பாஜக.,வுக்கு வாக்களிக்கச் சொன்னாரா அபிநந்தன்?
‘’பாஜக.,வின் சதி அம்பலம்,’’; ‘’பாஜக.,வுக்கு பிரசாரம் செய்யும் அபிநந்தன்,’’ போன்ற தலைப்புகளில் ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பவர் விங் கமாண்டர் அபிநந்தனா என்ற சந்தேகத்தில் நாம் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரம் இதோ உங்கள் பார்வைக்கு…
தகவலின் விவரம்:
சீமான் கூறுவது போல், பாஜக வின் திட்டமிட்ட சதி அம்பலம் - இவர் யார் என்று தெரிகிறதா?
உண்மை அறிவோம்:
இந்த பதிவை கடந்த ஏப்ரல் 13ம் தேதியன்று வெளியிட்டுள்ளனர். பாஜக எதிர்ப்பு மனநிலை உள்ளவர்களால் அதிகம் பகிரப்பட்டுள்ள இந்த பதிவில் இருக்கும் புகைப்படம் உண்மையில் அபிநந்தனுடையதுதானா என தேடிப் பார்த்தோம்.
தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் இந்திய விமானப் படையில் விங் கமாண்டராகப் பணிபுரிகிறார். இவர், கடந்த பிப்ரவரி 27, 2019 அன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தானிய போர் விமானம் ஒன்றை வழிமறித்து, அதனை துரத்திச் சென்று தாக்கினார். இதன்போது, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்துவிட்ட அபிநந்தன், பாகிஸ்தானியர்களிடம் சிக்கிக் கொண்டார். பின்னர் அவர் தாக்கப்பட்டதும், அவரை பாகிஸ்தான் இந்தியாவிடம் திரும்ப உயிருடன் ஒப்படைத்ததும் பலருக்கும் தெரிந்த கதைதான். இந்த சம்பவம் காரணமாக, அபிநந்தன் இந்திய மக்களிடையே ஒரு கதாநாயகனாக உருவெடுத்துள்ளார். அவர் போலவே, பலர் மீசை கூட வைத்து, உலா வருகின்றனர்.
இந்த சூழலில்தான், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படமும் சமூக ஊடகங்களில் பரவ தொடங்கியுள்ளது. இது போலியான புகைப்படம் என ஏற்கனவே நமது இந்தி மொழிப் பிரிவு ஆய்வு செய்து, முடிவுகளை சமர்ப்பித்துள்ளது. இதனை விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இருந்தாலும் தமிழ் மொழியில், நாமும் ஒருமுறை உண்மை கண்டறியும் சோதனை ஒன்றை நடத்தினோம். அபிநந்தனின் உண்மை புகைப்படத்தையும், ஃபேஸ்புக்கில் உலா வரும் புகைப்படத்தையும் ஒன்றாக ஒப்பிட்டு பார்த்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நபரின் கழுத்து சிறியதாக இருப்பதும், அபிநந்தனின் கழுத்து நீண்டதாக உள்ளதும் தெரியவந்தது. இது தவிர, புகைப்படத்தில் இருக்கும் நபருக்கு வலது கண்ணின் கீழே மரு ஒன்றும், வலது கன்னத்தில் தழும்பு ஒன்றும், தாடையில் ஒரு மருவும் உள்ளது. ஆனால், உண்மையான அபிநந்தனுக்கு அப்படி எந்த அறிகுறிகளும் இல்லை. ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.
மேலும், உண்மையான அபிநந்தன் தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். முழு ஓய்வு பெற்ற பிறகு, மீண்டும் போர் விமானத்தில் அவர் பறக்க முடியுமா எனச் சோதனை நடத்திவிட்டே, அவரை பணியில் ஈடுபட அனுமதிக்க உள்ளதாக, இந்திய விமானப் படை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
தற்போது அபிநந்தன் என்ன செய்கிறார் என கூகுளில் தேடிப் பார்த்தோம். இதன்போது, அவர் அதிமுக்கிய பாதுகாப்பு வளையத்தில் உள்ளதாகவும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து அவரை அப்புறப்படுத்தி வேறொரு இடத்தில் வைத்துள்ளதாகவும், தகவல்கள் கிடைத்தன.
இதுபற்றிய ஆதார செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கும்போது, அதிமுக்கிய பாதுகாப்பு வளையத்தில் உள்ள ஒரு விங் கமாண்டர் தனது உயிருக்கு ஆபத்து உள்ள சூழலில், பொதுவெளியில் இப்படி பகிரங்கமாக நடமாட முடியாது என தெரியவருகிறது.
மேலும், உண்மை அபிநந்தனுக்கும், போலி அபிநந்தனுக்கும் இடையே ஏராளமான அடையாள வித்தியாசம் உள்ளது. எனவே, குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர் உண்மையான அபிநந்தன் இல்லை என தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான புகைப்படம், வீடியோ மற்றும் செய்தி எதையும் உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், நீங்கள் உரிய சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.