தெலுங்கானாவை தெறிக்கவிட்ட தமிழிசை! – பரபரப்பை ஏற்படுத்திய ஏஷியாநெட் நியூஸ்

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசையின் தெறிக்கவிடும் செயல்பாடுகள் காரணமாக தெலங்கானா மாநிலத்துக்கே நுரைதள்ளியதாக ஏஷியாநெட் தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Tamilisai 2.png
Facebook LinkArchived Link 1Article LinkArchived Link 2

வெற்றிகரமான தோல்வி… முதலமைச்சரான எதிர்க்கட்சி தலைவர், தெறிக்கவிடும் தமிழிசை என்று ஏஷியாநெட் தமிழ் வெளியிட்ட செய்தியை 2019 செப்டம்பர் 16ம் தேதி அன்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனை அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் வரவேற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “வெற்றிகரமான தோல்வி..! முதலமைச்சரான எதிரக்கட்சி தலைவர்..! தெறிக்கவிடும் தமிழிசை, நுரை தள்ளும் தெலங்கானா..!” என்று குறிப்பிட்டுள்ளனர். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜனை தெலங்கானா மாநில ஆளுநராக சமீபத்தில் மத்திய அரசு நியமித்தது. இதனால், பா.ஜ.க-வில் இருந்து விலகி, ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றுக்கொண்டார். புதுச்சேரி ஆளுநர் போல தமிழிசையும் அதிரடி காட்டுவார் என்று சமூக ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டு வந்தது. 

தமிழிசை தெலங்கானா ஆளுநராகப் பொறுப்பேற்ற நிலையில் அவரது நியமனத்தை விமர்சித்து  முதலமைச்சரின் தலைமை ஊடகத் தொடர்பு அதிகாரி வனம் ஜாவ்லா நரசிம்மராவ் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். ஆளுநர் நியமனம் தொடர்பாக சர்காரியா கமிஷன் அளித்திருந்த பரிந்துரைகள் சிலவற்றை மேற்கோள் காட்டி விமர்சித்திருந்தார். இதனால், தொடக்கமே பிரச்னையாகும் நிலை ஏற்பட்டது.  

Article LinkArchived Link

இந்த நிலையில், “வெற்றிகரமான தோல்வி, முதலமைச்சரான எதிர்க்கட்சித் தலைவர், தெறிக்கவிடும் தமிழிசை, நுரை தள்ளும் தெலங்கானா” முதல்வர் சந்திரசேகர ராவ் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளனர். இதனால், பதவிக்கு வந்த உடனேயே அதிரடிகாட்ட ஆரம்பித்துவிட்டாரா, முதல்வருக்கும் ஆளுநருக்கும் பிரச்னை வெடித்ததா என்று பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே, புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடிக்கும் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் மோதல் நீடித்து வருகிறது. அதேபோல் தற்போது தெங்கானாவிலும் மோதலா என்ற சந்தேகம் எழுந்தது. 

Tamilisai 3.png

செய்தியை படித்துப் பார்த்தோம். சம்பந்தமே இல்லாமல் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்த ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் என்று இருந்தது. செய்தியை மாற்றி வெளியிட்டுவிட்டார்களா என்று குழப்பம்தான் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம், மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட உள்ளனர் என்று ஒரு செய்தியை சொல்லியிருந்தார்கள். தொடர்ந்து தே.மு.தி.க பற்றிய செய்திகள் வந்தன. ஒன்றுக்கு இரண்டு முறை படித்த பிறகுதான், ஒரு குறிப்பிட்ட செய்தியை சொல்லி அது பற்றி அவர்கள் கமெண்ட் செய்திருக்கிறார்கள் என்று புரிந்தது.

தமிழிசை பற்றிய செய்தியை தேடினோம். அதை கடைசியாக வைத்திருந்தனர். “தமிழிசையை கவர்னராய் நியமித்ததை வம்புக்கிழுத்து தெலுங்கானா மாநில அரசு அதிகாரி கட்டுரை எழுதிய விவகாரத்தில், கவர்னர் தமிழிசையிடம் முதல்வர் சந்திரசேகர ராவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: பா.ஜ.க” செய்தி என்று குறிப்பிட்டுள்ளனர்.

Tamilisai 4.png

அதற்கு இவர்கள், “அண்ணே தயவு செஞ்சு மன்னிப்பை கேட்டுடுங்க. இல்லேன்னா அந்தம்மா உங்க கட்சி, தேர்தல்ல வென்று ஆட்சி அமைச்சதை பத்தி வெற்றிகரமான தோல்வி! ஆளுங்கட்சியான எதிர்க்கட்சி! முதல்வரான எதிர்க்கட்சி தலைவர்! தெலுங்கானாவான ஆந்திரா!ன்னு சொல்லி டயலாக் பேச ஆரம்பிச்சா நாக்கு, மூக்குல நுரை தள்ளிடும் ஜாக்கிரதை” என்று கமெண்ட் செய்துள்ளனர். இந்த கமெண்ட்டை செய்தியின் தலைப்பாக வைத்து, தமிழிசை அதிரடி காட்டியது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர்.

நக்கல், நய்யாண்டி செய்வதாக இருந்தால் அது பற்றி குறிப்பிட்டு பதிவிட்டிருக்கலாம். ஆனால், செய்தியில் எந்த ஒரு இடத்திலும் இந்த செய்தி கிண்டலுக்கானது என்று குறிப்பிடவில்லை. உண்மை செய்தியைப் போலவே இதை பகிர்ந்துள்ளனர். இதனால், பதவியேற்ற சில நாட்களிலேயே ஆளுநர் – முதல்வர் இடையே பிரச்னை வெடித்துவிட்டது என்ற எண்ணத்தையே படிப்பவர்கள் மனதில் உருவாக்கியுள்ளனர். உண்மை தெரியாமல், தலைப்பை மட்டும் வைத்து பலரும் தமிழிசை அதிரடி என்று பரப்பி வருகின்றனர். 

நம்முடைய ஆய்வில், பரபரப்புக்காகவும் தலைப்பைப் பார்த்து செய்தியைப் படிக்க பலரும் வர வேண்டும் என்பதற்காகவும் விஷமத்தனமாக, தவறான தலைப்பு வைத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்றுள்ள செய்தியின் தலைப்பு தவறாக வைத்துள்ளனர் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தெலுங்கானாவை தெறிக்கவிட்ட தமிழிசை! – பரபரப்பை ஏற்படுத்திய ஏஷியாநெட் நியூஸ்

Fact Check By: Chendur Pandian 

Result: False