
வங்கதேசத்தில் மத வெறியர்களால் எரித்து கொலை செய்யப்பட்ட இந்து இளைஞர் தீபு சந்திரதாஸின் கடைசி நிமிடங்கள் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இளைஞர் ஒருவரை போலீசார் அழைத்து செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்துக்கள் #சிறுபான்மையானால்
😭😭😭😭 தமிழகத்தில் காசாவுக்காக பொங்கிய ஒரு அரசியல்வாதி இதை கண்டிப்பார்களா பங்களாதேஷ் மத வெறியர்களால் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட அப்பாவி இந்து #தீபு_சந்திரதாஸ்😭😭😭😭😭” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதே போன்று மற்றொரு பதிவில், “இளைஞன் ” #திபு_சந்திரதாஸ் ” கடைசி நிமிட மனதை பதப்பதைக்க வைக்கும் வீடியோ காட்சி. 😢😢😢
பங்களாதேஷில் நடந்த கலவரத்தில் இந்து இளைஞரான திபு சந்திரதாஸ் என்ற நபரை அடித்துக் கொல்லப்படுவதற்கு முன்பு காவல்துறையிடம் தஞ்சம் அடைகிறார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தன்னை கொல்ல வருகிறார்கள் என்று கதறி அழும்போது கூட காவல்துறை வலுக்கட்டாயமாக பிடித்து அவரை அந்த ஜிஹாதிகளிடமே ஒப்படைத்த பின் அவரை உயிருடன் எரித்து கொள்ளும் மனதை பதபதைக்க வைக்கும் காட்சி” என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வங்கதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, முகமது நபி பற்றி அவதூறாக பேசியதாக கூறி தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் தாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். அந்த இளைஞரை வங்கதேச போலீசாரை வன்முறையாளர்களிடம் ஒப்படைத்ததாகக் குறிப்பிட்டு நம் தமிழ்நாட்டில் பலரும் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். மேலும், சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2025 நவம்பரில் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. தீபு சந்திர தாஸ் கொலை சம்பவம் 2025 டிசம்பர் 18ம் தேதி நடந்தது. ஆனால், இந்த வீடியோவோ சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நவம்பர் 17ம் தேதி வெளியாகி உள்ளது. இதன் மூலம் இது தீபு சந்திரதாஸின் கடைசி வீடியோ இல்லை என்பது உறுதியாகிறது.
தொடர்ந்து தேடியபோது, போலீஸ் அடித்ததும் அழ ஆரம்பித்த டாக்கா கல்லூரி மாணவர் என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை வங்கதேச ஊடகங்கள் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. தொடர்ந்து தேடியபோது, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு நவம்பர் மாதம் வங்கதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததைத் தொடர்ந்து வங்கதேசத் தலைநகரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டதாகவும், அப்போது டாக்கா கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் செய்திகள் கிடைத்தன.
இந்த வீடியோவை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வங்க மொழி குழுவினருக்கு அனுப்பி வீடியோ பற்றி கேட்டோம். அதை பர்த்த்துவிட்டு நம்மிடம், அந்த நபர் டாக்கா கல்லூரி லோகோவுடன் கூடிய டி-ஷர்ட் அணிந்திருக்கிறார். அவரது டி-ஷர்டின் பின் பக்கத்தில் Momin என்று எழுதப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. இது அவருடைய பெயர். தான் டாக்கா கல்லூரியில் படிப்பதாகவும் தான் எந்த போராட்டத்திலும் பங்குபெறவில்லை என்று கூறி அவர் அழுகிறார். அவரை அங்கிருந்து செல்லும்படி காவல்துறையினர் கூறுகின்றனர்.
போலீசாரிடம் நாங்கள் அனைவரும் கல்லூரி வளாகத்திற்குள்தான் இருந்தோம் என்று மற்றொரு மாணவர் வந்து பேசுவதையும் காண முடிகிறது. இவர் டாக்கா கல்லூரி மாணவர். தீபு சந்திரதாஸ் வங்கதேசத்தின் மைமென்சிங் மாவட்டத்தில் உள்ள பாலுக்கா உபசிலாவில் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி மாணவர் அல்ல, அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்தவர். தீபு சந்திரதாஸை வன்முறையாளர்களின் கைகளில் போலீசார் ஒப்படை வீடியோ என்று பரவும் தகவல் தவறானது என்றனர்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ நவம்பர் 18ம் தேதி சமூக ஊடகங்களில் வெளியாகி இருப்பதை உறுதி செய்துள்ளோம். மேலும் அந்த நபர் டாக்கா கல்லூரி மாணவர் என்று அப்போதே வங்கதேச ஊடகங்களில் செய்தி வெளியாகி இருப்பதையும் கண்டறிந்துள்ளோம். வன்முறையில் ஈடுபட்டதாக அவரை போலீசார் பிடித்திருப்பது அவரது அழுகை உரையாடல் மூலம் உறுதி செய்துள்ளோம்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வங்கதேசத்தில் கல்லூரி மாணவர் ஒருவரை 2025 நவம்பரில் வன்முறையில் ஈடுபட்டதற்காக போலீசார் பிடித்த வீடியோவை 2025 டிசம்பரில் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபடுத்தி தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:வங்கதேசத்தில் எரித்துக் கொல்லப்பட்ட தீபு சந்திரதாஸ் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


