
தமிழகத்தில் பால் விலையை தற்போது அவசர அவசரமாக 6 ரூபாய் உயர்த்திவிட்டு வருகிற மே 16, 2021 முதல் 3 ரூபாய் குறைக்க தி.மு.க அரசு உத்தரவிட்டுள்ளது என்று ஒரு தகவல் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பாலிமர் வெளியிட்ட செய்தியை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளனர். மேலும் ஒரு அரசாணையும் அதில் உள்ளது. நிலைத் தகவலில், “#கணக்கு_தெரிந்தவர்கள்_கொஞ்சம்_தெளிவா_சொல்லுங்கப்பா
என்னடா இது உருட்டுலையும் உலகமகா உருட்டா இருக்கே. பால் விலையை 6 ரூபாய் உயர்த்தி 3 ரூபாய் குறைத்து இருக்கிறார்கள்.😂😂 அதுவும் முன்களப்பணியாளர்கள் கொடுக்கும் முட்டு பெரிய முட்டா இருக்கியா😂😂😂” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை தாமரை தினேஷ் பா.ஜ.க என்பவர் 2021 மே 8 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் பால் விலை ரூ.3 குறைக்கப்படும் என்றும் அது வருகிற 2021 மே 16ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார். இந்த நிலையில், தமிழக அரசு பால் விலையை ரூ.6 உயர்த்திவிட்டு 3 ரூபாய் குறைத்துள்ளது என்று சில ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தினத் தந்தி வெளியிட்டிருந்த செய்தியில், பால் கொள்முதல் விலை ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது என்று தலைப்பிட்டிருந்தனர். செய்தியின் உள்ளே, “அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு ரூ.6 மட்டும் உயர்த்தி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பொதுமக்களின் நலன் கருதி பால் விற்பனை விலையினை அரசு நன்கு பரிசீலனை செய்து அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு ரூ.6-ல் இருந்து ரூ.3 ஆக குறைத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு ஆணை வருகிற 16-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பால் விலை ரூ.6 உயர்த்தப்பட்டு, அதிலிருந்து ரூ.3 குறைக்கப்படுகிறது என்றே சொல்லப்படுகிறது.

அசல் பதிவைக் காண: dailythanthi.com I Archive
பால் விலை உயர்த்தப்பட்டதா என்று நாம் ஆய்வு செய்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் அரசாணை ஒன்றும் உள்ளது. அதை பார்த்தோம். “பால்வளத்துறை – பால் விற்பனை விலை குறித்து – ஆணை வெளியிடப்படுகிறது. நாள் 7-5-2021” என்று இருந்தது.
உள்ளே, “அரசாணை எண்.112, கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை, நாள் 17.8.2019
1) மேலே படிக்கப்பட்ட அரசாணையில் 19.8.2019 முதல் கீழ்க் கண்டவாறு பால்கொள்முதல் மற்றும் பால் விற்பனை விலையை உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது:
I) கொள்முதல் விலை:
ஒரு லிட்டர் பசும்பாலில் தற்போதைய கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 உயர்த்தப்பட்டு 28ல் இருந்து ரூ.32 ஆக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஒரு லிட்டர் எருமைப்பாலின் தற்போதைய கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.6 உயர்த்தப்பட்டு ரூ.35ல் இருந்து ரூ.41 ஆக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
II) விற்பனை விலை:
அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு ரூ.6 உயர்த்தி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
2) பொது மக்கள் நலன் கருதி பால் விற்பனை விலையினை அரசு நன்கு பரிசீலனை செய்து, அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு ரூ.6ல் இருந்து 3 ஆக குறைத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

