மோடி வருகைக்காக அடைத்து வைக்கப்பட்ட வாரணாசி பட்டியலின மக்கள்!

அரசியல் | Politics சமூக வலைதளம்

‘’பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியில், பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் பட்டியலின மக்கள் அடைத்துவைக்கப்பட்டனர்,‘’  என்ற செய்தியை புதிய தலைமுறை இணையதளத்தில் பார்க்க நேரிட்டது. இந்த செய்தி, புதிய தலைமுறையின் ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது. இதனை, உண்மை என நம்பி, 2,500 பேர் லைக் இட்டுள்ளனர், 1,600 பேர் ஷேர் செய்தும் உள்ளனர். எனினும், இந்த செய்தியின் நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் எழுந்தது. இதன் அடிப்படையில், விரிவான ஆய்வு செய்து அதன் விவரங்களை இங்கே வழங்கியுள்ளோம்.

வதந்தியின் விவரம்:
மார்ச்  9ம் தேதி வெளியிடப்பட்ட இந்த செய்தியில்,
‘’பிரதமர் மோடியின் வருகையின்போது பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பகுதி பட்டியலின மக்கள் அடைத்து வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.  
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதிக்கரையில் இருந்து காசி விசுவநாதர் ஆலயத்துக்கு எளிதாகச் செல்லும் வகையில் பிரமாண்ட சாலைக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தச் சாலையானது 50 அடி அகலத்தில் ரூ.600 கோடி செலவில் பிரமாண்டமாக அமைக்கப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, மகளிர் தின விழாவிலும் நேற்று கலந்துகொண்டார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகையின்போது, பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பகுதியில் வசிக்கும் 40க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்ப மக்களை வீடுகளில் வைத்து, காவல்துறையினர் அடைத்து வைத்ததாகப் புகார் எழுந்தது. கடந்த சில நாட்களுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வந்ததாகவும், சாலையில் சுதந்திரமாக நடமாடக்கூட முடியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பிரம்மாண்ட சாலை அமைப்பதற்காக, அங்குள்ள  மக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனை அப்பகுதி மக்கள் எதிர்த்து வருவதாகவும், கூறப்படுகிறது. இதன்பேரில், அவர்கள் மோடியின் வருகையை ஒட்டி அடைத்து வைக்கப்பட்டனர். இதுகுறித்து விரிவான பதிவை வீடியோ ஆதாரத்துடன் நேஷனல் ஹெரால்டு கட்டுரை வெளியிட்டுள்ளது,’’ என்று கூறப்பட்டுள்ளது.


செய்தியை முழுமையாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Archive Link

இதே செய்தியை தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் புதிய தலைமுறை ஊடகம் பகிர்ந்துள்ளது. அதன் விவரம் மற்றும் பதிவு செய்யப்பட்ட இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

Archive Link

உண்மை அறிவோம்:

இந்தியாவில் இது நாடாளுமன்ற தேர்தல் நேரமாகும். இதுபோன்ற காலக்கட்டத்தில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் தொடங்கி, மாநில கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் மட்டுமின்றி, ஊடகத்தினரும் பரபரப்பிற்காக, ஏதேனும் ஒரு செய்தியை பகிர்வது வழக்கமாகும். இது தவிர, பிரதமர் நரேந்திர மோடி பற்றி நாளுக்கு நாள் புதுப்புது வதந்திகள் வெளியாவதும் வாடிக்கையாக உள்ளது. அதிலும் குறிப்பாக, வாரணாசி நாடாளுமன்ற தொகுதி, பிரதமர் மோடியின் சொந்த தொகுதியாகும். இதன் அடிப்படையில்தான், இந்த செய்தி பரபரப்பிற்காக வெளியிடப்பட்டுள்ளது.  

மேலும், புதிய தலைமுறை வெளியிட்ட செய்தியில், தன் மீது தப்பில்லை என்று காட்டிக் கொள்ளும் முயற்சியாக, நேஷனல் ஹெரால்டு இணையதளத்தை மேற்கோள் காட்டியுள்ளனர். இதன்படி, நேஷனல் ஹெரால்டு இணையதளத்தில் வெளியான செய்தியில், ‘’மார்ச் 8ம் தேதியன்று, கங்கை நதிக்கரையில் இருந்து காசி விசுவநாதர் ஆலயத்துக்கு எளிதாகச் செல்லும் வகையில் பிரமாண்ட சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடி கலந்துகொண்ட இந்த விழாவை ஒட்டி, வாரணாசியில் தலித் மக்கள் அதிகம் வசிக்கும் சிகே-10/35 பகுதியில் அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டதாகவும், அவர்கள் வீட்டிலேயே அடைத்து வைக்ப்பட்டார்கள்,’’ எனவும் கூறப்பட்டுள்ளது.  

நேஷனல் ஹெரால்டு வெளியிட்ட செய்தியின் முழு விவரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பதிவும் இங்கே பகிரப்பட்டுள்ளது.

Archive Link

இதையடுத்து, நேஷனல் ஹெரால்டு வெளியிட்டுள்ள செய்தி உண்மைதானா என்று, வாரணாசியின் சீனியர் காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) சுரேஷ்ராவ் குல்கர்னியை ஃபோனில் தொடர்புகொள்ள முயற்சித்தோம். அதற்கு பலனும் கிடைத்தது. ஃபோனிலேயே நம்மை பற்றி அறிமுகம் செய்துகொண்டதற்கு, அவரும் அங்கீகாரம் கொடுத்து, விளக்கம் அளித்தார்.

அதில்,  ‘’தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட இந்த காலத்தில், இவ்வாறு பொதுமக்களை அடைத்து வைப்பது சாத்தியமே இல்லை. நாங்கள் யாரையும் அவ்வாறு அடைத்து வைக்கவில்லை. இது ஒரு தவறான செய்தியாகும்,’’ என்று அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

வாரணாசி எஸ்எஸ்பி சுரேஷ்ராவ்.ஏ.குல்கர்னி

எஸ்எஸ்பி சுரேஷ்ராவ் குல்கர்னியின் விளக்கத்தை, சட்டரீதியான காரணங்களுக்காக, ஆடியோ பதிவாக, நாங்கள் ரெக்கார்டு செய்துவைத்துள்ளோம்.   

இதுதவிர, வாரணாசி அடிக்கல் நாட்டும் விழா பற்றியும், அந்த திட்டம் பற்றியும் விரிவான பதிவு ஒன்றை பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன் இணைப்பையும் இங்கே கொடுத்துள்ளோம்.

Archive Link

இதுவரை செய்த ஆய்வுகளின் அடிப்படையில், வாரணாசியில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்றும், பொய் பிரசாரத்திற்காக, இவ்வாறு செய்தி வெளியிட்டிருக்கலாம் என்றும் உறுதியாகிறது. பிரதமர் மோடியின் சொந்த தொகுதி என்பதால், வாரணாசி என்ற தலைப்பில் செய்தி வெளியானதும், அதை பலரும் உடனடியாக, பகிர்ந்துள்ளனர். இதுவே, இந்த செய்தியின் பரபரப்பிற்கு மூல காரணமாகும்.

முடிவு:

மேற்கண்ட ஆய்வுகளின்படி, இப்படி ஒரு சம்பவம் வாரணாசியில் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விசயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  

Avatar

Title:மோடி வருகைக்காக அடைத்து வைக்கப்பட்ட வாரணாசி பட்டியலின மக்கள்!

Fact Check By: Parthiban S 

Result: False