முஸ்லீம்கள் கல்லெறிந்ததில் கண் இழந்த குழந்தை- ஃபேஸ்புக் படம் உண்மையா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் முஸ்லீம்கள் ரயில் மீது கல் எறிந்ததில் குழந்தை ஒன்றுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Baby 2.png
Facebook LinkArchived Link

கண்ணில் காயம் அடைந்த குழந்தை ஒன்றின் படத்தின் மீது போட்டோஷாப்பில் எழுதப்பட்ட போட்டோ கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், “மேற்கு வங்கத்தில் முஸ்லீம்கள் ரயிலில் கல்லெறிந்ததில் சிக்கி ஒற்றை கண்ணை இழந்த குழந்தை. இந்த குழந்தையை காயப்படுத்தியதற்கும் சிஏபி எதிர்ப்புக்கும் என்ன சம்பந்தம்?

மதத்தின் பேரால் மனநோயாளிகளாக மாறாதீர்கள். அல்லாவை தவிர வேறு யாருக்கும் பயப்படவில்லை என்கிறீர்கள். இந்த குற்றத்தை அல்லாஹ் மன்னிப்பானா?” என்று எழுதப்பட்டுள்ளது.

நிலைத் தகவலில், “மூளை இல்லாத முட்டாள்களே… உங்கள் வீட்டு பிள்ளைகளை இப்படி செய்வீர்களா?” என்று கேட்டுள்ளனர். இந்த பதிவை, செந்தமிழ் நண்பர்கள் என்ற ஃபேஸ்புக் பக்கம் டிசம்பர் 17, 2019 அன்று பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்துவரும் சூழலில், அது தொடர்பான வதந்திகளை கண்டறிந்து செய்தி வெளியிட்டு வருகிறோம். இந்த பதிவில்,  குழந்தையின் கண் பறிபோய்விட்டதாக குற்றம்சாட்டியிருந்தனர். குழந்தையைப் பார்க்கும்போது இந்திய குழந்தைப் போல இல்லை. மத்திய கிழக்கு, காஸா, சிரியா போன்ற நாடுகளில் நடந்து வரும் உள்நாட்டு கலவரத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒன்றாக இருக்கலாம் என்று தோன்றியது. அதை உறுதி செய்ய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

Baby 3.png
Search Link 1Search Link 2

நம்முடைய ஆய்வில், இந்த படத்தை ஒருவர் 2016ம் ஆண்டு நவம்பர் 27ம்தேதி பதிவிட்டது தெரிந்தது. ஆனால், எந்த ஊர் குழந்தை, என்ன ஆனது என்று எதையும் குறிப்பிடவில்லை. இந்த குழந்தையை புறக்கணித்துவிடாதீர்கள் என்று மட்டுமே பதிவிட்டிருந்தார்.

ட்விட்டர் போன்ற ஒரு தளத்தில் இந்த படம் பதிவிடப்பட்டு இருந்தது தெரிந்தது. அதில் என்ன எழுதியுள்ளார்கள் என்று மொழியாக்கம் செய்து பார்த்தோம். அப்போது அந்த படம் 2016 நவம்பர் 14ம் தேதி பதிவிடப்பட்டது தெரிந்தது. அதில், “மாஸ்கோவில் இருந்து வரும் ஆபத்து… சிரியாவில் நிகழ்ந்து வரும் அசிங்கத்தை நிறுத்துங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம், இந்த குழந்தை சிரியாவை சேர்ந்த குழந்தையாக இருக்கலாம் என்று தெரிந்தது. இருப்பினும், வேறு உறுதியான பதிவு ஏதும் உள்ளதா என்று தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்தோம். அப்போது இந்த பதிவை வெளியிட்டவரின் அசல் ட்விட்டர் பதிவு நமக்கு கிடைத்தது. 

Archived Link 1Twitter LinkArchived Link 2

சிரியா உள்நாட்டுப் போரில், அரசுக்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டு வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ரஷ்யா அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன. இந்த குழந்தை கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள குழந்தையாக இருக்கலாம் என்று தெரிகிறது. இதனால்தான், மாஸ்கோவில் இருந்து வரும் ஆபத்து என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப்படம் 2016ம் ஆண்டு சிரியாவில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது. சிரியாவில் எடுக்கப்பட்ட குழந்தை படத்தை மேற்கு வங்க குழந்தை என்று தவறான சித்தரித்துள்ளது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:முஸ்லீம்கள் கல்லெறிந்ததில் கண் இழந்த குழந்தை- ஃபேஸ்புக் படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

2 thoughts on “முஸ்லீம்கள் கல்லெறிந்ததில் கண் இழந்த குழந்தை- ஃபேஸ்புக் படம் உண்மையா?

Comments are closed.