3) இந்த விலை குறைப்பு 16.5.2021 முதல் அமலுக்கு வருகிறது” என்று இருந்தது.
அதாவது 2019ம் ஆண்டு பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டது. தற்போது தீவிர ஆலோசனை செய்த அரசு அந்த விலை உயர்வை லிட்டருக்கு ரூ.3 ஆக குறைக்கிறது என்று தெரிவித்துள்ளனர். தலையை சுற்றி மூக்கைத் தொட்ட கதையாக அறிவித்துள்ளனர்.
பால் விலை ரூ.3 குறைக்கப்படுகிறது என்று ஒற்றை வரியில் தெரிவித்திருக்கலாம். அ.தி.மு.க ஆட்சியில் விலை உயர்த்தப்பட்டதை சுட்டிக் காட்ட நினைத்து விரிவான அறிவிப்பு வெளியிட்டது தி.மு.க-வுக்கு எதிராக எதிர் தரப்பினர் பயன்படுத்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டதாக, தெரிகிறது.
இது தொடர்பாக புதிதாக பொறுப்பேற்றுள்ள பால் வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசரைத் தொடர்புகொண்டு பேசினோம். “பால் விலை ரூ.6 உயர்த்தப்படவில்லை. 2019ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் பால் விலை உயர்த்தப்பட்டதை குறிப்பிட்டுள்ளோம். அந்த விலை உயர்விலிருந்து ரூ.3 குறைத்துள்ளதாக அறிவித்துள்ளோம். அரசாணையைச் சரியாக படிக்காததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பால் விலை உயர்த்தப்படவில்லை. குறைத்தே உத்தரவிட்டுள்ளோம். எங்கள் தேர்தல் அறிக்கையில் பால் விலை குறைக்கப்படும் என்று அறிவித்தோம். தற்போது இந்த அறிவிப்பின் மூலம் அதை நிறைவேற்றியுள்ளோம்” என்றார்.
ஆவின் இணையதளத்திலும் பால் விலை உயர்த்தப்பட்டதாக எந்த அறிவிப்பும் இல்லை. சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருவது போல ப்ரீமியம் பால் விலை 31 ஆக உயர்த்தப்படவில்லை. 25 ஆகவே உள்ளது. கடைகளிலில் விசாரித்த போது விலை எதுவும் உயரவில்லை, நேற்று விற்ற விலையில்தான் ஆவின் விற்பனை செய்கிறோம் என்றனர்.
2019ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் பால் விலை ரூ.6 உயர்த்தப்பட்டதை இந்த அரசாணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2019 ஆண்டு என்பதை ஊடகங்கள் அகற்றிவிட்டு செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் பால் விலை ரூ.6 உயர்த்தப்பட்டு அதிலிருந்து ரூ.3 குறைக்கப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டுவிட்டது. இது தெரியாமல் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் அடிப்படையில் தற்போது 2021 மே மாதம் பால் விலை ரூ. 6 உயர்த்தப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழகத்தில் பால் விலை ரூ.6 உயர்த்தப்பட்டு அதில் இருந்து ரூ.3 குறைக்கப்படுகிறது என்று தி.மு.க அரசு அறிவித்ததாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தி.மு.க அரசு பால் விலையை ரூ.6 உயர்த்திவிட்டு ரூ.3 குறைத்ததா?– அரசாணையை சரியாக படிக்கத் தெரியாததால் வந்த குழப்பம்
Fact Check By: Chendur PandianResult: False

இரண்டாம் பத்தியில் விற்பனை விலை 6ரூபாய் ஏத்தி அதில் 3ரூபாய் குறைத்து தான் ஆணையிட்டுள்ளது விற்பனை விலை 3ரூபாய் குறைத்து அல்ல கணக்கின்படி புதிதாக விலை 6ரூபாய் ஏத்தி 3ரூபாய் குறைத்து உள்ளனர். அது மட்டுமல்ல புதிதாக 3ரூபாய் ஏற்றி உள்ளனர் இதுவும் ஒரு விலை ஏற்றம் தான் அமலுக்கு வரும்பொழுது புரியும்.
படிச்சி பாத்திங்க யோசித்து பாத்திங்கலா..