FACT CHECK: மதுரை எய்ம்ஸ் அமைக்க சரியான இடத்தை தேர்வு செய்து வழங்கும்படி மத்திய அரசு கேட்டதா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், புதிதாக சரியான இடத்தை தமிழக அரசு தேர்வு செய்து வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சன் நியூஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “எய்ம்ஸ்-க்கு இடம் வேண்டும் – ஒன்றிய அரசு! மதுரை எய்ம்ஸுக்கான சரியான இடத்தை தமிழ்நாடு அரசு தேர்வு செய்து வழங்கினால் உடனே தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை சட்டம் தெளிவோம் Learn Law என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Sree Paramasivan என்பவர் 2021ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தோப்பூர் என்ற இடத்தில் 224.24 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதில் 199.24 ஏக்கர் பரப்பளவில் 750 படுக்கை வசதிகளுடன் ரூ.1264 கோடி செலவில் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி இதற்கான அடிக்கல்லை நாட்டினார். ஆனால் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி மட்டுமே நடந்தது. மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கான பணிகள் தொடங்கவில்லை. அதற்குள்ளாக மருத்துவமனை தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுவிட்டனர்.

மருத்துவமனை கட்டுவதற்கு ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் கடன் வழங்க முன்வந்ததாகவும் ஆனால் அது கடன் வழங்காமல் உள்ளதாலும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மத்திய அரசே நேரடியாக நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொது மக்கள் தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியதாக செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஏற்கனவே நிலம் வழங்கப்பட்டுவிட்ட சூழலில் மீண்டும் எதற்காக நிலம் கேட்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நியூஸ் கார்டு உண்மையானதாக தெரிந்தது. இதை உறுதி செய்துகொள்ள சன் நியூஸ் தொலைக்காட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவுகளை பார்வையிட்டோம். அப்போது 2021 ஜூன் 30ம் தேதி சன் நியூஸ் தொலைக்காட்சி இந்த நியூஸ் கார்டை வெளியிட்டிருப்பது உண்மை என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ஏற்கனவே மதுரை எய்ம்ஸ் அமைக்க இடம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் சந்தேகத்தை ஏற்படுத்தவே ஆய்வு செய்தோம். இது தொடர்பாக வெளியான செய்திகளை பார்வையிட்டோம். 

அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிகமாக புறநோயாளிகள் பிரிவு மற்றும் மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும் என்று புஷ்பவனம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதில், மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்கும்படி மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் கூறுகையில், “தமிழ்நாடு அரசு சார்பில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு மற்றும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தொடங்குதற்கான கோரிக்கை வைக்கப்படவில்லை. புற நோயாளிகள் பிரிவு மற்றும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு தற்காலிக இடத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தால் அதற்கான பணிகளை உடனடியாக தொடங்க தயாராக இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் கிடைத்தன.

அசல் பதிவைக் காண: dinamani.com I Archive 1 I timesofindia I Archive 2

டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்த செய்தியில், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டிடங்கள் கட்டப்படும் வரையில் புற நோயாளிகள் பிரிவு மற்றும் மருத்துவக் கல்லூரி செயல்படுவதற்கான வசதியை தமிழ்நாடு அரசு செய்து தர முன்வர வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு ஜூலை 7ம் தேதிக்குள் தன்னுடைய கருத்தை தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

தொடர்ந்து செய்திகள் குழப்பம் அளிக்கவே, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனைத் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர், “மதுரை எய்ம்ஸ் தோப்பூரில் அமைய உள்ளது. இடம் மாறுதல் என்று வரும் செய்தி உண்மையில்லை. நிலம் தொடர்பாக நீடித்த வருவாயத் துறை உடனான பிரச்னைகள் அனைத்தும் முடித்து நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. மதுரை எய்ம்ஸ் உடன் அறிவிக்கப்பட்ட மற்ற மூன்று மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தமிழகத்திலும் தற்காலிகமாக ஒரு இடத்தில் புறநோயாளிகள் பிரிவைத் தொடங்கி மாணவர் சேர்க்கை தொடங்க வேண்டும் என்று 2020ம் ஆண்டில் இருந்து நான் வலியுறுத்தி வருகிறேன். இந்த ஆண்டாவது ஜூலை மாதத்துக்குள்ளாக மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கையை அறிவிக்க வேண்டும் என்று போராடி வருகிறோம். 

மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்றால் 300 நோயாளிகள் படுக்கை மற்றும் மாணவர்கள் படிக்க ஏற்ற கல்லூரி வசதி வேண்டும். இதற்கு மதுரை காமராஜர் பல்கலைக் கழக கட்டிடம் ஒன்று தயார் நிலையில் உள்ளது. அது வேண்டாம் என்றால் வேறு சில கட்டிடங்களும் உள்ளன. எனவே, அந்த இடத்தில் தற்காலிகமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். 

மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு என சிறப்பு அதிகாரி ஒருவரை அந்த அந்த மாநில அரசுகள் நியமித்துள்ளன. மத்திய அரசு அந்த அதிகாரியைத் தொடர்புகொண்டு தேவையான உதவியைப் பெற்று மாணவர் சேர்க்கையை தொடங்கிவிட்டன. தமிழகத்தில் அப்படி ஒரு அதிகாரி இல்லாத சூழலில் ஒவ்வொன்றுக்கும் யாரை அணுகுவது என்று தெரியாத நிலை உள்ளது என்று மத்திய அரசு தரப்பில் கூறுகின்றனர். தமிழக அரசும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிப்பதன் மூலம் இது போன்ற நிர்வாக சிக்கல்கலைத் தவிர்க்க முடியும். நிறைய மாணவர்களுக்கு மருத்துவர்கள் ஆகும் வாய்ப்பும் கிடைக்கும்” என்றார்.

அதாவது மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் தொடங்க புதிய இடத்தை கேட்கவில்லை, தற்காலிக புறநோயாளிகள் பிரிவு மற்றும் மருத்துவக் கல்லூரிக்கான கட்டிட வசதியை மட்டுமே கேட்கிறது என்பது உறுதியானது.  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கூறுவது போல பயன்பாட்டில் இல்லாத காமராஜர் பல்கலைக் கழக கட்டிடத்தை தமிழக அரசு ஒதுக்கித் தந்தால் அங்கு இருந்து தற்காலிகமாக எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி செயல்படும். தோப்பூரில் கட்டுமான பணிகள் தொடங்கி முடிந்த பிறகு அந்த இடத்துக்கு மாறிவிடும் என்பது உறுதியாகிறது.

இதன் மூலம் தற்காலிகமாக புற நோயாளிகள் பிரிவு மற்றும் மருத்துவக் கல்லூரி செயல்பட மத்திய அரசு கட்டிட வசதி கேட்ட செய்தியை திரித்து புதிதாக சரியான இடத்தை வழங்க வேண்டும் என்பது போல மத்திய அரசு கேட்டதாக சன் நியூஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருப்பது தெரிகிறது.

இது நாள் வரை தோப்பூரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டது என்ற செய்தியின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதன் அடிப்படையில் ஓ.பி, எம்பிபிஎஸ் சேர்க்கைக்கு தற்காலிகமான இடம் என்ற வார்த்தையை மறைத்து குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பது உறுதியாகிறது.

முடிவு:

மதுரையில் எய்ம்ஸ் அமைக்க சரியான இடத்தை தமிழ்நாடு அரசு தேர்வு செய்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மதுரை எய்ம்ஸ் அமைக்க சரியான இடத்தை தேர்வு செய்து வழங்கும்படி மத்திய அரசு கேட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: Missing Context

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •