
தென் ஆப்பிரிக்காவில் நான்கு கண்கள், நான்கு கொம்புகளுடன் கூடிய அரிய வகை ஆடு இனம் உள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
வித்தியாசமான ஆட்டுக்குட்டி பொம்மை போன்ற படங்கள் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தென் ஆப்பிரிக்காவின் காட்டுப் பகுதியில் அரிய வகை ஆடு இனம் 4 கண்கள் மற்றும் 4 கொம்புகளுடன்.!!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, M.T. Juvairya Kayal என்பவர் 2020 ஜூன் 27ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நான்கு கண்கள், நான்கு கொம்புடன் ஆடு இருந்திருந்தால் அது பற்றி அறிவியல் உலகம் எப்போதோ அது பற்றி வகைப்படுத்தியிருக்கும். அதற்கு அறிவியல் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும். உலகம் முழுவதும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஆட்டைப் பார்க்கும்போது அசல் ஆடு போலத் தெரியவில்லை. பொம்மை போல உள்ளது. யாரோ விளையாட்டாக வெளியிட்டதை உண்மை என்று நம்பி பகிர்ந்து வருவது போல உள்ளது. இது என்ன பொம்மை என்று தேடினோம்.
தெற்கு சூடானில் கண்டறியப்பட்ட புதிய வகை ஆடு என்று சிலர் இந்த படத்தை பகிர்ந்து வந்திருப்பதைக் காண முடிந்தது. தெற்கு சூடான் என்பது தென் ஆப்பிரிக்காவாக மாறியிருக்கலாம் என்று தெரிகிறது. அதில் தெற்கு சூடான் வனப் பகுதியில் கண்டறியப்பட்ட புதிய உயிரினம் இது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.
தொடர்ந்து தேடியபோது இது ஸ்பெயின் புராணக் கதையில் வரும் குட்டி அக்ரிபெல்ட்ஸ் என்று குறிப்பிட்டு பல பதிவுகள் வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. இந்த பொம்மை பற்றி ஒருவர் விவரித்து யூடியூப் வீடியோ வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
இந்த பொம்மை ஆன்லைனில் விற்பனைக்கு உள்ளதாக ஒரு தகவல் கிடைத்தது. குறிப்பிட்ட ஆன்லைன் ஷாப்பிங் தளத்துக்கு சென்று தேடியபோது தற்போது ஸ்டாக் இல்லை என்று அந்த தளத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
தொடர்ந்து தேடியபோது fuegofatuoart என்ற இன்ஸ்டாகிராம் ஐடி கொண்ட நபர் ஸ்பெயினின் புராணக் கதையில் உள்ள அந்த நான்கு கண் ஆடு பொம்மையை உருவாக்கியதாக தெரிந்தது.
இதுதொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “குட்டி அக்ரிபெல்ட்ஸை அறிமுகம் செய்கிறேன். ஸ்பெயினின் புராணக் கதைகளில் வரும் குட்டி அக்ரிபெல்ட்ஸை இயற்கை மற்றும் விலங்குகளைக் காக்கும் விலங்காக கருதப்பட்டது. அதன்பிறகு சூனியம், கெட்ட ஆவியோடு தொடர்புடையதாக மாற்றப்பட்டது. கிறிஸ்தவ மதம் இதைக் கெட்ட விலங்காக சாத்தானுடன் தொடர்புடையதாக பார்க்கிறது. எது எப்படியோ, இந்த ஆண்டின் மிகவும் பயமுறுத்தும் விலங்காக இது இருக்கிறது இல்லையா. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?” என்ற குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலம், பொம்மையை வைத்து தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட வித்தியாசமான உயிரினம் என்று வதந்தி பரப்பப்பட்டு வந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தென் ஆப்பிரிக்காவில் நான்கு கண், நான்கு கொம்புகளுடன் அரிய வகை ஆடு உள்ளதா?
Fact Check By: Chendur PandianResult: False
