
பினராயி விஜயன் வாக்களித்த பள்ளியின் லட்சணம் என்றும் ஒரு பள்ளியின் படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வாக்களித்த படங்களை ஒப்பிட்டு ஒரே படமாக பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எடப்பாடியார் வாக்களித்த அவர் கிராமத்தின் சிலுவம்பாளையம் அரசுத் தொடக்கப் பள்ளியையும், பினராயி வாக்களித்த அவரது சொந்த ஊர் பள்ளியின் லட்சணமும் 👇 PS. இனி யாராவது கேரளாவ பாருன்னு சொல்லட்டும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை TeaKadai_returns என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஏப்ரல் 8 அன்று பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடந்து வருகிறது. தமிழகம், கேரளாவில் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. ஏப்ரல் 6ம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி அவரது சொந்த ஊரில் வாக்களித்தார். அதே போல் கேரள முதல்வரும் தன் சொந்த ஊரில் வாக்களித்தார். இந்த படங்கள் எல்லாம் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியானது. அதில், பினராயி விஜயன் படத்தை மட்டும் மாற்றிப் பதிவிட்டிருப்பது தெரிந்தது. எனவே, பினராயி விஜயன் வாக்களித்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது, அது அரசு பள்ளியா என்று ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: newindianexpress.com I Archive
முதலில் 2021 சட்டமன்ற தேர்தலில் பினராயி விஜயன் வாக்களித்த புகைப்படத்தை தேடினோம். அவர் தன் சொந்த ஊரான பினராயியில் உள்ள அமலா ஆர்.சி பள்ளியில் வாக்களித்தார் என்று படம் மற்றும் வீடியோக்கள் கிடைத்தன. அதில் பினராயி விஜயன் வாக்களிக்க வந்த வாக்குச்சாவடியில் திரைகள் எல்லாம் போடப்பட்டு அழகாக இருந்தது. தலைக்கு மேலே ப்ரொஜெக்டர் இருப்பதை காண முடிந்தது. அதைப் பார்க்கும் போது ஸ்மார்ட் கிளாஸ் ஆக அது மாற்றப்பட்டிருக்கலாம் என புரிந்துகொள்ள முடிகிறது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று தேடினோம். அப்போது 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது எடுக்கப்பட்ட படம் என்று தி இந்து நாளிதழில் வெளியான செய்தி மற்றும் படங்கள் நமக்கு கிடைத்தன. பினராயி விஜயன் வாக்களித்தது அமலா ஆர்.சி பள்ளி என்றும் அது தனியாரால் நிர்வகிக்கப்படும் பள்ளி என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: thehindu.com I Archive
நம்முடைய ஆய்வின் போது, இந்த படத்தை வைத்து 2019ம் ஆண்டே ஒரு ஒப்பீடு பதிவு வைரலாகி இருப்பது தெரிந்தது. வளர்ச்சி அடைந்த மாநிலம் என்று கூறப்படும் கேரள அரசு பள்ளியின் நிலை இதுதான். ஆனால் உண்மையில் வளர்ச்சி அடைந்த குஜராத் மாநிலத்தின் அரசு பள்ளியைப் பாருங்கள் என்று பிரதமர் மோடி வாக்களித்த படத்தை வைத்து வதந்தி பரவியுள்ளது. அப்போது ஒன் இந்தியா மலையாளத்தில் வெளியான செய்தி நமக்கு கிடைத்தது.
அதில், “பினராயி விஜயன் வாக்களித்தது அரசு பள்ளி இல்லை. அது தனியார் பள்ளி. மேலும், கேரளாவில் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன.

அசல் பதிவைக் காண: oneindia.com I Archive
பிரதமர் மோடி வாக்களித்தது அரசு பள்ளி இல்லை, உண்மையில் அது தனியாரால் நிர்வகிக்கப்படும் பள்ளி” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதன் மூலம் 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட படத்தை எடுத்து வந்து இப்போது பதிவிட்டு, கேரள அரசு பள்ளிகளைக் காட்டிலும் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன என்று கூறி பதிவிட்டிருப்பது உறுதியாகிறது. தமிழக அரசு பள்ளிகளின் நிலை தொடர்பாக நாம் ஆய்வு செய்யவில்லை. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் சரியானதா என்று மட்டும் பார்த்தோம்.
நம்முடைய ஆய்வில், பினராயி விஜயன் வாக்களித்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டது இல்லை, 2019ல் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் வாக்களித்தது அரசு பள்ளி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளியில் சுண்ணாம்பு அடிக்காததற்கு எல்லாம் மாநில முதல்வரை குற்றம் சொல்வது பொருத்தமாக இருக்காது. இந்த புகைப்படத்தை வைத்து 2019ம் ஆண்டு முதல் விஷம தகவல் பரப்பப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
பினராயி விஜயன் வாக்களித்த பள்ளி அரசு பள்ளி இல்லை என்பதால், அதையும் தமிழக அரசின் பள்ளியையும் ஒப்பிட்டு பதிவிடுவது சரியானதாக இருக்காது. அதுவும் பழைய படத்தை வைத்துக்கொண்டு ஒப்பிடுவது சரியானதாக இல்லை. இதன் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பினராயி விஜயன் வாக்களித்த பள்ளியின் படம் என்று பகிரப்படுவது 2019ல் எடுக்கப்பட்ட படம் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பினராயி விஜயன் வாக்களித்த பள்ளியின் லட்சணம் என்று பரவும் படம் தற்போது எடுத்தது இல்லை!
Fact Check By: Chendur PandianResult: Partly False
