
ஊர்க் காவல் படை வீரர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் மாதம் ரூ.16,500 வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறையின் இரண்டு நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டுள்ளன. அதில், “ஊர் காவல் படை வீரர்களுக்கு மாதம் முழுவதும் பணி நிரந்தரம். மாதம் ரூ.16,500 சம்பளம் வழங்க உத்தரவு – முதல்வர் பழனிசாமி” என்று இருந்தது.
இந்த பதிவை அதிமுக கழக வீரன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் மக்கள் முதல்வர் “எடப்பாடியார்” என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2021 மார்ச் 7 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழகத்தில் போலீசாருக்கு உதவ ஊர்க்காவல் படை என்று உருவாக்கப்பட்டது. இது அரசு வேலை இல்லை. போலீசாருக்கு உதவும் தன்னார்வலர்கள் என்று கூறப்பட்டாலும் மாதத்துக்கு 10 நாட்கள் வேலை, ஒரு நாளைக்கு 560 ரூபாய் சம்பளம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மாதம் முழுவதும் வேலை பார்த்தாலும் 10 நாள் சம்பளம் மட்டும் வழங்கப்படுகிறது. எனவே, வேலை நாளை அதிகரிக்க வேண்டும், குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்று ஊர்க்காவல் படையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அசல் பதிவைக் காண: examsdaily.in I Archive
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் ஊர்க்காவல் படையினருக்கு மாதம் முழுக்க நிரந்தர வேலை, அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையில் புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு இல்லை. புதிய தலைமுறை வெளியிடும் கார்டில் உள்ள ஃபாண்ட், பின்னணி டிசைன் எதுவும் இல்லை. இருப்பினும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்படி எதுவும் அறிவிப்பு வெளியிட்டு, அதை இவர்கள் புதிய தலைமுறை நியூஸ் கார்டில் வெளியிட்டுள்ளார்களா என்று ஆய்வு செய்தோம்.
முதலில் இது புதிய தலைமுறை வெளியிட்டது இல்லை என்பதை உறுதி செய்ய புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி கார்த்திக்கைத் தொடர்புகொண்டு கேட்டோம். இது போலியானது என்று அவர் உறுதி செய்தார்.
ஊர்க்காவல் படையினருக்கு மாதம் முழுக்க வேலையை நிர்ணயம் செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாரா என்று கூகுளில் தேடினோம். அது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் ஊர்க்காவல் படையினர் கோரிக்கை மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு மாதம் முழுக்க வேலை வழங்க உத்தரவிடக் கோரி தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பான செய்திகள் கிடைத்தன.

அசல் பதிவைக் காண: tamil.news18.com I Archive
அதில், “காவல்துறையின் பெரும்பாலான பணிகளை செய்யும் ஊர்க்காவல் படையினருக்கு 10 நாட்கள் மட்டுமே ஊதியம் வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்து, மாதம் முழுவதற்குமான ஊதியத்தை வழங்க நடவடிக்கையை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, தமிழக அரசும், டிஜிபியும் 10 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்துள்ளனர்” என்று இருந்தது. இந்த செய்தி கடந்த மாதம் (பிப்ரவரி, 2021) 23ம் தேதி வெளியாகி இருந்தது.
தமிழகத்தில் தேர்தல் தேதி பிப்ரவரி 26ம் தேதி வெளியானது. அதாவது நீதிமன்றம் அவகாசம் வழங்கி உத்தரவிட்ட செய்தி வெளியான 3 நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக ஊர்க்காவல் படையினருக்கு பணி நியமனம் தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட்டதாகவோ, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்ததாகவோ எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஊர்க்காவல் படையினருக்கு மாதம் முழுக்க பணி மற்றும் அடிப்படை சம்பளம் நிர்ணயித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஊர்க்காவல் படையினருக்கு பணி நிரந்தரம் செய்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஊர்க்காவல் படையினருக்கு பணி நிரந்தரம், மாதம் ரூ.16,500 சம்பளம் அறிவித்தாரா எடப்பாடி பழனிசாமி?
Fact Check By: Chendur PandianResult: False
