சேலத்தில் இ.வி.எம் இயந்திரம் என நினைத்து தொழிலாளியைத் தாக்கி துளையிடும் கருவியை காவல் நிலையத்தில் ஒப்படைத்து முற்றுகையிட்ட சேலம் மாவட்ட திமுக கூட்டணிக் கட்சியினர் என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பாலிமர் தொலைக்காட்சி ட்வீட் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், "EVM இயந்திரம் என நினைத்து தொழிலாளியை தாக்கி துளையிடும் கருவியை காவல் நிலையத்தில் ஒப்படைத்து முற்றுகையிட்ட சேலம் மாவட்ட திமுக கூட்டணி கட்சியினர்!" என்று இருந்தது.

நிலைத் தகவலில், "மூளையில்லாத திமுக கொத்தடிமைகளின் Atrocities 😂😂😂😂😂😂😂. இந்த லட்சணத்துல இவனுங்க வடக்கனை முட்டாள்ன்னு சொல்லிட்டு இருக்கானுங்க" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை I Support Maridhas என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஏப்ரல் 9 அன்று பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சென்னை வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் இருசக்கர வாகனத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த இயந்திரம் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படவில்லை என்று மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்திருந்த நிலையில், அது வாக்குப்பதிவு இயந்திரமே இல்லையாம், தொழிலாளர்கள் பயன்படுத்தும் டூல்ஸ் பாக்ஸ் என்று கேலியாக சில பதிவுகள் பரப்பப்பட்டன. அது வாக்குப்பதிவு இயந்திரம்தான், அதில் வாக்குகள் பதிவாகி இருந்தன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறிவிட்டார்.

Archive

இந்த நிலையில் சேலத்தில் தொழிலாளி ஒருவர் எடுத்துச் சென்ற டூல்ஸ் பாக்ஸை தி.மு.க கூட்டணியினர் பறித்து, தொழிலாளியைத் தாக்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக பாலிமர் செய்தியில் வந்ததாக ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

சேலத்தில் அப்படி ஏதும் சம்பவம் நடந்ததா என்று அறிய, இந்த செய்தியை கூகுளில் தேடினோம். நமக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. பாலிமர் தொலைக்காட்சியின் இணையதள பக்கத்தில் வெளியான செய்திகளைப் பார்த்தோம். அதிலும் இந்த செய்தி இல்லை. எனவே, பாலிமர் தொலைக்காட்சியின் ட்விட்டர் பக்கத்தைப் பார்த்தோம். ஏப்ரல் 6ம் தேதி வரை வெளியான பதிவுகளில் இந்த செய்தி உள்ளதா என்று தேடினோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

பாலிமர் நியூஸ் ட்விட்டர் பக்கத்தில், பாலிமர் இணையதளத்தில் வெளியான செய்திகளின் லிங்க் மற்றும் பிரேக்கிங் நியூஸ் கார்டுகள் மட்டுமே பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று புகைப்படங்களுடன் கூடிய செய்திக் குறிப்பை அவர்கள் ஷேர் செய்வது இல்லை என்றும் தெரிந்தது.

Archive

எனவே, பாலிமர் தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவைச் சேர்ந்த அருணைத் தொடர்புகொண்டு இந்த செய்தி எப்போது வந்தது என்று கேட்டோம். அவர், "இது பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி இல்லை. போலியாக உருவாக்கியுள்ளனர்" என்றார்.

இந்த ட்வீட் பதிவில் உள்ள போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்ட படத்தைத் தேடினோம். கூகுளில் பல்வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடியபோது 2021 மார்ச் 28ம் தேதி தினமணியில் வெளியான செய்தியில் இந்த புகைப்படம் இருப்பது நமக்குக் கிடைத்தது. அதில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் போலீசார் கூலித் தொழிலாளியைக் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து த.மு.மு.க-வினர் செய்யாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் என்று இருந்தது.

அசல் பதிவைக் காண: dinamani.com I Archive

இதன் அடிப்படையில், தொழிலாளி எடுத்துச் சென்ற டூல்ஸ் பாக்ஸை வாக்குப்பதிவு இயந்திரம் என நினைத்து அதை பறித்து தி.மு.க கூட்டணிக் கட்சியினர் போலீசில் ஒப்படைத்தார்கள் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சேலத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் என நினைத்து தொழிலாளி கொண்டு சென்ற டூல்ஸ் பாக்ஸை பறித்து போலீசில் ஒப்படைத்த தி.மு.க கூட்டணியினர் என்று பரவும் செய்தி பொய்யானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சேலத்தில் EVM இயந்திரம் என நினைத்து டூல்ஸ் பாக்ஸை போலீசில் ஒப்படைத்தனரா தி.மு.க கூட்டணியினர்?

Fact Check By: Chendur Pandian

Result: False