தி.மு.க ஆட்சியில் தேனி மாவட்டத்தில் எல்.ஈ.டி பல்ப் வாங்கியதில் முறைகேடு நடந்தது என்று பரவும் தகவல் உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ஒரு எல்.ஈ.டி பல்ப்பை ரூ.10 ஆயிரம் கொடுத்து வாங்கி மோசடி நடந்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இரண்டு செய்திகளை ஒன்றாகச் சேர்த்து, திரைப்பட காட்சியை வைத்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “நீர் வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வழங்கிய காபி, மிக்சர் செலவு ரூ.47 கோடி. ஒரு LED பல்பின் விலை ரூ.10 ஆயிரமா? ரூ.1 கோடி மோசடி.. சிக்கும் அதிகாரிகள்.. 

அது ஏன் சார், வேற எங்கேயும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டுல மட்டும் காபி, மிக்சர், பல்பு விலை ரொம்ப அதிகமா இருக்கு? 

திராவிட மாடல் ஆட்சியில வடக்கனை விட 40 வருஷம் முன்னேறிட்டோம். தமிழ்நாடு வேற No1 பணக்கார மாநிலமா மாறிப் போச்சு. அதான் விலையும் ஏறிப்போச்சு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Benitto Kumar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜூன் 17ம் தேதி வெளியிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தி.மு.க ஆட்சியில் நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு காபி, மிக்சர் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்க ரூ.47 கோடி செலவானது என்று முதலில் வதந்தி பரவியது. ரூ.47 கோடி செலவு என்பது உண்மை ஆனால், இந்த செய்தி வெளியாகி பல ஆண்டுகள் ஆகிறது. அ.தி.மு.க ஆட்சியின் போது இந்த செய்தி வெளியானது. அ.தி.மு.க ஆட்சியில் வெளியான செய்தியை மறைத்து, தி.மு.க ஆட்சியில் நடந்தது போன்று பலரும் பதிவிட்டு வருகின்றனர் என்று செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

தற்போது, அந்த காபி, மிக்சர் செய்தியுடன் ஒரு எல்.இ.டி பல்ப்பை ரூ.10 ஆயிரத்துக்கு வாங்கிய செய்தியையும் சேர்த்து பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தி.மு.க ஆட்சியில் நடந்தது என்றும், தி.மு.க ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை என்றால்தான் அதிசயம் என்று குறிப்பிட்டு இந்த தகவலைப் பரப்பி வருகின்றனர். எனவே, எல்.இ.டி பல்ப் விவகாரம் 2021 மே மாதத்துக்குப் பிறகு நடந்ததா என்று ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

தேனியில் எல்.இ.டி பல்ப் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதா என்று அறிய அது தொடர்பான செய்தியை தேடினோம். அப்போது, விகடன் உள்ளிட்ட ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகி இருப்பது தெரிந்தது. அதில், கடந்த 2019-20 ஆண்டில் தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, தென்கரை, வீரபாண்டி, கே.புதுபட்டி, உத்தமபாளையம், கோம்பை, மேலசொக்கநாதபுரம், பூதிபுரம், தேவதானப்பட்டி, ஒடைப்பட்டி உள்ளிட்ட 11 பேரூராட்சிகளில் முக்கியச் சந்திப்புகள், தெருக்களில் உள்ள விளக்குகளை மாற்ற 1300 எல்.இ.டி பல்புகள் வாங்கப்பட்டிருக்கின்றன. ஒரு எல்.இ.டி பல்ப் 9,987 ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பல்ப்-ன் விலை ரூ.1,200 முதல் அதிகபட்சம் 2,500 ரூபாய் மட்டுமே இருக்கும். இப்படியிருக்க 7,487 ரூபாய்க்கும் கூடுதலாகக் கணக்கு காட்டி ஒரு கோடி ரூபாய்க்கு மோசடி நடந்திருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: vikatan.com I Archive

மேலும், “அ.ம.மு.க-வைச் சேர்ந்த பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி தரப்பில் கடந்த 2020-ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடந்த ஊழலை தற்போது தி.மு.க ஆட்சியில் நடந்தது போன்று குறிப்பிட்டுப் பதிவிட்டு வந்திருப்பது தெரிந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள நியூஸ் கார்டை எந்த ஊடகம் வெளியிட்டது என்று தேடினோம். நியூஸ் 18 வெளியிட்டிருப்பது தெரிந்தது. அது வெளியிட்ட செய்தியை தேடி எடுத்தோம். நியூஸ் 18 கிரைம் டைம் பகுதிக்காக இந்த செய்தி வெளியாகி இருப்பது தெரிந்தது. கடந்த 2022 ஜூன் 16ம் தேதி இந்த வீடியோவை நியூஸ் 18 தமிழ்நாடு தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. 

அந்த வீடியோவை பார்த்தோம். “கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் எல்.இ.டி பல்ப் வாங்கியதில் ரூ.1 கோடி வரை மோசடி நடந்திருப்பது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது” என்று தொகுப்பாளர் குறிப்பிட்டார். இதன் மூலம் எல்.ஈ.டி பல்ப் ஊழலும் கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்துடன் தொடர்புடையதுதான் என்று உறுதியாகிறது. இதன் அடிப்படையில் ஸ்டாலின் ஆட்சியில் எல்.ஈ.டி பல்ப் ஊழல் நடந்தது என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதியாகிறது.

முடிவு:

தேனி மாவட்டத்தில் எல்ஈடி பல்ப் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் சம்பவம் தி.மு.க ஆட்சியில் நடக்கவில்லை அ.தி.மு.க ஆட்சியில் நடந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தி.மு.க ஆட்சியில் தேனி மாவட்டத்தில் எல்.ஈ.டி பல்ப் வாங்கியதில் முறைகேடு நடந்தது என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False