
தருமபுரி எம்.பி டாக்டர் செந்தில்குமார் தருமபுரி மாவட்டத்தில் உள்ளவர்கள் அடமானம் வைத்திருக்கும் நகைகளை எல்லாம் மீட்டுத் தரப் போகிறார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
தருமபுரி மாவட்டத்தில் நகை அடகு வைத்தோர் வரும் 30ந் தேதிக்குள் ரசீது எடுத்து சென்று நாடாளுமன்ற உறுப்பினர் DNVசெந்தில்குமார் இடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்!
தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் டாக்டர் செந்தில் குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தேர்தலில் நிற்கும்போது வெளியிட்ட துண்டு பிரசுரத்தை வெளியிட்டுள்ளனர். அதில், நீட் தேர்வு ரத்து, விவசாய, கல்விக் கடன் முற்றிலும் தள்ளுபடி என்று தி.மு.க தேர்தல் அறிக்கையை டாக்டர் செந்தில் குமார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை, பிரபாகரன் தருமபுரி என்பவர் 2019 மே 25ம் தேதி வெளியிட்டுள்ளார். நிலைத்தகவலில், “தருமபுரி மாவட்டத்தில் நகை அடகு வைத்தோர் வரும் 30ந் தேதிக்குள் ரசீது எடுத்து சென்று நாடாளுமன்ற உறுப்பினர் DNVசெந்தில்குமார் இடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது உண்மை என்று கருதி, பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தி.மு.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருந்தது. அதில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும், விவசாய, கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 நாடாளுமன்றத் தொகுதிகளில், 37ஐ தி.மு.க கூட்டணி கைப்பற்றியது. ஆனால், மத்தியில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால், கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆகும் என்று “எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்ய ஆரம்பித்தன.
“அ.தி.மு.க கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்காதது மக்களுக்கான தோல்வி… வாக்களித்திருந்தால் நாங்கள் கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்போம். தி.மு.க தற்போது அதிகாரம் இல்லாத சூழ்நிலையில் எதை சாதிக்க முடியும்?” என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு தி.மு.க அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் கட்டுரை வெளியாகி இருந்தது. அதில், “மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. – பா.ம.க. கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றிருந்தால் மத்தியில் மீண்டும் அமைய உள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசின் துணையோடு தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்போம் என்று கூறி சாதுர்யமாக வழக்கம்போல நழுவுகிறார் மருத்துவர் அய்யா” என்று காட்டமாக விமர்சித்திருந்தது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த நிலையில், பிரபாகரன் தருமபுரி என்பவர் “தருமபுரி மாவட்டத்தில் நகை அடகு வைத்தோர் வரும் 30ந் தேதிக்குள் ரசீது எடுத்து சென்று நாடாளுமன்ற உறுப்பினர் DNVசெந்தில்குமார் இடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்!” என்று குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் தருமபுரி-யின் பின்னணியை ஆய்வு செய்தோம்.

தன்னை பா.ம.க-வைச் சார்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். பதிவுகளும் அன்புமணி, பா.ம.க சார்ந்ததாகவே இருந்தது. பா.ம.க போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் குறிப்பாக அன்புமணி ராமதாஸ் தோல்வி அடைந்த விரக்தியின் காரணமாக இவர் இவ்வாறு பதிவிட்டு வருவது புரிந்தது.
வாக்குறுதிகள் நிறைவேற்றுவது தொடர்பாக விளக்கம் அளிக்கத் தயார் என்று டாக்டர் செந்தில் குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனாலும், அதையும் எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வம்பிழுக்கும் நோக்கத்துடன் தவறான பதிவுகளை வெளியிட்டுவருவது தெரிந்தது.
இது தொடர்பாக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் குமாரை தொடர்புகொண்டு பேசினோம். “தோல்வியின் விரக்தியில் அரசியல் ரீதியாக அவர்களுக்குத் தெரிந்ததைச் செய்கிறார்கள். இதை நான் பொருட்படுத்தவில்லை. ஜனநாயகத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையில் தேர்தல் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம்… ஆனால் மத்தியிலும் மாநிலத்திலும் எங்களால் ஆட்சிக்கு வர முடியாத சூழல். விரைவில் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நிகழலாம். மீண்டும் வெற்றிபெற்று எங்கள் ஆட்சி அமையும். அப்போது இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்றார்.
நாம் மேற்கொண்ட ஆய்வில், “தோல்வி அடைந்தவர்கள் திட்டமிட்டு செய்யும் அரசியல் என்று டாக்டர் செந்தில் குமார் விளக்கம் அளித்துள்ளார். மத்தியில் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றாலும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்ற முயற்சி எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேற்கண்ட பதிவை வெளியிட்டவர், தர்மபுரியில் தோல்வி அடைந்த பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணியின் விசுவாசி என்பது உறுதியாகி உள்ளது.
இந்த ஆதாரங்கள் மற்றும் பதிவிட்டவரின் பின்னணி அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு விஷமத்தனமானது, தவறானது என்று நிரூபிக்கப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அடமானத்தில் இருக்கும் நகைகளை மீட்டுத் தருகிறார் தருமபுரி எம்.பி! – ஃபேஸ்புக் தகவல் உண்மையா?
Fact Check By: Praveen KumarResult: False
