
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பட்டதாரிகள் என்பதற்கு பதிலாக, பொட்டதாரிகள், என்று கூறியதாக, ஃபேஸ்புக்கில் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு:
வதந்தியின் விவரம்:
பட்டதாரிகளை (****தாரிகள்) என்று உளறிய ஸ்டாலின் தீயாக பரவும் வீடியோ மானம் பறிபோவதாக திமுகவினர் புலம்பல் | Tnnews24
உண்மை அறிவோம்:
தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பட்டதாரிகள் என்று சொல்வதற்கு பதில், பொட்டதாரி என்று கூறியதாகவும், இதனால், தி.மு.க தொண்டர்கள் மானம் பறிபோனதாகவும் மேற்கண்ட இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. செய்திக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் வடிவேலு படத்தை ஒன்றாக சேர்த்து பயன்படுத்தியுள்ளனர்.
இந்த செய்திக்கு டீக்கடை பெஞ்ச் என்ற ஃபேஸ்புக் குழு பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ ஒன்றையும் ஆதாரமாக அளித்துள்ளனர்.
ஆனால், எங்கே, எப்போது இந்த தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது என்பது பற்றியெல்லாம் இதில் குறிப்பிடவில்லை. இந்த செய்தியை, தங்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளனர். தேர்தல் நேரம் என்பதால், தி.மு.க எதிர்ப்பு மனநிலையில் உள்ள அ.தி.மு.க, பா.ஜ.க, இந்து அமைப்பினர் இப்பதிவை அதிக அளவில் ஷேர் செய்துள்ளனர்.
டிஎன்நியூஸ்24 வெளியிட்ட செய்தியில் உள்ள வீடியோவின் உண்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். அந்த வீடியோவில், நியூஸ்7 லோகோ இருந்தது. மேலும், “கீழடி முக்கியத்துவத்தை ஆரம்பத்திலேயே பேசி கவனத்தை ஈர்த்தவர் சு.வெங்கடேசன்: மு.க.ஸ்டாலின்” என்று இருந்தது. மதுரை மக்களவைத் தொகுதிக்கு திமுக கூட்டணி (சிபிஎம்) சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் சு.வெங்கடேசன். அதனால், அவரை ஆதரித்து, மதுரையில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதை எடிட் செய்து, இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர் என்பது தெரிந்தது.
மதுரையில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் என்று டைப் செய்து கூகுளில் தேடினோம். அப்போது, கடந்த மார்ச் 28ம் தேதி மதுரையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் சு.வெங்கடேசனை ஆதரித்து ஸ்டாலின் பேசியது தெரிந்தது. குறிப்பிட்ட அந்த தினத்தில் ஸ்டாலின் பேசிய பேச்சின் வீடியோ நமக்குக் கிடைத்தன. கீழே ஆதாரப் படம் உள்ளது. நம்முடைய கூகுள் தேடலில் நியூஸ்7 வெளியிட்ட வீடியோ கிடைக்கவில்லை என்றாலும், அவர் அன்றைய தினம் மதுரையில் பேசினார் என்பது உறுதியானது.

இதையடுத்து, டிஎன்நியூஸ்27 குறிப்பிடும் அந்த வீடியோவை கண்டறிய, மார்ச் 28ம் தேதி, நியூஸ்7 தொலைக்காட்சி சார்பில் ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட வீடியோக்களை ஆய்வு செய்தோம். அப்போது, நாம் தேடிய வீடியோ கிடைத்தது.

மேற்கண்ட வீடியோவை கிளிக் செய்து பார்த்தபோது, 1.59வது நிமிடத்தில், டிஎன்நியூஸ்24 குறிப்பிட்ட காட்சி வருகிறது. அதில், “தமிழகத்தில் முதல் பட்டதாரியாக இருந்தால் இலவச கல்வி” என்று பேசுகிறார் மு.க.ஸ்டாலின்.

