மேற்கு வங்கத்தில் பெண்களை தாக்கிய பாஜக தொண்டர்கள்; வைரல் வீடியோவால் சர்ச்சை

அரசியல் சமூக வலைதளம்

‘’மேற்கு வங்கத்தில், பாஜக.,வுக்கு ஓட்டுப் போட முடியாது என கூறிய பெண்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய பாஜக காவி பயங்கரவாதிகள்,’’ என்ற பேரில் ஒரு வைரல் வீடியோவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இந்த பதிவு, இதுவரை 15,000 பேரால் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இன்னமும் வைரலாகி வருகிறது. அதிக வன்முறை காட்சிகள் கொண்ட இந்த வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வுசெய்ய தீர்மானித்தோம்.

வதந்தியின் விவரம்:

மேற்க்கு வங்கம் #கொல்கத்தாவில் #பிஜேபிக்கு ஓட்டு போட முடியாது என கூறிய #பெண்கள் மீது #கொடூர தாக்குதல் நடத்திய #பாஜக காவிபயங்கரவாதிகள்.

குறிப்பிட்ட வீடியோவை ஃபேஸ்புக்கில் இருந்து Embed செய்ய முடியாததால், அதுபற்றிய அசல் யூடியூப் வீடியோவை, டைம்ஸ் நவ் சேனலின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து எடுத்து இங்கே இணைத்துள்ளோம்.

Archive Link

இந்த வீடியோவில் ஒரு பெண் உள்ளிட்ட சிலரை, கும்பல் ஒன்று கடுமையாக தாக்குகிறது. அது மட்டுமின்றி, தாக்கப்படும் பெண், தாக்கும் நபர்கள் என அனைவரது கையிலும், பாஜக கொடி உள்ளது. போலீசார் சம்பவ இடத்தில் இருந்தாலும், அவர்களின் முயற்சிகள், யாரையும் காப்பாற்றுவதில் பலன் அளிக்கவில்லை.

உண்மை அறிவோம்:
உணர்ச்சிவசப்பட்டு, மேற்கண்ட வீடியோவை பார்க்காமல், சற்று கூர்ந்து கவனித்தால், இந்த வீடியோவிலேயே, அடிவாங்குவது பாஜக தொண்டர்கள் என்றும், தாக்கும் நபர்கள், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது புரிகிறது. ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

எடுத்த எடுப்பிலேயே, தாக்கப்படும் பெண்தான், பாஜக.,வைச் சேர்ந்தவர் என்றும், தாக்கும் நபர்கள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் என்றும் தெளிவாக தெரியவருகிறது. இருந்தாலும், கூடுதல் விவரத்திற்காக, இந்த வீடியோவின் ஒரு ஃபிரேமை எடுத்து, #Yandex இணையதளம் மூலமாக, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்து பார்த்தோம்.

அப்போது, இது உண்மையான வீடியோ காட்சிதான் என்பது உறுதியானது. அது தவிர, இதுதொடர்பான, கூடுதல் செய்தி ஆதாரங்களும் கிடைத்தன. அவற்றை கிளிக் செய்து பார்த்தபோது, இந்த வீடியோ தொடர்பான முழு விவரமும் தெரியவந்தது. ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

இதன்படி, மேற்கு வங்கம் மாநிலம், நார்த் 24 பர்கனாஸ் மாவட்டம், பாராசத் நகரின் பிர்கச்சா என்ற இடத்தில் பாஜக.,வினர் கடந்த 2018, செப்டம்பர் 26ம் தேதி பந்த் ஒன்றை நடத்தியுள்ளனர். இதன்போது, பாஜக.,வினருக்கும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. குறிப்பாக, முழு அடைப்பை வாபஸ் பெறும்படி மிரட்டிய திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர், பாஜகவினர் கடுமையாக தாக்கியுள்ளனர். அதில், ஒரு பெண்ணை, சகட்டுமேனிக்கு அடித்து, காயப்படுத்தியும் உள்ளனர். இந்த செய்தியை விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுபற்றிய ட்விட்டர் பதிவு ஒன்றின் விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தகவலின் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல், இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ள அந்த நபரின் முழு விவரத்தை தேடி பார்த்தோம். அவர் இஸ்லாமிய ஆதரவாளர் என்பதுடன், தீவிர பாஜக எதிர்ப்பாளர் என்பதும் அவரது பதிவுகளில் இருந்து தெரியவந்தது.

நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, தெரியவந்த உண்மையின் விவரம்,
1) இந்த வீடியோ கடந்த 2018, செப்டம்பர் 26ல் எடுக்கப்பட்டதாகும்.
2) இதில், பாஜக.,வினர் யாரையும் தாக்கவில்லை. மாறாக, பெண் உள்பட பாஜக., தொண்டர்களை, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர்தான் சராமரியாக தாக்குகின்றனர்.
3) இதற்கும், தற்போதைய நாடாளுமன்ற தேர்தலுக்கும் தொடர்பில்லை.
4) சம்பந்தப்பட்ட செய்தி வீடியோவிலேயே, தாக்குவது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர்தான் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
5) வீடியோவை முழுமையாக பார்க்காமல், உடனே பாஜக எதிர்ப்பு மனநிலையில் தவறான பதிவை பகிர்ந்துள்ளனர்.

முடிவு:

குறிப்பிட்ட வீடியோ உண்மைதான். ஆனால், இங்கே  அந்த பெண் உள்பட அடிவாங்குவது அனைவருமே பாஜக.,வினர். அடிப்பவர்கள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆவர். இதை அப்படியே தலைகீழாக சித்தரித்து, பாஜக.,வினர் மீது பழிபோடும் வகையில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விசயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  

Avatar

Title:மேற்கு வங்கத்தில் பெண்களை தாக்கிய பாஜக தொண்டர்கள்; வைரல் வீடியோவால் சர்ச்சை

Fact Check By: Parthiban S 

Result: False