
பியூட்டி பார்லர் பெண்ணை சில ஆண்டுகளுக்கு முன்பு தாக்கிய நபரைத்தான் தற்போது பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர் தி.மு.க அறிவித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பியூட்டி பார்லரில் உள்ள பெண்களை ஒருவர் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆதரிப்பீர் உங்கள் பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளரை. ஒரு பொம்பளை மேல கையை வைக்கக்கூடாதுன்னு எவ்வளவு நாகரீகமா கஷ்டப்பட்டு காலை மட்டும் யூஸ் பன்றார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை அறந்தை பாஜக நண்பர்கள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் அரசை சிவா என்பவர் 2021 மார்ச் 17ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2018ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம், அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் எஸ்.செல்வகுமார் என்பவர் அந்த பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்த பெண்ணை தாக்கிய வீடியோ செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. பணப் பிரச்னை காரணமாக அந்த பெண்ணை அவர் தாக்கியதாகக் கூறப்பட்டது. அவர் பெயர் செந்தில்குமார் என்பதை தி.மு.க கழகம் வெளியிட்ட அறிக்கை வாயிலாக உறுதி செய்துகொள்ள முடியும். விகடனில் அந்த அறிக்கையை வைத்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

அசல் பதிவைக் காண: vikatan.com I Archive
கொரோனா காலத்தில் பெண் மருத்துவரைத் தாக்கிய திருச்சி தி.மு.க நிர்வாகி என்று 2020ம் ஆண்டு இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. அப்போது, இந்த சம்பவம் பெரம்பலூரில் நடந்தது, தாக்கப்பட்ட பெண் மருத்துவர் இல்லை, அழகுக்கலை நிலையம் நடத்துபவர், தாக்கிய நபரின் பெயர் செந்தில்குமார் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த நிலையில் பெரம்பலூர் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார் என்றும், பெண்களைத் தொடக்கூடாது என்பதற்காக காலால் மிதித்தார் என்றும் அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பியூட்டி பார்லர் பெண்ணை தாக்கிய நபருக்குத்தான் தற்போது பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தோம்.
தி.மு.க வேட்பாளர் பட்டியலை முதலில் பார்த்தோம். அதில் பெரம்பலூர் தனித் தொகுதியில் போட்டியிடுபவர் பெயர் எம்.பிரபாகரன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த மாவட்டத்தில் மொத்தம் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே உள்ளது. பெரம்பலூரில் எம்.பிரபாகரன் போட்டியிட குன்னம் தொகுதியில் எஸ்.எஸ்.சிவசங்கர் போட்டியிடுகிறார் என்று தி.மு.க வேட்பாளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: dmk.in I Archive
தி.மு.க சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட எம்.பிரபாகரன் வேட்புமனு தாக்கல் செய்ததாக படத்துடன் ஊடகங்கள் செய்தியும் வெளியிட்டிருந்தன. தி.மு.க வேட்பாளர் எம்.பிரபாகரன் பெரம்பலூர் சார் ஆட்சியர் ஜெ.இ.பத்மஜாவிடம் வேட்புமனுவை வழங்கினார் என்று செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசல் பதிவைக் காண: instanews.city I Archive 1 I dailythanthi.com I Archive 2
நம்முடைய ஆய்வில்,
பெரம்பலூரில் பியூட்டி பார்லர் பெண்களை தாக்கிய தி.மு.க பிரமுகர் பெயர் எஸ்.செந்தில்குமார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளரின் பெயர் எம்.பிரபாகரன் என்பது தி.மு.க அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலில் இருந்து தெரியவந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் பெரம்பலூர் தொகுதியில் எம்.பிரபாகரனும், குன்னம் தொகுதியில் சிவசங்கரனும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பியூட்டி பார்லர் பெண்ணை தாக்கிய தி.மு.க பிரமுகர் பெரம்பலூர் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பெரம்பலூர் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடுபவர் பியூட்டி பார்லர் பெண்களைத் தாக்கியவர் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பெண்களைத் தாக்கிய பெரம்பலூர் தி.மு.க வேட்பாளர்?– ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
