அமெரிக்காவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தடுமாறியது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் அளித்த பேட்டி மற்றும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தின் ஒரு காட்சியை இணைத்துப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடம் இந்தியாவில் சிறுபான்மையினர் நலன் தொடர்பாக ஆங்கிலத்தில் ஒருவர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு அவர் காதில் மாட்டியிருந்த ஹெட்ஃபோனை கழற்றிவிட்டு பதில் சொல்லத் தெரியாமல் இருப்பது போன்று உள்ளது.

Archive

நிலைத் தகவலில், "பாவம் ப்ரஸ் மீட் இருக்கும்னு தெரியாம அமெரிக்கா போயிடிச்சு மூதி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை முகவை ராஜசேகர் என்ற ஃபேஸ்புக் பதிவர் 2023 ஜூன் 23ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு நிருபர்களுக்குப் பேட்டி அளிக்கவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் அமித்ஷாவுடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்தார். அதைத் தவிர 9 ஆண்டுகளில் செய்தியாளர்கள் சந்திப்பை அவர் நடத்தவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவில் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது நிருபர் ஒருவர், இந்தியாவில் சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர்களின் பாதுகாப்பு, ஜனநாயகம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

Archive

நிருபரின் கேள்விக்கு நரேந்திர மோடி பதில் அளிக்க தயாராவதற்கு முன்பு காதில் மாட்டியிருந்த ஹெட்போனை கழற்றினார். அதன் பிறகு இந்தி மொழியில் அவர் பதில் அளித்திருந்தார். அப்போது, "இந்தியா, அமெரிக்கா இரண்டும் ஜனநாயக நாடு. ஜனநாயகம் நம்முடைய டிஎன்ஏ-விலேயே உள்ளது. ஜனநாயகம் நம்முடைய ஆன்மாவில் உள்ளது. அதன்படி நாம் வாழ்கிறோம். அது நமது அரசியலமைப்பில் எழுதப்பட்டுள்ளது. எனவே, சாதி, மதம் அடிப்படையில் பாகுபாடு என்ற கேள்வி எழாது" என்று நீண்ட விளக்கம் அளித்திருந்தார்.

ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடி, பதில் கூறாமல் ஹெட்போனை கழற்றியதாக மட்டும் காட்டப்பட்டுள்ளது. இது முழுமையான வீடியோ இல்லை. எனவே, உண்மையான வீடியோவை தேடி எடுத்தோம். பிரதமர் மோடியின் யூடியூப் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிடப்பட்டிருந்தது. அதிலும் கூட அவர் ஹெட்போனை கழற்றுவது காட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு கேமரா அமெரிக்க அதிபர் நோக்கி சென்று மீண்டும் மோடியிடம் வருகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால், பிரதமர் மோடி நிருபரின் கேள்விக்கு பதில் அளிப்பதைத் தெளிவாகக் காண முடிந்தது.

கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் அவர் கழற்றிவிட்டு நின்றாரா என்று அறிய முழு வீடியோ கிடைக்கிறதா என்று தொடர்ந்து தேடினோம். அப்போது, CBS News என்ற ஊடகம் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் மோடியின் பேட்டி வீடியோவை வெளியிட்டிருந்தது தெரிந்தது. அதில், கேமரா எங்கும் திரும்பவில்லை. கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளரும் அந்த வீடியோவில் தெரிகிறார். அந்த செய்தியாளர் கேள்வி கேட்டு முடித்தவுடன், பிரதமர் நரேந்திர மோடி காதில் மாட்டியிருந்த ஹெட்போனை கழற்றிவிட்டு உடனடியாக பேசுவதைக் காண முடிந்தது. செய்தியாளர் கேள்வி கேட்பதை வீடியோவின் 26.40வது நிமிடத்தில் இருந்து காணலாம்.

வீடியோவின் 29.40வது நிமிடத்தில் அமெரிக்க அதிபர் பைடன் பேசும் போது, மோடி தண்ணீர் அருந்துகிறார். அந்த காட்சியை தனியாக எடுத்து, செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் தண்ணீர் குடித்தது போன்று தவறாக பதிவிட்டிருப்பது உறுதியாகிறது.

ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விகள் உடனடியாக பிரதமர் மோடிக்காக மொழி பெயர்க்கப்படும். அதற்காக அவர் காதில் ஹெட்போன் மாட்டியிருந்தார். கேள்வி கேட்டு முடிந்ததும் அதை அவர் கழற்றியிருக்கிறார். வீடியோவை அந்த இடத்துடன் கட் செய்துவிட்டு, மோடி பதில் பேசத் தெரியாமல் நின்றார் என்பது போன்று தவறான தகவலைப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. வீடியோ உண்மையானதுதான். ஆனால், முழுமையானது இல்லை. முழுமையான வீடியோவை வெளியிட்டிருந்தால் தவறான புரிதலை ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.

முடிவு:

பேட்டி அளிக்க வேண்டியிருக்கும் என்பது தெரியாமல் அமெரிக்காவுக்கு சென்று பதில் அளிக்க முடியாமல் திணறி நின்ற மோடி என்று பரவும் வீடியோ முழுமையானது இல்லை, எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பிரஸ் மீட்டில் பதில் சொல்லத் தெரியாமல் திணறினாரா மோடி?

Written By: Chendur Pandian

Result: False