அவர் ‘பட்டதாரி’ என்று சொல்வது தெளிவாக கேட்கிறது. டிஎன்நியூஸ்24 செய்தியில் உள்ளதுபோன்று, பொட்டதாரி என்று அவர் சொல்லவில்லை என்பது உறுதியாகிறது. வீடியோ இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
Archive Link
ஒருவேளை ஸ்டாலின் தவறாக, உச்சரித்திருந்தால் நியூஸ்7 உள்பட தமிழக ஊடகங்கள் அனைத்துமே அதனை சுட்டிக்காட்டியிருக்கும். ஆனால், இந்த செய்தியில் கூறப்படுவதுபோல, ஊடகங்கள் எதிலுமே செய்தி வெளியாகவில்லை.
எந்த அடிப்படையில் பட்டதாரி என்ற வார்த்தை இவர்கள் காதில் பொட்டதாரி என கேட்டது என்று தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் வாய் தவறி பேசிய பல்வேறு செய்திகள் இதற்கு முன், ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் திருமண விழாவில் பேசிய பேச்சு மிகப்பெரிய அளவில் சமூக ஊடகங்களில் எதிரொலித்தது.
திருமண விழா ஒன்றில் பேசிய மு.க.ஸ்டாலின், “போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் வழித்தடத்துக்கான டெண்டர் தொடர்பாக நான் ஜப்பான் நாட்டிற்குத் துணை முதல்வராக இருந்தபோது அப்போதைய முதல்வர் கருணாநிதியால் ஜப்பான் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டேன்” என்றார். ‘ஜப்பான் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்’ என்று அப்போது அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். ஜப்பான் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பது சமூக ஊடகங்களிலும் டிரெண்ட் ஆனது. இதுதொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
ஒருவேளை, ஜப்பான் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதுபோல, பட்டதாரிகள் பற்றி மு.க.ஸ்டாலின் வாய் தவறி பேசிவிட்டாரா என்று இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் ஆய்வு செய்தோம். அப்படி எந்த ஒரு செய்தியையும் காண முடியவில்லை.

ஆனால், இந்த தவறான செய்தியை சித்தரித்து வெளியிட்ட TNNEWS24.com மற்றும் அந்த செய்தியை அதிகளவில் ஷேர் செய்பவர்கள் அனைவருமே பகிரங்கமாகு, அ.இ.அ.தி.மு.க, பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு உடையவர்கள் என்பதும் நமது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இந்த செய்தியை பரப்பிய டிஎன்நியூஸ்24.காமின் பின்னணியை ஆய்வு செய்தோம். அந்த இணையதளம் நடுநிலை என்ற பத்திரிகை தர்மத்தை மறந்து, முழுக்க முழுக்க பா.ஜ.க ஆதரவு, தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாட்டுடன் இருந்தது தெரிந்தது. ஒவ்வொரு செய்தியும் விஷமத்தனமானதாக இருந்தது. ஒவ்வொன்றையும் கூட நம்மால் ஆய்வு செய்து போலி என்று நிரூபிக்க முடியும் என்ற வகையில் இருந்தது வேதனையாக இருந்தது.
புனேவில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியின் கட்டிட திறப்பு விழாவில் ராகுல் காந்தி கலந்துகொண்டாராம். அவரிடம் ரியாசிங் என்ற மாணவி, எனது தந்தைக்கும் உங்களுக்கும் ஒரே வயதுதான் நீங்கள் எப்படி இளைஞர் ஆகமுடியும் என்று கேட்டாராம். பதில் சொல்ல முடியாமல் நொந்து நூடுல்ஸ் ஆன ராகுல் காந்தி வெளியேறினார் என்று கூறப்பட்டுள்ளது. அது மாதிரியான செய்தி இணையத்தில் எங்கேயும் இல்லை. இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. இதற்கான, கூகுள் தேடல் ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு செய்தியில், சென்னை ரசிகர்கள் உருட்டுக்கட்டையுடன் சீமானை வரவேற்க திட்டம் என்று வதந்தி பரப்பப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் விட மற்றொரு செய்திதான் அதிர்ச்சி ரகம்.
