
தமிழ்த் தாய் வாழ்த்து பாடலில் தமிழர் நல் திருநாடு என்று இருந்ததை திராவிட ஆட்சியாளர்கள் திராவிட நல் திருநாடு என்று மாற்றிவிட்டார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் மனோன்மணீயம் பெ.சுந்தரனார் எழுதிய மனோன்மணீயம் நூலில் இடம் பெற்ற தமிழ்த் தாய் வாழ்த்து முழு பகுதி என்று ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. அதில் அரசின் அதிகாரப்பூர்வ பாடலில் திராவிட நல் திருநாடும் என்ற பகுதி சிவப்பு நிறத்தால் கீழ் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
உண்மையான முழு வாழ்த்துப் பாடலில் அதே இடம் தமிழர் நல் திருநாடும் என்று இருப்பதாக பச்சை நிறத்தில் கீழ் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில் ” “தமிழர் நல் திருநாடும்” என்பதை அழித்து, “திராவிட நல் திருநாடும்” என்று உள் சொருகி, மனோன்மணீயம் சுந்தரனாரை இழிவு படுத்தி உள்ளனர்…!!!” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை Vijay Suresh என்பவர் 2021 ஜூன் 28 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பல ஆண்டுகளாக மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய தமிழ்த் தாய் வாழ்த்து பாடலில் சில பகுதிகளை குறைத்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டுச் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. குறைத்தது உண்மைதான் தமிழின் சிறப்பைச் சொல்லும் வாழ்த்து பாடலில் பிற மொழிகளை குறை சொல்ல வேண்டாமே என்ற நோக்கத்திற்காக அந்த வரிகள் நீக்கப்பட்டன என்று விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தமிழர் நல் திருநாடு என்று இருந்ததை திராவிட நல் திருநாடு என்று மாற்றிவிட்டார்கள் என்று சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
சுந்தரனார் எழுதிய மனோன்மணீயம் புத்தகம் பிடிஎஃப் வடிவில் கிடைக்கிறதா என்று பார்த்தோம். நமக்கு பாரி நிலையம் வெளியிட்ட மனோன்மணீயம் புத்தகம் பிடிஎஃப் வடிவில் நமக்கு கிடைத்தது. நறுமலர்ப் பதிப்பகம் வெளியிட்டிருந்த 1992ம் ஆண்டு வெளியான பத்தாம் பதிப்பு புத்தகத்தின் பிடிஎப் ஆகும். ஏழாம் பதிப்பு 1978ம் ஆண்டு வெளியிட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. முதல் பதிப்பு எப்போது வெளியானது என்று அதில் குறிப்பிடவில்லை.

அசல் பதிவைக் காண: wikisource.org I Archive 1 I wikisource.org I Archive 2 I wikisource.org I Archive 3
அதன் 27வது பக்கத்தில் தமிழ்த்தெய்வ வணக்கம் என்று குறிப்பிட்டு ‘நீராருங் கடலுடுத்த’ பாடல் இடம் பெற்றிருந்தது. அதில் ‘திராவிட நல் திருநாடும்’ என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. தமிழ் இணையப் பல்கலைக் கழகம் வெளியிட்டிருந்த பதிப்பும் நமக்கு கிடைத்தது. அதில் திராவிடநற் றிருநாடும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. தமிழர் நல் திருநாடு என்று எந்த ஒரு பதிப்பிலும் குறிப்பிடப்படவில்லை.
அசல் பதிவைக் காண: tamilvu.org I Archive
மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் பகுதியில் இருந்து சில பகுதிகள் நீக்கப்பட்டது தொடர்பாக பல செய்திகள் வெளியாகி இருந்தன. அனைத்திலும் “பல்லுயிரும்” என்று தொடங்கும் பகுதியில் இருந்து “ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்துசிதையாவுன்” என்ற பகுதி வரை ஏன் நீக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். எதிலும் தமிழர் நல் திருநாடு என்பதை திராவிட நல் திருநாடு என்று மாற்றியதாக குறிப்பிடவில்லை.

அசல் பதிவைக் காண: vikatan.comI Archive
அது கூட வாழ்த்து பாடலில் பிற மொழிகளை குறை கூற வேண்டாம் என்ற நோக்கில் நீக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில் அவரவருக்கு மாற்று கருத்து இருக்கலாம். அதற்குள்ளாக செல்லவில்லை. அரசு அங்கீகரித்த தமிழ்த்தாய் வாழ்த்து பகுதியில் இருந்து மட்டுமே அந்த பகுதி நீக்கப்பட்டுள்ளதே தவிர, மனோன்மணீயத்தில் இருந்து நீக்கப்படவில்லை. எனவே, விரும்புகிறவர்கள் அதை படித்துக்கொள்ள முடியும்.
மனோன்மணீயம் நூலில் இடம் பெற்ற தமிழ்த்தாய் வாழ்த்து பகுதியில் மாற்றம் செய்யப்பட்டதா என்பதை அறிய ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் தஞ்சை இறையரசனிடம் கேட்டோம். அதற்கு அவர், “மனோன்மணீயத்தில் திராவிட நல் திருநாடு என்றுதான் உள்ளது. தமிழர் நல் திருநாடு என்பதை திராவிடநல் திருநாடு என்று மாற்றிவிட்டார்கள் என்று சொல்வது வெறும் வதந்திதான். கலைஞர் கருணாநிதி சிலர் மன வருத்தம் கொள்வார்கள் என்பதற்காக தமிழ்த்தாய் வாழ்த்து பகுதியில் இருந்து ஐந்து வரிகளை நீக்கினார்.
இதில் தமிழ் அறிஞர்களுக்கு விருப்பம் இல்லைதான். ஒருவர் எழுதிய வரிகள் அப்படியே இடம் பெற வேண்டும் என்பது எங்கள் விருப்பம். வரிகள் பிடிக்கவில்லை என்றால் வேறு பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்திருக்கலாம். இப்படி நீக்கம் செய்திருக்க வேண்டாம் என்பது என்னுடைய கருத்து. மற்றபடி ‘திராவிட நல் திருநாடு’ என்பது புதிதாக சேர்க்கப்பட்டது என்பது தவறான தகவல். மனோன்மணீயத்தில் திராவிட நல் திருநாடு என்றுதான் உள்ளது” என்றார்.
இதன் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ‘தமிழர் நல் திருநாடு’ என்று இருந்ததை ‘திராவிட நல் திருநாடு’ என்று மாற்றிவிட்டார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் தமிழர் நல் திருநாடு என்று இருந்ததை திராவிட நல் திருநாடு என்று மாற்றிவிட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது என்பதை ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தமிழ்த் தாய் வாழ்த்தில் தமிழர் நல் திருநாடு என்பதை திராவிட நல் திருநாடு என்று மாற்றினரா?
Fact Check By: Chendur PandianResult: False
