருவ பொம்மையை எரிக்க வந்த காங்கிரஸ் கட்சியினரின் லுங்கியில் தீப்பிடித்து என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சிலர் நில நிற கொடியை ஏந்தியபடி வந்து உருவ பொம்மையை தீ வைத்து எரிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. தீ வைக்க வந்தவரின் வேட்டியில் தீ பற்றிக்கொள்கிறது. நிலைத் தகவலில், "கர்நாடகாவில் மோடியின் உருவ பொம்மையை எரித்த 5 காங்கிரஸ்காரர்களின் வேட்டியில் தீப்பிடித்தது....

மோடி என்று பெயர் வைத்த பொம்மை கூட தீயாகத்தான் இருக்கும் டா... முட்டா பய காங்கிரஸ் பயலுகளா..." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கர்நாடகாவில் மோடியின் உருவ பொம்மையை எரிக்க வந்த காங்கிரஸ் கட்சியினர் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், வீடியோவில் உள்ளவர்களின் கைகளில் காங்கிரஸ் கொடி இல்லை. நீல நிறத்தில் ஏதோ ஒரு கொடியை ஏந்தியிருந்தனர். மேலும், வீடியோவில் இடம் பெற்றுள்ள கடைகளின் பெயர் பலகையில் கன்னடத்துக்குப் பதில் மலையாளத்தில் எழுதப்பட்டுள்ளது. எனவே, இந்த வீடியோ கேரளாவில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை ஒருவர் 2012ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி "Fire escape, Pathanamthitta" என்று குறிப்பிட்டு யூடியூபில் பதிவிட்டிருப்பது தெரிந்தது. பத்தனம்திட்டா என்பது கேரளாவில் உள்ளது.

தொடர்ந்து தேடிய போது கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலை 5, 2012ம் தேதி ஏஷியா நெட் என்ற ஊடகம் யூடியூபில் வெளியிட்டிருந்த செய்தி நமக்குக் கிடைத்தது. அதில் எம்ஜி பல்கலைக் கழக துணை வேந்தருக்கு எதிரான நடந்த போராட்டத்தில் அவரது உருவ பொம்மையை தீ வைத்து எரிக்க முயன்ற போது வேஷ்டியில் தீ பற்றியது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேரளா மாணவர் சங்கத்தினர் (KSU workers) என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ 2012ம் ஆண்டு கேரளாவில் எடுக்கப்பட்டது என்பதும், பல்கலைக் கழக துணை வேந்தரின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காங்கிரஸ் கட்சியினர் இல்லை, கேரள மாணவர் சங்கத்தினர் என்பதும் உறுதியாகியுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் கர்நாடகாவில் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியினரின் லுங்கியில் தீ பிடித்தது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மோடியின் உருவ பொம்மையை எரிக்க வந்த கர்நாடக காங்கிரஸ் கட்சியினரின் லுங்கியில் தீ பிடித்தது என்று பரவும் வீடியோ 2012ல் கேரளாவில் பல்கலைக் கழக துணை வேந்தரின் உருவ பொம்மையை கேரள மாணவர் சங்கத்தினர் எரிக்க வந்த போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மோடியின் உருவ பொம்மையை எரிக்க வந்த காங்கிரஸ் கட்சியினரின் வேட்டியில் தீப்பிடித்ததா?

Fact Check By: Chendur Pandian

Result: False