“வீரமணி ராமநாதபுரம் வந்தால் வெட்டுங்கள்” என்று ஒரு செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். இவ்வளவு வெளிப்படையாக கொலை மிரட்டல் ஒரு ஊடகத்தில் இருந்து வெளிவர முடியுமா என்பதே நம்முடைய அதிர்ச்சிக்கு காரணமாக இருந்தது.
மற்றொரு செய்தியில் தலைப்பிலேயே தவறு. “சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்தியாவின் ஏசாட் செயற்கைக்கோளில் அப்படி என்ன இருக்கிறது” என்று தலைப்பிட்ட கட்டுரை ஒன்று இருந்தது. உண்மையில், இந்தியா சமீபத்தில் எதிரி செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணை சோதனையையே நடத்தியது. இந்த தலைப்பு செயற்கைக்கோளை அனுப்பியது போல குறிப்பிட்டுள்ளது.இதுதவிர இன்னும் ஏராளமான நம்மால் பதிவிடக்கூட முடியாத அளவுக்கு பல்வேறு வன்முறையைத் தூண்டும், அரசியல் காழ்ப்புணர்ச்சி செய்திகள் இந்த இணைய தள பக்கத்தில் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகின்றன.
மேலும், இவர்கள் தங்களுக்கு ஆதரவாக, குறிப்பிடும் டீக்கடை பெஞ்ச் என்ற ஃபேஸ்புக் பக்கமும், அதி தீவிர பாஜக ஆதரவு மற்றும் திமுக எதிர்ப்பு கருத்துகளை பகிர்ந்து வருகிறது. இதுபோன்ற பல பதிவுகளை அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் நீங்கள் பார்க்கலாம். அவர்களின் புரொஃபைல் மற்றும் கவர் புகைப்படமே, திமுக.,வை கேலி செய்யும் வகையில் உள்ளது. ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஆதாரங்களின்படி, நமக்குத் தெரியவந்த உண்மையின் விவரம்,
1) பதிவில் உள்ளது உண்மையான வீடியோதான்.
2) வீடியோவில் ஸ்டாலின் பேசியதை, திட்டமிட்டு தவறாக சித்தரித்துள்ளனர்.
3) இந்த TNNews24 இணையதளம் வெளியிட்ட ‘பொட்டதாரி‘ செய்தி போல, ஸ்டாலின் பற்றி வேறு எந்த ஒரு பத்திரிகையோ, தொலைக்காட்சியோ செய்தி வெளியிடவில்லை.
4) பொட்டதாரிகள் என்று ஸ்டாலின் கூறியதாக இணையத்தில் எந்த ஒரு செய்தியும் இல்லை.
5) ஃபேஸ்புக்கில் மட்டுமே இந்த வீடியோ தவறாகச் சித்தரிக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது. வேறு ஆதாரம் இல்லை.
6) இந்த வீடியோவை முதன்முதலில் பகிர்ந்த ஃபேஸ்புக் குரூப் மற்றும் இதனை ஆதாரமாக வைத்து செய்தி வெளியிட்ட இந்த இணையதளம், இவற்றை ஷேர் செய்தவர்கள் என அனைவருமே பகிரங்கமாக பாஜகவை ஆதரிப்பவர்களாக உள்ளனர்.
6) பதிவை வெளியிட்ட இணையதளம் பா.ஜ.க சார்புத் தன்மை கொண்டதாக இருக்கிறது.
7) பல்வேறு அவதூறான, வன்முறையைத் தூண்டும் பதிவுகளை இந்த இணையதளம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
இதன்படி, மு.க.ஸ்டாலின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது உறுதியாகிறது.
முடிவு
நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, குறிப்பிட்ட வீடியோவில் மு.க.ஸ்டாலின் தவறாக எதுவும் பேசவில்லை. அவர் பேசியதை தவறாகச் சித்தரித்து வெளியிட்டுள்ளனர். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விஷயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
