வீட்டு உபயோகத்திற்கு போர்வெல் நீர் பயன்படுத்தினால் கட்டணம்: ஃபேஸ்புக் செய்தி

அரசியல் சமூக ஊடகம்

வீட்டு உபயோகத்திற்காக, ஆழ்துளை கிணற்றில் இருந்து நீர் எடுத்து பயன்படுத்தினால், கட்டணம் செலுத்த வேண்டும் என்ற செய்தியை ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் காண நேரிட்டது. மோடி அரசின் அடுத்த தாக்குதல் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த செய்தி உண்மைதானா என்று ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே இணைத்துள்ளோம்.

வதந்தியின் விவரம்:

தேர்தல் முடிந்து தொடர்வதாக , காத்திருக்கும் புதிய சட்டம்

Archive Link

இது தவிர, ‘’வீட்டு உபயோகத்துக்காக போர் போட்டு தண்ணீர் எடுத்தாலும் இனி அதற்கு கட்டணம்: மத்திய அரசு புதிய சட்டம்…! மோடி அரசின் அடுத்த தாக்குதல்… இனி நிலத்தடி நீரை பயன்படுத்தினாலும் கட்டணம்..! 2019 ஜூன் மாதம் முதல் எந்த வகையில் நிலத்தடி நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தினாலும், கட்டணம் செலுத்த வேண்டும். நம் வீட்டில் இருக்கும் சொந்த போர்வெல் (ஆழ்குழாய் கிணறு) மூலம் தண்ணீர் எடுத்தாலும் அரசிற்கு கட்டணம் செலுத்த வேண்டும். – மத்திய நிலத்தடி நீர் ஆணையம் (CGWA) அறிவிப்பு!,’’ என்றும், பதிவில் பகிரப்பட்டுள்ள நியூஸ் கார்டில் எழுதப்பட்டுள்ளது.

இந்த பதிவை 13,000க்கும் அதிகமானோர் பகிர்ந்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட பதிவை படித்ததும் , இது உண்மைதானா என்ற கேள்வி எழுந்தது. அப்போது, அதே பதிவில், அதனை எழுதிய நபரே, கமெண்ட் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்த கமெண்டில், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் அறிவிக்கையின் நகல் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

01.03.2019 தேதியிடப்பட்ட அந்த அறிவிக்கையில், ‘தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு விவரம் O.A.No: 176/2015ஐ வழிமொழியும் வகையில், நிலத்தடி நீர் குறைவாக உள்ள பகுதிகளில் செயல்படும் குடியிருப்புகள், தொழிற்சாலைகள் என அனைத்திற்கும், நிலத்தடி நீர் பயன்பாடு தொடர்பான கட்டுப்பாடு விதிக்கப்படும். அவர்கள், மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் இருந்து, தடையில்லா சான்று வாங்கியபிறகே, ஆழ்துளை கிணறு/போர்வெல் வழியாக, நீரை எடுத்து பயன்படுத்த முடியும். இது நிலத்தடி நீர் அதிகம் உள்ள பகுதிகளுக்கும் பொருந்தும் என்றாலும், இப்பகுதிகளில் குடிநீர் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு எடுக்கப்படும் போர்வெல் நீருக்கு கட்டுப்பாடு எதுவும் தற்போதைக்கு இல்லை,’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிவிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதில், எந்த இடத்திலும், நிலத்தடி நீருக்கு கட்டணம் விதிக்கப்படும் என கூறப்படவில்லை. எனினும், இது அதிகாரப்பூர்வ அறிவிக்கையாக இருப்பதால், இதன்பேரில், கூகுள் சென்று, நிலத்தடி நீருக்கு கட்டணம் எதுவும் விதிக்கப்பட்டதா என்று தேடிப் பார்த்தோம்.

அதில், நிறைய ஊடகங்களில் இதுபற்றி செய்தி வெளியிடப்பட்டதும், இது உண்மையாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்தன.

இதுபற்றிய செய்திகள், கடந்த 2018ம் ஆண்டு முதலே வெளிவந்திருந்தன. இதுபற்றி தினகரன் இணையதளம் வெளியிட்ட விரிவான செய்தியை இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.

இதையடுத்து, Water Conservation Fee என்று ஆங்கிலத்தில் இதையே மீண்டும் கூகுளில் தேடிப்பார்த்தோம். அப்போது, மத்திய நீர்வளத்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின் நகல் கிடைத்தது. பிப்ரவரி, 7, 2019 தேதியிட்ட அந்த நகலில், நிலத்தடி நீர் பயன்பாட்டிற்கு கட்டணம் விதிக்க தீர்மானித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஜூன் 1, 2019 முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருவதாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

இதேபோல, எவ்வாறு நீர் பாதுகாப்புக் கட்டணம் விதிக்கப்படும் என்பது பற்றி மத்திய நீர்வளத்துறை வெளியிட்ட மற்றொரு விரிவான செய்தி அறிவிக்கையும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இதில், எந்தெந்த பகுதிக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்பன உள்ளிட்ட விவரங்களும் தரப்பட்டுள்ளன.

இதுதவிர, DownToEarth இணையதளம் வெளியிட்ட விரிவான செய்தியை படிக்க, இங்கே கிளிக் செய்யுங்கள்.

மேற்கண்ட ஆதாரங்களின்படி, மத்திய அரசு, 2019, ஜூன் 1ம் தேதி முதல், நிலத்தடி நீரை பயன்படுத்துவது தொடர்பான புதிய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாகவும், பயன்பாட்டின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதும் உண்மைதான் என உறுதியாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மைதான் என உறுதி செய்யப்படுகிறது. இதில் வதந்தி எதுவும் பரப்பப்படவில்லை எனவும் ஆதாரங்களின்படி, தெரியவந்துள்ளது.

Avatar

Title:வீட்டு உபயோகத்திற்கு போர்வெல் நீர் பயன்படுத்தினால் கட்டணம்: ஃபேஸ்புக் செய்தி

Fact Check By: Parthiban S 

Result: True