
1999ம் ஆண்டு ஒடிஷாவில் கிறிஸ்தவ மத போதகரும் சமூக சேவகருமான கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தபோது, அந்த கிராமத்தின் கவுன்சிலராக திரௌபதி முர்மு இருந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive
கிறிஸ்தவ மத போதகரும் சமூக சேவகருமான கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன்னுடைய இரண்டு மகன்களுடன் இருக்கும் புகைப்படம், அவரும் அவரது மகன்களும் எரித்துக்கொள்ளப்பட்ட ஜீப்பின் புகைப்படம் மற்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் புகைப்படங்களை வைத்துப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “ஸ்டெயின்ஸ் ஐயா, உங்களையும் இரு மகன்கள் பிலீப், திமோத்தி ஆகியோரையும் நீங்கள் இரவு நேரத்தில் உறங்கிக்கொண்டிருந்த வாகனத்தோடு தீ வைத்துக் கொன்ற, கொடூர கிராமத்தின் அன்றைய கவுன்சிலர் தான் இன்று எங்கள் இந்தியாவின் ஜனாதிபதி திரௌபதி முர்மூ” என்று எழுதப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “இரத்த கறைபடிந்த வரலாறு., பாஜக வில் இதைவிடத் தகுதி தேவையில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை தென்குமரி தென்றல் என்ற ட்விட்டர் ஐடி-யைக் கொண்டவர் 2022 ஜூலை 25ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஃபேஸ்புக்கிலும் இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஜெபராஜ் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் இந்த பதிவை 2022 ஜூலை 26ம் தேதி பதிவிட்டுள்ளார். இவர்களைப் போல பலரும் இந்த புகைப்பட பதிவை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2019ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பதவியேற்ற போது, அதில் பிரதாப் சாரங்கி என்பவர் இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் மிகவும் எளிமையான நபர் என்று பா.ஜ.க-வினர் பிரசாரம் செய்தனர். ஒடிஷாவில் உயிரோடு எரித்துக்கொள்ளப்பட்ட கிரஹாம் ஸ்டெயின்ஸ் கொலையோடு தொடர்புடையவர் என்று எதிர்க்கட்சியினர் தகவல் பரப்பினர். அந்த கொலை நடந்த போது பஜ்ரங் தள் அமைப்பின் ஒடிஷா மாநில தலைவராக சாரங்கி இருந்தார். நேரடியாக அவர் மீது எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்று கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
தற்போது ஒடிஷாவை சார்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள நிலையில் கிறிஸ்தவ மத போதகர் கிரஹாம் ஸ்டெயின்ஸ் கொல்லப்பட்ட கிராமத்தின் கவுன்சிலராக இருந்தவர் திரௌபதி முர்மு என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
1999ம் ஆண்டு கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்களும் கொல்லப்பட்ட பகுதியின் கவுன்சிலராக திரௌபதி முர்மு இருந்திருந்தால் கட்டாயம் ஏதாவது ஒரு பத்திரிக்கையாவது அதைப் பற்றி செய்தி வெளியிட்டிருக்கும். ஆனால், எப்படி எந்த ஒரு தகவலும் இல்லை. மேலும், சாரங்கி தொடர்பாக வதந்தி பரவிய போது அந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுவார்கள் பட்டியலைப் பார்த்தோம். அப்போது கூட திரௌபதி முர்முவின் பெயர் எங்கும் இல்லை.

உண்மைப் பதிவைக் காண: indiatomorrow.net I Archive
ஸ்டெயின்ஸ் கொல்லப்பட்ட கிராமத்தின் கவுன்சிலராக திரௌபதி முர்மு இருந்தாரா என்று அறிய, அவர் 1997ம் ஆண்டு எந்த உள்ளாட்சி அமைப்பில் கவுன்சிலராக இருந்தார் என்று தேடினோம். அப்போது, ரைரங்பூர் (Rairangpur) நோட்டிஃபைடு ஏரியா கவுன்சிலில் வார்டு உறுப்பினராக இருந்தார் என்று செய்தி கிடைத்தது. நோட்டிஃபைடு ஏரியா கவுன்சில் என்பது நம் ஊரில் பேரூராட்சிக்கு இணையானது. தற்போது ரைரங்பூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்று செய்தி கிடைத்தது. இது ஒடிஷாவில் மயூர்பஞ்சு (Mayurbhanj) என்ற மாவட்டத்தில் இருப்பதாக செய்திகள் கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: indiatimes.com I Archive
கிறிஸ்தவ மத போதகர் ஸ்டெயின்ஸ் எந்த ஊரில் கொல்லப்பட்டார் என்று தேடினோம். 1999ம் ஆண்டு வெளியான செய்திகளைத் தேடி எடுத்தோம். பிபிசி, சிஎன்என் உள்ளிட்ட ஊடகங்களின் இணையதளத்தில் 1999ம் ஆண்டு இந்த செய்தி வெளியாகி இருந்தது. அதில் கென்டுஜஹர் (Kendujhar/ Keonjhar) மாவட்டத்தில் உள்ள மனோகர்பூர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது என்று செய்திகள் கூறுகின்றன. அது மனோகர்பூர் என்ற கிராம ஊராட்சிப் பகுதி என்று செய்திகள் கூறுகின்றன.

உண்மைப் பதிவைக் காண: onefivenine.com I onefivenin.com
சரி, திரௌபதி முர்மு கவுன்சிலராக இருந்த ரைரங்பூரில் இருந்து மனோகர்பூர் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று பார்த்தோம். இரண்டும் வெவ்வேறு மாவட்டங்களைச் சார்ந்த பகுதி என்பதால் 110 கி.மீ-க்கும் அதிகமான தூரம் என்று தெரிந்தது. இரண்டு ஊர்களுக்கான சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகள் வேறு வேறு. அப்படி இருக்கும்போது கவுன்சிலர் மட்டும் ஒரே நபராக இருக்க முடியாது.

1999ம் ஆண்டில் மத போதகர் ஸ்டெயின்ஸ் கொல்லப்பட்ட போது, திரௌபதி முர்மு ரைரங்பூர் என்ற பேரூராட்சிப் பகுதியில் கவுன்சிலராக இருந்துள்ளார். அது ஸ்டெயின்ஸ் கொல்லப்பட்ட ஊரிலிருந்து 110 கி.மீ-க்கும் அதிகமான தூரத்தில் உள்ளது. இரண்டும் வெவ்வேறு மாவட்டங்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் கிறிஸ்தவ மத போதகர் கிரஹாம் ஸ்டெயின்ஸ் கொல்லப்பட்ட போது அந்த கிராமத்தின் கவுன்சிலராக திரௌபதி முர்மு இருந்தார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஒடிஷாவில் கிறிஸ்தவ மத போதகர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நடந்தபோது, அந்த கிராமத்தின் கவுன்சிலராக திரௌபதி முர்மு இருந்தார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கிறிஸ்தவ போதகர் ஸ்டெயின்ஸ் கொல்லப்பட்ட கிராமத்தின் கவுன்சிலராக திரௌபதி முர்மு இருந்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False
